Published:Updated:

இன்றைக்கும் ரஜினியும் கமலும் உதாரணமாக இருக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ் சிறப்புப் பேட்டி

இன்றைக்கும் ரஜினியும் கமலும் உதாரணமாக இருக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ் சிறப்புப் பேட்டி
இன்றைக்கும் ரஜினியும் கமலும் உதாரணமாக இருக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ் சிறப்புப் பேட்டி

வில்லன், ஹீரோ, குணச்சித்திரம்... என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அநாயாசமாகக் கையாளும் அபூர்வ கலைஞன், பிரகாஷ்ராஜ். இன்று சென்னை, நாளை மும்பை, அடுத்த நாள் ஹைதராபாத் என வாரத்தை மொழிவாரியாக பிரித்துக்கொடுத்து பரபரவென பயணித்தபடி இருப்பவரை ‘தூங்காவனம்’ படப் பணிக்காக சென்னை வந்திருந்தபோது சந்தித்தோம்.

‘‘இயக்குநர்கள், ரசிகர்கள் உங்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும்போது 2010ல் இருந்து நீங்கள் தமிழில் படங்கள் பண்ணுவதை குறைத்துக்கொண்டது ஏன்?’’

‘‘தமிழ் சினிமாவில் குறைச்சிருக்கேன் என்பது உண்மைதான். நான் இப்போது உலகத்துக்கான மனிதன். எனக்குப் பல மொழிகள். எனக்கு நதி மாதிரி இருக்கணும் உயிரோட இருக்கணும்னு தோணும். அது என் வாழ்க்கை. இயக்கமா இருக்கலாம், தயாரிப்பா இருக்கலாம். நடிப்பா இருக்கலாம், விவசாயமாக இருக்கலாம், என் ஃபவுண்டேஷனா இருக்கலாம். சும்மா அமர்ந்து படிப்பதாகக்கூட இருக்கலாம், பல ஊர்களைப் பார்ப்பதாக இருக்கலாம், குடும்பத்துக்குத் தரும் நேரமாக இருக்கலாம். அந்த விருப்பத்தில் வாழ்பவன் நான். அடுத்தவர்களுக்காக வாழ்ந்து பழக்கமில்லை. உங்களைப்போலவே இப்படிக் கேள்விகள் கேட்க ரசிகர்களுக்கு உரிமை இருக்கு. அவர்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய கடமையும் இருக்கு. அதுக்குக் காரணம், என் பயணம் பெருசாகிட்டு இருக்கு. நான் ஒரு இடத்தில் இல்லை. எனக்கு உலகத்தை சுத்தவேண்டிய அவசியம் இருக்கு. இப்பேர்ப்பட்ட பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது. அப்படி கிடைக்கும்போது அப்படி வாழ்வதினால் என் தொடுவானங்கள் பெருசாகுது. என் அனுபவம் பெருசாகுது. என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தங்கள் வருது. என் நேரம் வீணாகப் போகலை. அடுத்து இந்த வாழ்க்கைக்கு இன்னும் அர்த்தங்கள் கூடுது.’’

‘‘ஒரேமாதிரியான வில்லன் கேரக்டர்ஸ் வந்ததால்தான் விலகி இருந்தீங்களா?’’

‘‘என் வாழ்க்கைப் பயணத்தில் நான் வில்லனாக மட்டும் இல்லையே? காஞ்சிவரம், அந்தப்புரம், கன்னத்தில் முத்தமிட்டால், இருவர், மொழி, அபியும் நானும், தோனி, சமீபத்திய ஓ.கே. கண்மணி... இப்படி பலப்பல வேடங்கள் பண்ணியிருக்கேன். நான் நடிகன். மாற்றங்களை பண்ணிட்டேதான் இருந்திருக்கேன். இயக்கியிருக்கேன். தயாரிப்பாளரா, விகடன்லயே சொல்லாததும் உண்மை எழுதியிருக்கேன். நான் விலகலை. நான் நிறைய டைமன்ஷன்ஸை உள்ள எடுத்துக்கிட்டேன். இங்க இல்லன்னா அங்க, அங்க இல்லைன்னா, இன்னொரு இடம். நான் இப்ப உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டு இருக்குற இந்தச் சமயத்தில், என் முன்னாடி ஒரு மராத்தி ஸ்கிரிப்ட், ஒரு பெங்காலி ஸ்கிரிப்ட், 2 இந்தி ஸ்கிரிப்ட், 3 கன்னடப் பட ஸ்கிரிப்ட் இருக்கு, தமிழ்ல அடுத்த படங்கள் இருக்கு, தெலுங்கு ஸ்கிரிப்ட் இருக்கு. இவை இல்லாம டைரக்ஷனுக்கு 3 ஸ்கிரிப்ட் இருக்கு, என் பூமி இருக்கு, விவசாயம் இருக்கு, காய்கறிகள் இருக்கு,ஃபவுண்டேஷன் இருக்கு. பயணம் இருக்கு. இவ்வளவு விஷயங்கள் இருக்கு. நான் எவ்வளவு பணக்காரன்?’’

