Published:Updated:

பல தேசங்களில் பல மனிதர்கள்!

திரைப்பட விழா
பிரீமியம் ஸ்டோரி
திரைப்பட விழா

கோவா சர்வதேசத் திரைப்பட விழா

பல தேசங்களில் பல மனிதர்கள்!

கோவா சர்வதேசத் திரைப்பட விழா

Published:Updated:
திரைப்பட விழா
பிரீமியம் ஸ்டோரி
திரைப்பட விழா

மீபத்தில் கோவாவில் நடந்துமுடிந்த இந்தியாவின் 52-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சில முக்கியமான படங்கள் பற்றிய அறிமுகம் இதோ...

பல தேசங்களில் பல மனிதர்கள்!

I'm Your Man

ஜெர்மானிய நாட்டின் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை; ஜெர்மனின் ஆஸ்கர் பரிந்துரை, பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த நடிகை என எப்படியும் பார்த்துவிட வேண்டிய பட்டியலில் இருக்கும் திரைப்படம் I'm Your Man. ஆல்மா ஃபைசரிடம் சோதனைக்காக டாம் என்கிற ரோபோ கொடுக்கப்படுகிறது. மனிதர்களின் குணநலன்களை இந்த ரோபோவால் பிரதிபலிக்க முடிகிறதா, இந்த ரோபோவில் இருக்கும் பிரச்னைகள் என்ன என்பவற்றை அல்மா பட்டியலிட்டுக் கொடுத்தால் அதை அந்தக் குழு சரிசெய்யும். மனிதர்களின் எல்லாப் பரிமாணங்களையும் ஒரு ரோபோவால் பதிவீடு செய்யமுடியுமா என்கிற கேள்விக்கு உணர்வுபூர்வமாகப் பதில் சொல்கிறது இத்திரைப்படம். நடிகையான மரியா, இயக்கத்திலும் தொடர்ந்து அசத்திவருகிறார். அதன் ஒரு பகுதிதான் I'm Your Man.

பல தேசங்களில் பல மனிதர்கள்!

Titane

சிறந்த சர்வதேசப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருக்கும் படம். பாடி ஹாரர் (உடல் சித்ரவதை சார்ந்த ஹாரர் சினிமா) வகை படமான இதை இயக்கியிருக்கிறார் பெண் இயக்குநரான ஜூலியா டுகவுர்நாவ் (Julia Ducournau). சிறு வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மூளையில் டைட்டானியம் ப்ளேட் பொருத்தப்படும் அலெக்ஸியா, பின்னாளில் சீரியல் கில்லராக நிம்மதியின்றி அலைகிறார். ‘Objectophilia’ எனப்படும் உயிரற்ற பொருள்களுடன் உறவுகொள்ளுதல் குறித்துப் பேசும் படம், ஒரு பேன்டஸி எமோஷனல் டிராமாவாகவும் நீள்கிறது. அடல்ட் காட்சிகள், சித்ரவதைக் காட்சிகள் போன்றவை அதிகம் இருப்பதால் நிச்சயம் இது அனைவருக்குமான படமில்லை. பதறவைக்கும் அட்டகாசமான மேக்கிங்கிற்காகவும், நாயகி அகதா ரௌசெலின் (Agathe Rousselle) நடிப்புக்காகவும் இந்தப் படத்தை ரசிக்கலாம்.

பல தேசங்களில் பல மனிதர்கள்!

Pure white

இஸ்லாமிய மார்க்கக் கோட்பாடுகளின்படி வாழும் நபர் வுரல். நல்ல தந்தை, சமூகத்தில் நல்லவர் என்கிற பெயர், எல்லோருக்கும் அறிவுரை சொல்வது என்கிற கட்டமைப்புடன் வாழும் வுரல் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு தவறு செய்கிறார். அது அவரையும், அவரைச் சுற்றியிருப்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதாக நீள்கிறது இத்திரைப்படம். இந்த உலகில் பரிசுத்தமான அப்பழுக்கற்ற புனிதம் என்று எதையெல்லாம் சொல்கிறோம் என்கிற கேள்வியை நமக்குள் எழுப்பும் திரைப்படம், நாம் யாருக்கும் தெரியாமல் செய்த தவறுகள் பற்றியும் சிந்திக்க வைக்கிறது. அதேபோல், யோக்கியர்கள் என்கிற பிம்பம் எவ்வளவு போலியானது என்பதையும் சிந்திக்க வைக்கிறது. வுரல் தன் மகனிடம் பேசும் காட்சியும், வுரல் ஒரு பிரச்னையில் குறுகிப்போய் நிற்பதை மகன் ரகசியமாய்ப் பார்க்கும் காட்சியும் யாரையும் ஒரு கணம் அசைத்துப் பார்க்கும்.

