Published:Updated:

தேவ் ஆனந்த் ! : ரஜினி, கமல் இரங்கல்

Vikatan Correspondent

பழம்பெரும் இந்தி திரைப்பட நடிகரும், 'எவர்க்ரீன் ரொமான்டிக் சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்பட்டவருமான தேவ் ஆனந்த் லண்டனில் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 88.

அவரது மறைவுக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஜினி : நடிகர் தேவ்ஆனந்த் மிகவும் சுறுசுறுப்பானவர். திறமையான நடிகர். அவரை 2 வருடத்துக்கு முன்பு சந்தித்தேன். அப்போது கட்டிப் பிடித்தது, நலம் விசாரித்ததெல்லாம் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்த நிமிடங்களை மறக்க முடியாது. தேவ்ஆனந்த் எப்போதும் என் மனதிலும் என் குடும்பத்தினர் மனதிலும் இருக்கிறார்.

கமல் : இறுதி வரை துடிப்புடன் நடித்து வந்தவர் தேவ் ஆனந்த். எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக மிக அமைதியாக அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகர் இவர் மட்டும்தான். திரையுலகில் அமைதியாக பெரும் சாதனைகள் பலவற்றைப் படைத்தவர் தேவ் ஆனந்த். அவருடைய 'கைட்' (GUIDE) படமாகட்டும், பிற படங்களாகட்டும், அத்தனையுமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.

மிகப் பெரிய கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தேவ் ஆனந்த். அந்தக் குடும்பத்தை நல்வழிப்படுத்தி வழி நடத்திச் சென்றவர். அவர் நடித்த முதல் படத்திலும் சரி, கடைசிப் படத்திலும் சரி ஒரே மாதிரியாகத் தோன்றியவர். அந்தஅளவுக்கு ஹேர் ஸ்டைலிலும் உடைகளிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர்.

எனது ' மகாநதி ' படத்தைப் பார்த்து விட்டு கண்கலங்கிப் போனார் தேவ் ஆனந்த். இதை இந்தியில் எடுக்கலாமா என்று அவரிடம் நான் கேட்டபோது, இந்த அளவுக்கு இந்தியில் எடுக்க முடியுமா என்பது சந்தேகம் என்றார். அவரது மரணம் இந்தித் திரையுலகுக்கு மட்டுமல்ல, இந்தியத் திரையுலகுக்கே பெரிய இழப்புதான்.

கடைசி வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த நல்ல ஒரு நடிகர், நல்லதொரு தயாரிப்பாளர் தேவ் ஆனந்த். இன்னும் ஒரு வருடம் இருந்திருந்தால் இன்னும் ஒரு படத்தை கண்டிப்பாக எடுத்து விட்டுத்தான் போயிருப்பார். எனவே, மனிதனுக்கு ரிடையர்மென்ட் என்பது மரணம்தான் என்பதை தேவ் ஆனந்த் நிரூபித்திருக்கிறார்.