‘‘இவ்வளவு விஷயங்களுக்கும் நேரத்தை எப்படி செலவிடுறீங்க?’

‘‘ரொம்ப பிஸியா இருக்கிறவன்ட்டதான் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கும். சோம்பேறிக்குத்தான் டைம் இருக்காது. நான் சோம்பேறி கிடையாது. நான் பிஸி. எனக்கு இன்னும் நேரம் இருக்கு.’’ ‘

‘‘பிரகாஷ்ராஜ் எப்பவும் அப்படித்தாம்பா, ஷூட்டிங்குக்கு லேட்டாதான் வருவார்’ என்ற எண்ணம் இன்னமும் சிலரின் மனசுல இருக்கே?’’

‘‘இருக்கலாம். உண்மைதான். என் வாழ்க்கை பொது வாழ்க்கை. ஆனால் அதற்கு மட்டும் அல்ல. நான் நேரத்தை வீணாக்கலை. என் மனைவியோட நேரம் செலவழிக்க வேண்டி இருக்கு. என் அம்மாவுடன் அமர்ந்து பேச வேண்டி இருக்கு. வருவேன், வேலையை முடிப்பேன். ஆனால் என்னை பிடிச்சு வெச்சீங்கன்னா என்னால வேலை பண்ண முடியாது. நான் சில வாழ்க்கையைப் பார்க்கணும், பல தண்ணியைக் குடிக்கணும். சில அனுபவங்களைப் பார்க்கணும். அதையெல்லாம் ஜீரணிச்சுகிட்டுதான் நான் பெர்ஃபார்ம் பண்ண முடியும். ‘இந்த 2 நாள் இவங்களுக்கு, அடுத்த 5 நாள் அவங்களுக்குன்னு கொடுக்கிறதுக்கு முன்னாடியே யோசிக்கலாம் இல்லையா’னு கேப்பாங்க. 9 மணிக்கு வரணும்னா வந்தே தீரணும் என்பது வேற டிசிப்பிளின். அது வேலை பண்றவங்களுக்கு மட்டும்தான். நான் வாழ்றவன். நான் மலர்றவன். மலர்வதற்கான நேரம் நீங்க கொடுக்கணும். சில பேர் பெரு மூச்சா எடுப்பாங்க. சிலர் சிறு சிறு மூச்சா எடுப்பாங்க. அந்த உரிமையை நீங்க கொடுக்கணும். 5 மொழிகள், 300 படங்கள், 20 வருட சினிமா பயணம், எத்தனை விஷயங்கள், எத்தனை இயக்குநர்கள், ஆயிரக்கணக்கான கோஆர்ட்டிஸ்ட்டோட பல மொழிகள், பல இலக்கியங்கள்... ஆம், எனக்கு அந்த உரிமை இருக்குன்னு நினைக்கிறேன். நான் உங்களை குறையாக சொல்லலை. என்னை புரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.’’

இன்றைக்கும் ரஜினியும் கமலும் உதாரணமாக இருக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ் சிறப்புப் பேட்டி

‘‘பொயட்டிக்கா பேசுறீங்க. நிறைய வாசிப்புதான் இதற்குக் காரணம், உங்க வாசிப்பு அனுபவம்?’’