பல தேசங்களில் பல மனிதர்கள்!

Hinterland

முதலாம் உலகப்போரில் வீழ்த்தப்படும் ஆஸ்திரியாவில் மன்னராட்சி மறைந்து புதிய ஜனநாயகம் மலர்ந்திருக்கிறது. போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படும் ஆஸ்திரிய போர் வீரனான நாயகன் சக வீரர்களுடன் நாடு திரும்புகிறான். புதிய ஆஸ்திரியாவில் என்ன நடக்கிறது எனப் புரியாமல் திகைத்து நிற்கிறான். மன்னருக்கு விசுவாசமாக இருந்த தனக்கு இந்தப் புதிய ஜனநாயகத்தில் இடம் இருக்குமா என அவனுக்குத் தெரியவில்லை. இப்படியான சூழலில் சக வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். போருக்கு முன் போலீஸ் அதிகாரியாக துப்பு துலக்கிய நாயகன் இந்தக் கொலைகளுக்குப் பின்னிருப்ப வனைக் கண்டுபிடிக்கிறானா இல்லையா என்பதே `ஹிண்டர்லேண்ட்' கதை. ஆஸ்கர் வென்ற ஸ்டெஃபன் ருஸவிட்ஸ்கிதான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

பல தேசங்களில் பல மனிதர்கள்!

A Film About Couples

சினிமா இயக்குநர்களாக இணைந்தே பணியாற்றும் ஒரு கணவன் - மனைவிக்கு ஆவணப்படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு வருகிறது. பொதுவாகத் தம்பதிகளுக்குள் நிகழும் காதல், பிரச்னைகள், சண்டை சச்சரவுகளைப் படமாக்க இவர்கள் முயற்சி எடுக்க, அது இவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் வெளிக்கொண்டுவருகிறது. படத்தை எடுத்து முடித்தார்களா, இவர்கள் உறவு என்னவானது என்பதை ஒரு ‘meta’ சினிமாவாக காமெடிகளால் நிரப்பி ஜாலியாகக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்களான நடாலியா கப்ரால், ஒரியோல் எஸ்ட்ராடா. நிஜ வாழ்விலும் தம்பதியினரான இவர்களேதான் படத்தின் நாயகன், நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஒரு ஃபீல் குட், என்டர்டெயினர் இந்தப் படம்.

பல தேசங்களில் பல மனிதர்கள்!

Parallel Mothers

நாற்பது வயதைக் கடந்த ஒருவர்; பதின்ம வயதில் இருக்கும் ஒருவர். இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஒருவருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி, இன்னொருவருக்கு பயம். எப்படி இருவரும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் என்பதை ஸ்பானிஷ் இயக்குநரான பெட்ரோ அல்மாடோவர் தனக்கே உரித்தான பாணியில் இயக்கியிருக்கிறார். ஜானிஸுக்கு அதன்பின் நிகழும் சிக்கலும், பதின்ம வயது ஏனா அதை எப்படி எதிர்கொள்கிறார் என்றும் நீளும் கதை ஒரு பக்கம் த்ரில்லர் பாணியில் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், ஜானிஸின் கடந்த வாழ்க்கைக்கான தேடலும், அந்த தேசத்தின் சொல்ல மறந்த வரலாறும் காட்டப்படுகிறது. இரு பெண்களின் குடும்பம் சார்ந்த பிரச்னையாகவே இதைக் கையாண்டிருந்தால் இன்னும் சிறப்பான படமாக வந்திருக்கும்.

பல தேசங்களில் பல மனிதர்கள்!

