Published:Updated:

சண்டிவீரன் - படம் எப்படி?

 சண்டிவீரன் - படம் எப்படி?
சண்டிவீரன் - படம் எப்படி?

சண்டிவீரன் - படம் எப்படி?

  பக்கத்து ஊருக்குத் தண்ணீர் தரமாட்டோம் என்று வீம்பு பிடிக்கும் ஒரு கிராமம், அந்தக் கிராமத்திலேயே இருக்கும் நாயகன் அதை எதிர்க்கிறார் என்கிற கதையை வைத்துக்கொண்டு, தஞ்சை வட்டார வாழ்வியலையும், இன்றைக்கு அவசியத் தேவையான ஒரு சமூகக்கருத்தையும் சொல்லியிருக்கும் படம்.

அதர்வா, தஞ்சைவட்டார இளைஞர் வேடத்துக்கு மிகச்சரியாகப் பொருந்தியிருக்கிறார். தஞ்சை வட்டாரங்களில் பெரும்பாலான இளைஞர்கள், வேலைக்காகச் சிங்கப்பூர் சென்று, அங்கு கொடுக்கப்பட்ட காலத்தைவிட அதிகக்காலம் தங்கி காவல்துறையிடம் பிடிபட்டு ரோத்தா (பின்புறத்தில் கசையடி) வாங்கக்கொண்டு திரும்பிவருவது வழக்கமாம். அதுபோல் சிங்கப்பூரில் அதர்வா அடிவாங்குவதும், வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று செட்டிங்பாஸ்போர்ட்டில் வந்ததுபோலக் காட்டிக்கொள்வதும் சுவை.

 சண்டிவீரன் - படம் எப்படி?

நாயகியாக நடித்திருக்கும் கயல்ஆனந்தி, கண்களாலேயே பேசிக் கவர்கிறார். அலட்சியப்புன்னகையுடன் அதர்வாவைக் கடக்கிற நேரத்திலும், நான் முந்திக்கொள்ளப்போகிறேன் என்று அதர்வா சொன்னதும் அவரைக் கட்டியணைப்பதும், தன் பேச்சை மீறியும் ஊர்ச்சிக்கலுக்காக அதர்வா ஓடுவதை இயலாமையுடன் பார்க்கிற பார்வையிலும் எல்லோரையும் ஈர்க்கிறார் ஆனந்தி. நல்ல எதிர்காலம் இருக்கு.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் லால், தன் நடிப்பால் அவர் கெட்டவர் என்பதையும் மீறி ரசிக்கவைக்கிறார். நான் குளத்தைத் தரமாட்டேன் என்று அவர் அடம்பிடிக்கிறார் கடைசியில் அவரை மீறி குளம் கைமாறும் காட்சி நன்றாக இருக்கிறது. ஊர்த்தலைவராக வருகிறவர், லாலின் மனைவியாக நடித்திருக்கிறவர், அதர்வாவின் அம்மா ஆகிய எல்லோருமே தங்கள் பங்கை மிகச்சரியாகச் செய்து கவனம் பெறுகிறார்கள்.

அருணகிரியின் இசையில் அலுங்குற குலுங்கிற பாடல் ஈர்க்கிறது. தாய்ப்பாலும் தண்ணீருந்தான் விலையில்லாம கிடைச்சுது என்று சின்னப்பொண்ணு பாடும்போதும் அதற்கான காட்சிகளிலும் நம் சமுகஅவலங்களைக் காட்சிப்படுத்தி உறையவைத்திருக்கிறார் இயக்குநர்.

வாடியபயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்கள் இருந்த இந்தச்சமூகத்தில்தான் பக்கத்துகிராமத்துக்குத் தண்ணீர் தரமாட்டோம் என்று வீம்புபிடிததவர்களும் வாழ்கிறார்கள் என்கிற உண்மையை மறைக்காமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதைச் சமன் செய்யும் விதமாக நாயகன் அதர்வா அவருடைய அப்பா போஸ்வெங்கட் ஆகியோருடைய பாத்திரங்கள் அமைந்திருக்கின்றன.

 சண்டிவீரன் - படம் எப்படி?

முதல்பாதியைக் கலகலப்பாகக் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில் சலிப்பூட்டுகிறது. இரண்டாம்பாதியில் வேகம் பிடிக்கும் திரைக்கதை கடைசிவரை வேகத்தைத் தக்கவைக்கிறது. சண்டிவீரன் என்று பெயர் இருப்பதால், கெட்டவர்களை அடித்துத் துவைத்து எல்லாவற்றையும் சரிசெய்வார் என்று பார்த்தால், அப்படிஇல்லை, படத்தில் நாயகனின் வீரத்தைக் காட்டி எதையும் மாற்றவில்லை, அவருடைய விவேகம்தான் மாற்றத்துக்குப் பயன்படுகிறது. காரசாரமாக இருக்கவேண்டிய மாற்றம் வசனங்களில் மாறுகிறது. ஊர்க்காரர் ஒருவர்கூட இறந்துவிடக்கூடாது என்பதற்காகத் தன் உயிரை இழக்கத்துணிவதே வீரம் என்றாலும் அது அவ்வளவு அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.

ஏதோ படமெடுத்தோம் என்று இல்லாமல் தமிழ்ச்சமுகத்தின் ஒரு பகுதிமக்கள் வாழ்க்கையை அதன் நிறைகுறைகளோடு படம் பிடித்துக்காட்டியதோடு இன்று உலகமே எதிர்கொள்ளவிருக்கும் ஓர் ஆபத்தைச் சுட்டிக்காட்டி ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சற்குணத்தைப் பாராட்டலாம்.

அடுத்த கட்டுரைக்கு