‘‘வாசிக்கலைனா எனக்கு மூச்சு நின்னுடும். நான் நிறைய சினிமா பார்க்கமாட்டேன். ஆனால் நிறைய புத்தகங்கள் படிப்பேன். இப்பக்கூட விவசாயம் பற்றி ஒரு புத்தகம் படிச்சிட்டு இருக்கேன். மணிரத்னம் சாரை பார்க்கும்போது அவர் ஏதாவது ஒரு புத்தகம் சொல்வார். இப்படி நிறைய நண்பர்கள் இருக்காங்க. வாசிப்பு என்பது ஒரு நடிகனுக்கு முக்கியமான விஷயம். படிக்கணும், நிறைய விஷயங்கள் படிக்கணும். பல கோணங்களில் அந்த விஷயத்தை பார்க்கணும். நான் இயல்பாகத்தான் பேசுறேன். உணர்வுகள் கவிதையா இருந்தால் அது வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்குதே தவிர, பேசணும் என்பதற்காக அந்த வார்த்தையை பயன்படுத்துறது இல்லை. மொழி என்பது வெறும் சத்தம் மட்டுமே. ஆனால் அது, பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்... இன்னும் சிலரின் கையில். மட்டும் ஏன் அழகாகுது. ? மற்றவர்களிடம் அழகாக மறுக்கிறது? அதுக்கு பின்னாடி இருக்கிற மனிதர்களால்தான் அது அழகாகக் காரணம். உங்க மொழியை பிரசவிக்கிற உணர்வால்தான் அது அழகாகுமே தவிர மற்றபடி மொழி ஒரு சத்தம் மட்டுமே.’’

‘‘140 ரூபாயோடு வந்தேன்னு சொல்வீங்க. 20 வருஷ சினிமா அனுபவத்தை திரும்பிப்பார்க்கும்போது இந்த பயணம் எப்படி இருக்கு?’’

‘‘ரொம்ப அற்புதமா இருக்கு. இப்பேர்ப்பட்ட டிராவல் யாருக்கும் கிடைக்காது. அதுல வலிகள் இருக்கு. சந்தோஷம், புது தொடுவானங்கள், புதுப் பாதைகள், புது ருசி, புது நதிகள், புது மனிதர்கள், புது அனுபவங்கள் இருக்கு. என் சிந்தனையை மாற்றிய சில விஷயங்கள் இருக்கு. நம்மை அறியாமல் என் திசையை வேறு இடத்துக்குத் தள்ளின விஷயங்கள் இருக்கு. ஒருவேளை என்னைக் கீழ தள்ளினால் மறுபடியும் எழுந்திருக்கும் சக்தியை நானே உணர்ந்த வினாடிகள் இருக்கு. ‘20 வருஷம்தானா, அவ்வளவுதானா ஆச்சு. எவ்வளவோ வருஷமா பாத்தமாதிரி இருக்கு’ங்கிறாங்க. எப்படி உங்களுக்கு 6 தேசிய விருது, இத்தனை படங்கள்’னு கேட்பாங்க. யாருக்குக் கிடைக்கும் இந்த அனுபவம்?’’

‘‘‘பிரகாஷ்ராஜ் ஃபவுண்டேஷன்’ தொடங்கி ஒரு கிராமத்தை தத்து எடுத்து இருக்கீங்க. இந்த எண்ணத்துக்கான விதை எது?’