Night Ride

சிங்கிள் ஷாட் சினிமாக்கள் பலகாலமாக எடுக்கப்பட்டு வந்தாலும், அதில் என்னென்ன சுவாரஸ்யங்களைச் சேர்க்க முடியும் எனப் பரிசோதனையில் இப்போதெல்லாம் இறங்குகிறார்கள். கடத்தல் கில்லாடியான கதாநாய கனுக்கு கடைசியாக ஒருமுறை கடத்தலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது. அதை அந்த இரவுக்குள் எப்படி நடத்தி முடிக்கிறார் என்பதுதான் கதை. சிங்கிள் ஷாட், ரியல் டைம் என 10.30க்கு ஆரம்பிக்கும் கதை 12 மணிக்கு முடிகிறது. படத்தின் பெரும்பகுதி நாயகனின் பார்வையில் தான் சொல்லப்படுகிறது. அலைபேசி வழி உரையாடலிலேயே நமக்கு அந்த டென்ஷனைக் கடத்திவிடுகிறார் இயக்குநர். ஒரு இடத்தில் படம் கட்டாகியிருக்கிறதே என்பதை அனுபவசாலிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதுதான் இந்தப் படத்தினுள் அடங்கியிருக்கும் ஸ்பாய்லர்.

பல தேசங்களில் பல மனிதர்கள்!

The Preacher

கடவுளான விர்ஜின் மேரியின் அருளால் தீராத நோய்களையும் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறாள் ஒரு எட்டு வயதுச் சிறுமி. மதத்தின் பெயரால் காசு பார்க்கும் போலி சாமியாரான நாயகன் அந்தச் சிறுமியையும், அவளின் குடும்பத்தையும் பயன்படுத்திப் புகழும் பணமும் சம்பாதிக்க முயல்கிறான். பேராசை, அந்தச் சிறுமியின் குடும்பத்தையும், நாயகனையும் என்ன செய்தது என்பதே கதை. டிட்டோ ஜரா (Tito Jara) இயக்கத்தில் ஸ்பானிஷ் மொழிப் படமாக உருவாகியிருக்கும் இதன் பலமே போலி மதவாதிகளின் பித்தலாட்டங்களைச் சமரசமின்றிக் காட்சிப்படுத்தியதுதான். ஒரு விஷயத்தை மக்கள் எப்படி ஆட்டு மந்தைபோல் நம்புகிறார்கள், குழு மனப்பான்மை, சமூகத்தின் உளவியல், மூடநம்பிக்கைகள் எனப் பல நுண்ணிய விஷயங்களையும் தொட்டுச் செல்கிறது படம்.

பல தேசங்களில் பல மனிதர்கள்!

Night Forest

பள்ளியில் படிக்கும் பால் என்ற சிறுவனின் தந்தை காணாமல் போகிறார். ஊர் மக்களைப் பொறுத்தவரை அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர். இதை மாற்ற நினைக்கும் பால், தன் பள்ளி நண்பனின் துணையுடன் தன் தந்தை கண்டடைய நினைத்த குகை ஒன்றைத் தேடிக் காட்டுக்குள் செல்கிறான். அப்படியொரு குகை உண்மையில் இருக்கிறதா, பாலின் தந்தை என்னவானார் என்பதே கதை. ஆண்ட்ரே ஹோர்மன் (Andre Hormann) மற்றும் கேத்ரின் மில்ஹன் (Katrin Milhahn) இயக்கியிருக்கும் இந்த ஜெர்மன் நாட்டுச் சிறுவர் சினிமாவில் சாகசங்களுக்கும், வாழ்க்கைப் பாடங்களுக்கும் குறைவில்லை. படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் நம்மை வேறொரு உலகுக்குக் கொண்டு செல்கின்றன. அருகிவரும் சிறுவர் சினிமா ஜானரில் ஒரு வரவேற்கத்தக்க படம் இந்த `நைட் ஃபாரஸ்ட்.'

பல தேசங்களில் பல மனிதர்கள்!

