Published:Updated:

நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்துகொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பு!

நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்துகொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பு!
நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்துகொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பு!

சென்னை: விரைவில் கூடும் நடிகர் சங்க பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க உள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளதையடுத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர்களாகவும் தேர்வாகியுள்ளார்கள். பொருளாளராக கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், 24 பேரை கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விஷால் அணியை சேர்ந்த 20 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்துகொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பு!

புதிய நிர்வாகிகளிடம் ஏற்கெனவே பதவியில் இருந்த சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டனர். நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் தியாகராயநகர் நரசிம்மன் தெருவில் உள்ள நடிகர் சங்கத்தின் தற்காலிக அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.

அவர்களிடம் நடிகர் சங்கத்தின் தஸ்தாவேஜுகள், வரவு செலவு கணக்கு புத்தகங்கள், நடிகர் சங்க உறுப்பினர்கள் சம்பந்தமான விவர புத்தகங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன.பின்னர் பழம்பெரும் நடிகை சச்சுவுக்கு நடிகர் சங்கத்தின் ஆயுட் கால உறுப்பினருக்கான அட்டையை விஷால் வழங்கினார். தேர்தலில் வென்ற புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டும் தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த வாரம் இறுதியில் பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை அழைக்க திட்டமிட்டுள்ளனர். 3,139 உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படவுள்ளது.