’ ‘‘அது என் கடமை. ஏதோ ஒரு புள்ளிக்குப்பிறகு திருப்பி தர வேண்டிய இடத்துக்கு ஒவ்வொருவனும் வருவான். ஒரு மனிதனை உயரந்தவன்னு எப்படிச் சொல்லுவீங்க? அவன் என்ன அடைஞ்சான் என்பதில் அல்ல. அவன் உயர்ந்ததால் அவனால் எத்தனை பேர் உயர்த்தப்பட்டார்கள் என்பதில்தான் இருக்கிறது. பாலசந்தர் அதைத்தான் எனக்குப் பண்ணினார். அதைத்தான் ஒரு இலக்கியம், விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு செய்யுது. என் பசியை, தேவைகளைத் தாண்டியாச்சு. திறமையினால்தான் ஜெயிச்சேன்ங்கிற ஆணவத்தை விடவேண்டிய நேரம் வந்தாச்சு. என் பொண்ணு இன்னைக்கு லண்டன்ல படிக்கிறா. எங்க அம்மாவுக்கு தனியா ஒரு நர்ஸ் வைக்க முடியுது. எனக்கே மூணு ஊர்களுக்கு போக மூணு கார்கள் இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும்? இருக்கிறதை திருப்பிக் கொடுக்கணும். கடன் தீர்க்கணும். எந்தக் கடனையும் வெச்சுக்கக்கூடாது. என்னிடம் 10 ரூபாய் அதிகமாக இருக்கும்போது, ஒரு விவசாயி தன் வயல்ல நின்னுகிட்டு எனக்கு யாரும் இல்லை நான் தனி ஆள்னு வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து செத்துப்போறான்னா அதுக்குக் காரணம் நாமும்தானே. அவனைக் கைதூக்கிவிடத்தான் இந்த ‘பிரகாஷ்ராஜ் ஃபவுண்டேஷன்’. ‘நீ கொடுக்கும்போது உண்மையாகவே அவங்களுக்குப் போகுதுன்னு நம்பி எனக்கு 10 பேர் கொடுக்குறாங்க. இது சேவை கிடையாது. கடமை. என் குடும்பத்தாரின் சம்மதம் பெற்று என் சம்பளத்தில் 25 சதவிகிதத்தை அந்த ஃபவுண்டேஷனுக்கு கொடுக்கிறேன். ‘50 சதவிகிதமே கொடுடா நல்லாதானேடா இருக்கும்’னு அம்மா சொல்றாங்க. பார்ப்போம்.’’

‘‘தத்தெடுத்த கிராமத்தை உயர்த்த என்னென்ன திட்டமிடல்கள் இருக்கு?’’

‘‘தத்தெடுக்கும்போது நீங்கள் தாயாக இருக்கணும். அங்க  தலைவனாக இருக்கக்கூடாது. தாய்மையோடு செய்யணும். நம் ஊர்களுக்கு ஒரு சுயமரியாதை இருந்தது. அதை நாம், தெரியாமல் துடைச்செடுத்துட்டோம். வீடு கட்டினால் எல்லா வீடுகளும் ஒரே மாதிரியா இருக்கிறது, பிச்சை போடுறதுக்கு சமம். அது அல்ல உதவி. அந்த ஊருக்கு ஒரு ஆர்க்கிடெக்சர் இருக்கணும். ஒரு கிராமத்துல ஒரு வீடுன்னா, அது அவங்களுக்கும் புள்ளைங்களுக்கும் அவங்களோட ஆடு மாடுகளுக்கும் துளசிச் செடிக்கும், அவங்க கலாசார கடவுளுக்கும் சேர்ந்த வீடா இருக்கணும். அதுதான் விஸ்டம். அடுத்து, விவசாயம். சாப்பிடுறவங்க சிட்டியில இருக்கோம். பாவக்காவை 18 ரூபாய்க்கு விக்கிறான். ஆனால் நாம 40 ரூபாய்க்கு வாங்குறோம். நடுவுல எடுத்துட்டு வர்றவங்க 22 ரூபாய் வாங்குறான். ஆனால் 18 ரூபாய்க்கு வித்தவன் ஏழையா இருக்கான். வாங்கி கைமாத்திவிட்டவன் பணக்காரனா இருக்கான். அடுத்து பூமிக்கொலை. எல்லாப் பூச்சிக்கொல்லிகளையும் போட்டு நம்ம பூமியைக் கொன்னுட்டு இருக்கோம். பூமியைக் காப்பாத்துற ஆணவம் நமக்கு வேணாம். ஏன்னா அதோட வயசென்ன, நம் வயசென்ன? ஆனால் நம்மைக் காப்பாத்திக்கணும்னா பூமியைக் காப்பாத்த வேண்டி இருக்கு. கிராமத்தானின் திறமையை அவங்களுக்கு மறுபடியும் ஞாபகப்படுத்த வேண்டிய சூழல். அவங்க கால்மேல அவங்களை நிக்க வெச்சிட்டாப் போதும். அரசு நிறைய செய்யணும்னு நினைக்குது. நாம நடுவுல இருக்கணும். ஏன்னா அரசு, மக்களோட காசைத்தான் வெச்சிருக்கு. மக்களுக்குதான் செய்யணும்னு நினைக்கிது. நடுவுல நாம போய் கேட்டா நடக்கும். அதுக்கு அரசும் வேணும், மக்களும் வேணும். நாமளும் இருக்கணும். அவங்களை வளர்த்து சொந்தக்கால்ல நிறுத்திட்டு அடுத்த ஊருக்குப் போகணும். ‘நீங்க கரெக்டா செய்வீங்க’ங்கிறாங்க. அந்த நம்பிக்கையை நான் வளர்த்திருக்கேன். மகிழ்ச்சி.’’

