
காசி தியேட்டரில் சிம்பு... வாலு திரைப்படம் வெளியானது!
சென்னை: நடிகர் சிம்பு நடித்துள்ள 'வாலு' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 'வாலு' திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் சிம்புவின் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக சிம்புவின் திரைப்படம் எதுவும் வெளியாகாத காரணத்தால், அவரது ரசிகர்கள் மத்தியில் 'வாலு' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், காசி திரையரங்கில் 'வாலு' படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க இன்று(வெள்ளி) தியேட்டருக்கு வந்தார் நடிகர் சிம்பு. அவரை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இன்று காலை 4 மணிக்கும், 8 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் காசி தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரசிகர்களும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி வந்திருந்தனர். ஆனால் அந்த இரு காட்சிகளும் திடீரென ரத்தாகிவிட்டன. இதனால் ஏமாற்றம் அடைந்த சிம்பு ரசிகர்களை தியேட்டர் நிர்வாகம், 10 மணிக்கு சிறப்புக் காட்சி நிச்சயம் நடக்கும் என்று அறிவித்து சமாதானப்படுத்தியது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் நாயகன் சிம்பு, உடன் நடித்த ஜெய் உள்ளிட்டோரும் தியேட்டருக்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர். சிம்பு வந்த சில நிமிடங்களிலேயே படம் தொடங்கியது. திரையில், 'இளையதளபதி விஜய்க்கு நன்றி' என்ற டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிக்க, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.