Yuni

பள்ளியிலேயே சிறந்து விளங்கும் யூனிக்கு பல்கலைக்கழகத்தில் சென்று படிக்க வேண்டும் என்கிற ஆசை துளிர்விடுகிறது. ஆனால் வீட்டிலோ, அவளுக்குத் திருமணம் நிச்சயப்படு கிறது. அதை எப்படியோ தடுத்துவிடுகிறாள் யூனி. அடுத்த முறையும் திருமணம் நிச்சயிக்கப்பட, அதையும் வேண்டாம் என மறுக்கிறாள் யூனி. ‘மூன்றாம் முறை திருமணத்துக்கு வேண்டாம் எனச் சொன்னால், கெட்டது நிகழும்’ என்கிற சூழலில் என்ன செய்யப்போகிறார் யூனி என்பதாக டீனேஜ் இந்தோனேஷிய பெண்களின் பிரச்னைகளைப் பேசியிருக்கிறார் பெண் இயக்குநரான கமிலா அந்தினி. வயதானவர்களுக்குச் செய்து வைக்கப்படும் திருமணம், டீனேஜ் பெண்கள் குடும்ப நிர்ப்பந்தத்தால் கர்ப்பம் ஆவது, ஒரு பெண்ணின் விருப்பம் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறது இந்த இந்தோனேஷிய திரைப்படம்.

பல தேசங்களில் பல மனிதர்கள்!

Bad Luck Banging or Loony Porn

பள்ளி ஆசிரியை தன் கணவருடன் பாலியலில் ஈடுபட்ட அடல்ட் வீடியோ இணையத்தில் தற்செயலாக லீக் ஆகிவிடுகிறது. பெண் ஆசிரியரின் ஒழுக்கம் குறித்த கேள்விகளையும், அவர் எப்படி உயரிய ஆசிரியப்பணியைச் செய்ய முடியும் என்கிற கேள்விகளையும் எழுப்புகிறது இந்த ரொமானியத் திரைப்படம். இந்தச் சர்ச்சைக்குரிய விஷயத்துடன் படத்தின் ஒரு பெரும் பகுதியாக, உலகில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் பல்வேறு பிற்போக்கான விஷயங்களையும் துணிச்சலுடன் நக்கல் அடித்திருக்கிறார் இயக்குநர் ரடு ஜூட். எம்மதத்தையும் எந்த இனக்குழுவையும் மிச்சம் வைக்கவில்லை இயக்குநர். ஒரு சமூகத்தில் எது முற்போக்கு, எதெல்லாம் பிற்போக்கு என்கிற பல பர்னிச்சர்களை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் துணிச்சலாக உடைத்து, அதே சமயம் சிரிக்கவும் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

பல தேசங்களில் பல மனிதர்கள்!

The worst person in the world

30 வயதை நெருங்கும் ஜூலியின் வாழ்க்கையில் நடக்கும் எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பாக விரிகிறது இந்த நார்வே நாட்டுத் திரைப்படம். ஒரு சினிமாவுக்கு முன்னுரை, முடிவுரை, 12 பாகங்கள் என வித்தியாசமான திரைக்கதை பாணியில் இதைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஜோசிம் டிரையர். லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப், பிடித்த வேலையைச் செய்வது, குடும்பம் என்கிற அமைப்பு, திருமணம் கடந்த பாலியல் உறவு எனப் பல்வேறு விஷயங்களைப் படம் பேசுகிறது. ஜூலியாக நடித்திருக்கும் ரெனேட் ரீன்செவ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் முதல் திரைப்படம். ஆனால், ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். சிறந்த நாயகிக்கான கேன்ஸ் விருதை இந்த முறை தட்டிச் சென்றவர் இவரே. நார்வே நாட்டின் சார்பாக ஆஸ்கரில் குதித்திருக்கிறது ‘The worst person in the world’.

இவை தவிர, இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குச் செல்லும் தமிழ் சினிமாவான ‘கூழாங்கல்’, டெலிவரி செய்யும் மனிதர்களின் வலியைச் சொல்லும் ‘ஸ்வீட் பிரியாணி’, கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி விருதை வென்ற `memoria’, பைபோலார் பிரச்னையில் சிக்கி உழலும் மனிதரைப் பிரதிபலிக்கும் `The restless’, ஈரானிய இயக்குநர் அஸ்கார் ஃபர்காடியின் `A hero’ போன்ற படங்களையும் மிஸ் பண்ணிவிடாதீர்கள்!