‘‘இயற்கை விவசாய ஆர்வம் எந்த அளவுல இருக்கு?’’

‘‘இந்த பூச்சிக்கொல்லிகளால் பூமியை கன்ஃப்யூஸ் பண்ணிட்டு இருக்கோம். விவசாயம், நம் கலை. நம் அடையாளம். இன்னைக்கு எங்கு திரும்பினாலும் சிமென்ட், தார் ரோடுகள். அப்புறம் எப்படி தண்ணி பூமிக்குள்ள போகும்? வர்ற மழை அடிச்சடிச்சுப்போய் கடல்ல கலக்குது. அது பூமியில உள்ள சத்துகளை எல்லாம் எடுத்துட்டுப் போயிடுது. எவ்வளவு கெமிக்கல்ஸ் சாப்பிட்டுகிட்டு இருக்கோம். குழந்தைகளுக்கு இவ்வளவு வியாதிகள் வர்றதுக்கு அந்த கெமிக்கல்ஸ்தானே காரணம். அதைத் தூக்கிப் போடணும்ல? இல்லைன்னா அழிஞ்சிடுவோம். அதுக்கு நானே ஒரு உதாரணமாகிட்டா? நான் 10 ஏக்கர் வாங்கி வளர்த்து நிருபிச்சுக் காட்டணும்னு தோணுச்சு. அதைத்தான் செய்றேன். ஹைதராபாத், கொடைக்கானல், மகாபலிபுரம்னு சில இடங்கள்ல விவசாயம் பண்றேன். ஹைதராபாத் பண்ணையில 20 நாட்டு மாடுகள் வாங்கி விட்டிருக்கேன். தமிழ்நாடு, கர்நாடகா, ஓங்கோல்னு வெவ்வேற இடங்கள்ல வாங்கி ஒண்ணோடு ஒண்ணு கிராஸ் அடிச்சு... அதைப் பெருக்கி... அவைகளோட சாணம், சிறுநீரை பூமிக்கு விடுறேன். விளையுது. என் நண்பர்கள் பலரும், ‘நான் அந்த நாய் வாங்கினேன், இந்த நாய் வாங்கினேன்’னு பேசிட்டு இருக்கும்போது, நான் இந்த மாடு வாங்கினேன், அந்த மாடு வாங்கினேன்’னு பேசுறது பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. ஏன்னா மாடுங்கிறது பெரிய சக்தி. அது நம் கலாசாரம். இந்தியர்களின் பெருமை. இதைப்பார்த்துட்டு அக்கம்பக்கத்து இளைஞர்கள் நாங்களும் பண்றோம் சார்னு வர்றாங்க. சந்தோஷமா இருக்கு.’’ ‘

‘பசங்க எந்த விஷயத்துல ஆர்வமா இருக்காங்க?’’

‘‘எனக்கு இந்த எஜுகேஷன் சிஸ்டத்துமேல நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு திறமை இருக்கு. அந்தத் திறமை எதுன்னு கண்டுபிடிச்சு அதைக் கத்துத்தர்றதுதான் கல்வி. கடியம்னு ஒரு ஊர். அங்க 120 ஏக்கர்ல பெரிய நர்சரிஸ் இருக்கு. இந்தியாவுல பல இடங்களுக்கு அங்க இருந்துதான் செடிகள் போகுது. 23 வயசு ராஜுங்கிற பையன், அங்க உள்ள எல்லா செடிகள், பூக்கள், காய்கள்...னு எல்லாத்தோட குணாதிசியங்களைச் சொல்றான். அங்க படிச்சவன் அவனா நானா? அதுவும் ஒரு கல்விதானே? என் புண்ணியம் என் பொண்ணுக்கு என்ன தேவைன்னு என் கண்ணுக்குப் பட்டுச்சு. அதனால அவ தெளிவா போயிட்டு இருக்கா. சின்னவன் 10 வயசு. அவனுக்கு என்ன பிடிக்கும்னு பார்ப்போம். என் மனைவி, என் எல்லா வேலைகளையும் புரிஞ்சுக்கிறாங்க. சில நேரங்கள்ல நான் பண்றது பிடிக்காது. அம்மா, ‘எப்பவும் அவங்களோடவே இருக்கணும்’னு நினைக்கிறாங்க. ‘முடிஞ்சா நானே உனக்கு சம்பாதிச்சுப்போடுறேன்டா. கூடவே இரு’ங்கிறாங்க. இது எல்லாத்தையும் தாண்டி நீ நீயாகவும் இருக்கணும். அவங்க அவங்களாவும் இருக்கக்கூடிய சுதந்திரத்தை தரணும்.’’

