Published:Updated:

'கத்தி' பட விவகாரம்: நடிகர் சிரஞ்சீவிக்கு சென்ற பரபரப்பு கடிதம்!

Vikatan Correspondent
'கத்தி' பட விவகாரம்: நடிகர் சிரஞ்சீவிக்கு சென்ற பரபரப்பு கடிதம்!
'கத்தி' பட விவகாரம்: நடிகர் சிரஞ்சீவிக்கு சென்ற பரபரப்பு கடிதம்!
'கத்தி' பட விவகாரம்: நடிகர் சிரஞ்சீவிக்கு சென்ற பரபரப்பு கடிதம்!

தஞ்சை: 'கத்திபடக் கதை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதன் கதாசிரியருக்காக களமிறங்கி, டெல்டா மாவட்ட விவசாயிகள் சிரஞ்சீவிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். அவருக்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள்,  "அந்த படத்தின் கதையின் வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அது முடிந்த பிறகு நடியுங்கள்" என்று கடிதம் எழுதி அனுப்பி வருகின்றனர்.

தீவிர அரசியலில் இறங்கிய நடிகர் சிரஞ்சீவி, சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு 'பிரஜ்ஜா ராஜ்ஜியம்' என்ற கட்சியைத் தொடங்கினார். பின்பு அதனை காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். முழு நேர அரசியல்வாதியான பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத அவர், அவ்வப்போது தனது மகன் ராம் சரண் நடிக்கும் படங்களில் மட்டும் தலைகாட்டுவார். 149 படங்கள் நடித்த அவர், 150-வது படத்தில் நடிக்க வேண்டும் என்று அவருடைய நலம் விரும்பிகளும், ரசிகர்களும் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து பல கதைகளைக் கேட்டார்.

அவற்றில் நடிகர் விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படத்தின் கதையும் ஒன்று. கதை பிடித்துபோனதால் அதன் ரீமேக்கில் நடிக்க சம்மதித்து, அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கத்தி படத்தின் கதை விவகாரம் தொடர்பாக, தஞ்சை நீதிமன்றத்தில் ரீமேக் செய்ய அனுமதிக்கக் கூடாது என்பது உட்பட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே வழக்கு முடிந்த பிறகு நடிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட விவசாயிகள் சிரஞ்சீவிக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

'கத்தி' பட விவகாரம்: நடிகர் சிரஞ்சீவிக்கு சென்ற பரபரப்பு கடிதம்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி ஒருவர், “குறும்பட இயக்குநர் அன்பு.ராஜசேகர் தாகபூமி என்பவர் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது, அவர்களின் அவல நிலை, பன்னாட்டு கம்பெனிகளுக்கு விவசாய நிலத்தை விற்கக் கூடாது என்ற கருவைக் கொண்டு ஒரு குறும்படத்தை எடுத்திருந்தார். அது அப்போது டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் அந்த கதையை கத்தி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார் முருகதாஸ். படமும் செம ஹிட். தனது கதையை திருடிவிட்டதாக குறும்பட இயக்குநர் முருகதாஸிடம் நியாயம் கேட்டார் அன்பு.ராஜசேகர். எந்த பதிலும் இல்லை. கதை தொடர்பாக தஞ்சை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு மற்றும் ரீமேக் செய்ய அனுமதிக்கக் கூடாது என மொத்தம் நான்கு வழக்குகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், நடிகர் சிரஞ்சீவி  கத்தி கதையில் நடிக்க சம்மதித்ததுடன் ஆர்வமாகவும் இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

'கத்தி' பட விவகாரம்: நடிகர் சிரஞ்சீவிக்கு சென்ற பரபரப்பு கடிதம்!

பிரச்னை தீர்வதற்கு முன் அவர் அந்தக் கதையில் நடித்தால், அன்பு.ராஜசேகரின் எதிர்காலம் பாதிக்கப்படும். எங்கள் மண்ணின் இயக்குநர் அன்பு.ராஜசேகர் விவசாயிகள் வாழ்க்கையின் வலிகளை எடுத்தவர்.  தன்னுடைய கதைக்காக நியாயமான முறையில் போராடி வருகிறார். அவர் பிரச்னையை தீர்க்க யாரும் முன்வரவில்லை. எனவே விவசாயிகளாகிய நாங்கள் அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளோம். கத்தி படத்தின் கதையின் வழக்கு முடிந்த பிறகு நடியுங்கள் என்று நடிகர் சிரஞ்சீவிக்கு கடிதம் அனுப்பி வருகின்றோம்.

எங்கள் பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடிதம் அனுப்பியுள்ளோம். இன்னும் அனுப்ப  இருக்கின்றனர். இந்தக் கடிதத்தை பார்த்து ஆந்திராவில் நடிகர் ரஜினியைபோல் செல்வாக்கு கொண்டவரும், நியாயத்துடன் நடப்பவருமான நடிகர் சிரஞ்சீவி, கத்தி படத்தின் கதைக்கான முடிவு வரும் வரை அதில் நடிக்க மாட்டார் என நம்புகிறோம்" என்றனர்.

- கே.குணசீலன்