‘‘இந்திய கல்விமுறை மீது ஏன் இவ்வளவு கோவம்?’’

‘‘நாங்கல்லாம் அந்த கோவத்துக்கு பிறந்தவங்கதானே? ‘உனக்குப் படிக்கத் தெரியாது. நீ டிகிரி பண்ணாம எங்கயும் செட்டிலாக முடியாது. ஹோட்டல்ல வேலை பார்க்கத்தான் நீ லாயக்கு’னு திட்டித் திட்டி... ஆனால் இன்னைக்கு நான் இலக்கியம் பேசிட்டு இருக்கேன். இந்த உலகத்துலயே பிரபலமான நடிகனா இருக்கேன். அதுக்கெல்லாம் காரணம், நான் அந்தக் கோபத்துக்குப் பிறந்தவன். அவங்க பேச்சைக் கேட்டிருந்தால், அவங்களுக்குப் பயந்திருந்தா என்னாகியிருக்கும்? நான் தப்பிச்சிட்டேன். மத்தவங்களையும் தப்பிக்கவைக்கணும்ல? ‘உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும்’ங்கிறதுதானே அவங்க ஆணவம். எவ்வளவுபெரிய ஆணவம். ‘உனக்கு என்ன வேணும்னு நான் புரிஞ்சுக்கிறேன்டா’னு சொல்லணுமே தவிர, ‘உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும்’னு சொல்றது எவ்வளவுபெரிய தவறு. எல்லோருக்குள்ளும் ஒரு தனித்துவம் இருக்கு. அதைக் கண்டறிந்து அடையணும். நீ எதுவோ அதில் சிறந்தவனா இருக்கணுமே தவிர, இதில் இருந்தால்தான் நீ சிறந்தவன்னு சொல்லக்கூடாது இல்லையா?’’

‘‘நடிகர் சங்கமும் அதன் தேர்தலும் பரபரப்பா பேசப்படுறதை கவனிக்கிறீங்களா? நீங்கள் எந்த அணி?’’

‘‘மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் வந்திருக்கு. இளைஞர்கள் வந்திருக்காங்க. நான் அந்த அணியோட இருக்கேன். காரணம், மாற்றம் வேணும். மற்றபடி யாரைப்பற்றியும் எனக்கு தனிப்பட்ட குறைகள் இல்லை. நான் சண்டைபோட வரலை. அது ஒருத்தரின் சொத்து கிடையாது. இளைஞர்கள் இப்படி கிளர்ந்தெழுந்து இருக்காங்கன்னா அதுக்கு காரணம் இருக்கும் இல்லையா? இப்ப தவறவிட்டால் மறுபடியும் எப்ப இது நடக்கும். ரிட்டயர்டு ஆகுற டைம் வரும்போது ரிட்டயர்டு ஆகிடணும். சச்சின் டெண்டுல்கர் ரிட்டயர்டு ஆனார் இல்லையா, அதுதான் அழகு. இது யாரோட தனிப்பட்ட சொத்தும் கிடையாது, பொதுச் சொத்து. நாமெல்லாம் பதவி கேட்கக்கூடாது. நாங்கள் இளைஞர்களாக வேண்டிய கடமை வந்தாச்சு. தப்பிக்கிறதுக்காக இதைச் சொல்லலை. மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் வந்திருக்கு. ஏத்துக்கங்க.’

இன்றைக்கும் ரஜினியும் கமலும் உதாரணமாக இருக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ் சிறப்புப் பேட்டி


‘‘சமீபத்தில் பார்த்ததில் பிடித்த படம்?’

‘‘ஒரு நாடு ஒரு ஊர், தன் இலக்கியத்தோட தன் அன்போட தன் சோறோட தன் நிழலோட , தன் தண்ணியோடனு ஒருவனை வளர்த்த பிறகு அவன் வெளியில போய் பேர் எடுத்துட்டு வர்றான்ல, ‘உனக்கு சோறு போட்டு வளர்த்ததுக்கு நன்றிக்கடனோட இருக்கேடா நீ’னு சொல்றமாதிரி. அப்படித்தான் இன்றைய இளைஞர்கள் பண்ணிட்டு இருக்காங்க. அதைத்தான் பண்ணியிருக்கு, காக்கா முட்டை. ஹைதராபாத்ல பிச்சிகிட்டு ஓடுது. மொழி தெரியாமலேயே பாக்குறாங்க. இந்தமாதிரி ஆரோக்கியமான இளைஞர்கள்கூட நானும் இருக்கேன்னு சந்தோஷமா இருக்கு.’’

‘‘ஆனால், சினிமா சிஸ்டம் மாறலையே, அரிதாகத்தானே காக்காமுட்டைகள் வருது?’’

‘‘அதுவும் மாறும்.  மாறும்போது சில தலைகள் உருளும். சிலர் கஷ்டப்படுவாங்க. அது அந்த பலியை கேட்கும். அதைக் கொடுத்துத்தான் ஆகணும். ஒரு நாட்டுக்கு சுதந்திரம்வேணும்னு சிலர் உயிர் இழக்கிறாங்க இல்ல, அப்படி. ஆனால் தொடர்ந்து நம்பிக்கையோடு போராடணும். அதைமட்டும் கைவிட்டுவிடக்கூடாது.’’

‘‘பிரகாஷ்ராஜுக்கு இந்த வருடம் 50 வயது. ஒரு மனிதனா இந்தப் பயணம் எப்படி இருக்கு?’’

‘‘பெருமையா இருக்கு. சந்தோஷமா இருக்கு. பரவாயில்லையே, இதுவரைக்கும் தப்பிச்சு வந்துட்டியேன்னு நினைக்கத்தோணுது. நிறையப் பேரை, என்கூடப் பிறந்தவங்களை, என்கூட இருந்தவங்களை ரொம்பவருஷமா பார்த்துட்டு இருக்கும்போது... எல்லாமே எனக்கு அமைஞ்சிருக்குன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு.’’

‘‘இளைய தலைமுறை இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களோடு படங்கள் பண்ண ரஜினி, கமல் இறங்கி வந்திருக்காங்க. இதை எப்படிப் பார்க்குறீங்க?’’

‘‘அதுதானே அழகு. ராஜேஷ் என்ற இளைஞனோடு கமல் சார் வொர்க் பண்ண முடியுது. ஒரு ரஞ்சித்தோட ரஜினி சார் வொர்க் பண்ண முடியுது. அவங்க ஒரு உதாரணமா இருக்காங்கல்ல. ‘கபாலி’ முதல் நாள் ஷூட்டிங்னு ஒரு போட்டோ பார்த்தேன். ‘கபாலி’ நானும் பண்ண வேண்டியது. ஆனால் நிறைய டேட்ஸ் தேவைப்பட்டுச்சு. நான் ஏற்கெனவே நிறையப் படங்களை ஒப்புக்கிட்டேன். அந்தப் படத்தை மிஸ் பண்ணினதுக்கு ரொம்ப வருத்தப்படுறேன். அந்த இளைஞர் கூட்டத்தைப் பார்த்தப்ப அந்த வருத்தம் இன்னும் அதிகமானது என்பது உண்மை. அவரைச் சுத்தி இருக்கும் அந்தப் பட்டாளத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் திறமைசாலி இளைஞர்களைப் பார்க்கும்போது அவங்க யாருமே ஷோவா இல்லை, வழக்கமான சினிமா முகமா இல்லை. ஜெயிச்சவங்க அல்ல. பசியோட இருக்கிற ஒரு கும்பல். அதுல விரசம் இல்லை. ரஜினிக்குத் தெரியாத விஷயமா. நம்பி முடிவெடுக்கிறார்னா அவர் உணர்ந்திருக்கார். கமல் சார், ரஜினி சார் அவங்களே உணர்ந்திருக்காங்கன்னா, அந்த அனுபவம் அழகுன்னுதானே அர்த்தம்.’’

- ம.கா.செந்தில்குமார் -