Published:Updated:

"நட்புன்னா மதுரை மாதிரி இனி சென்னையும் நினைவுக்கு வரும்" - சிலிர்க்கும் துரை.தயாநிதி

"நட்புன்னா மதுரை மாதிரி இனி சென்னையும் நினைவுக்கு வரும்" - சிலிர்க்கும் துரை.தயாநிதி
"நட்புன்னா மதுரை மாதிரி இனி சென்னையும் நினைவுக்கு வரும்" - சிலிர்க்கும் துரை.தயாநிதி

‘‘எல்லாரும் உதவுவது போலதான் நாங்களும் நம் மக்களுக்கு உதவுறோம். மத்தபடி இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது’’ என்கிறார்கள் துரைதயாநிதி-அருள்நிதி சகோதர்கள். கடந்த ஒரு வார காலமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சத்தமின்றி உதவி வருகிறார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் அவருடைய சகோதரரும் நடிகருமான அருள்நிதி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஒரு வார காலமாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்து உதவி வருகின்றனர். தன்னார்வலர்கள் பலரும் சென்னை நகரை மையமாக வைத்து உதவி செய்து வருவதால் இவர்கள் ராயபுரம், பழவேற்காடு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் என மழை சூழ்ந்த புறநகர் பகுதியில் இயங்கி வருகிறார்கள். இன்று திருவொற்றியூர் ராஜாஜி நகரில் நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளார்கள்.

இதுகுறித்து துரைதயாநிதியிடம் பேசினோம். ‘‘முகம்தெரியாத எத்தனையோ பேர் தங்கள் சக்திக்கு மீறி உதவி செய்து வருகிறார்கள். இந்த மழை வெள்ளத்தில் அரசாங்கம் செய்த உதவிகளை விட சாமானிய மக்கள் செய்த உதவிதான் மிகப்பெரிது. அப்படி இருக்கையில் நாங்கள் செய்கிற உதவிகளை விளம்பரப்படுத்த விரும்பவில்லை’’ என்றார். அருள்நிதியும், ‘துரை சொல்வதுதான் சரி. இதில் எந்த அரசியலும் கிடையாது. ‘கிராமங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில யாரும் யாருக்கும் உதவி செய்ய மாட்டாங்க’னு ஒரு பொதுவான எண்ணம் இருந்தது. அப்படி மற்றவர்கள் சொல்லும்போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும். அந்த எண்ணத்தை உடைத்தெறிகிற மாதிரி நம் மக்கள் பண்ணிட்டாங்க. நாம சென்னையில இருக்கோம்னு சொல்வதில் அவ்வளவு பெருமையா இருக்கு’’ என்கிறார்.

"நட்புன்னா மதுரை மாதிரி இனி சென்னையும் நினைவுக்கு வரும்" - சிலிர்க்கும் துரை.தயாநிதி

தொடர்ந்து பேசினார் துரை தயாநிதி ‘‘மழை பெய்ய தொடங்கிய சமயத்தில் நான் சென்னையில்தான் இருந்தேன். முதல் இரண்டு நாட்களில் செல்போன், இன்டர்நெட் என வெளியுலக தொடர்பு இல்லை. வீட்டுக்குள்ளேயேதான் இருந்தேன். கரன்ட் இருந்ததால் செய்திச் சேனல்கள் மூலம்தான் எவ்வளவு பெரிய இழப்பு, இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என தெரியவந்தது. ‘இத்தனை பேர் உதவும்போது நாம் ஒருநாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருக்கோமே’ என்ற எண்ணம். அந்த குற்ற உணர்ச்சியில் அக்கம்பக்கம் கிடைத்த 40 தண்ணீர் பாட்டில்களை வாங்கிக்கொண்டு கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள குடிசைப்பகுதி மக்களிடம் கொடுக்கலாம் என ஓடினேன். அங்கு, வண்டிகளை எல்லாம் மறைத்து அவர்கள் சாப்பாடு, தண்ணீர் கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது. நடுத்தர மக்கள் தங்கள் சக்திக்கு மீறி சாப்பாடு பாக்கெட், தண்ணீர் என ரெடிபண்ணி எடுத்துவந்து தந்ததைப் பார்த்தபோதுதான் பெருசா பண்ணணும் என தோன்றியது. மதுரையில் இதுபோன்ற உதவிகள் செய்து வருவதால் அங்கு உதவிக்கு கூப்பிட்ட உடனேயே ஆயிரம், 500 என தன்னார்வலர்கள் வருவார்கள். அவர்களை உடனடியாக வரவைப்பதும் சிரமம். பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள என் நண்பர்களுக்கு தகவல் சொன்னேன். ‘எங்க ஏரியா பாதிக்கலைண்ணே. கடலை ஒட்டினப் பகுதிங்கிறதாதல தண்ணி வழிஞ்சி ஓடிடுச்சு. எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க, நாங்க வந்துடுறோம்’ எனச்சொல்லி 20 பேர் வந்து நின்றார்கள்’’

துரைதயாநிதி நிறுத்திய இடத்திலிருந்து தொடர்கிறார் அருள்நிதி. ‘‘கோடம்பாக்கம், கே.கே.நகர் பகுதிகள்ல உள்ள என் நண்பர்கள் உள்பட 35 பேருக்கும் மேல் சேர்ந்தோம். காலம் தாழ்த்தக்கூடாது என்பதால் உடனடியாக நிவாரணப் பொருட்களை வாங்ச்சொன்னோம். கோவை, மதுரை, ராமநாதபுரம்னு வெளியூர் நண்பர்களுக்கும் தகவல் சொன்னோம். எங்களிடம் வந்தால் சரியானவர்களுக்கு போய்ச் சேரும் என்பதால் அவர்களும் லாரிகளில் பொருட்களை ஏற்றி அனுப்பியபடி இருக்கிறார்கள். முதல்கட்டமாக லிட்டில் ஃப்ளவர் கான்வெட் குழந்தைகளுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை கொடுத்து சிறிய அளவில் உடனடியாக உதவிகளை தொடங்கினோம். அடுத்து கார், டிரக் ஏற்பாடு செய்து ஒவ்வொரு நாளும் குறைந்தது 500 லிட்டர் பால், தண்ணிர் பாட்டில்கள், ஜூஸ், போர்வை, பாய், மெழுகுவத்திகள், சாப்பாடு... என கொடுக்க ஆரம்பித்தோம். மற்ற தன்னார்வலர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம். த்தார்த், பாலாஜி இருவரும் எங்களுக்கு நிறைய ஆலோசனை சொல்கிறார்கள். தனுஷ் தன்னிடம் கூடுதலாக உள்ள பொருட்களை எங்களுக்கு தந்து உதவினார். அதேபோல் நாங்கள் எங்களிடம் கூடுதலாக இருந்த தண்ணீர் பாட்டில்களை நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு தந்தோம். ராணா, நவ்தீப், மனோஜ், லட்சுமி மஞ்சு... என ஆந்திர நண்பர்கள் ஒரு டீமாக சேர்ந்து அங்கு நிறைய பொருட்களை திரட்டி அனுப்புகிறார்கள். இன்று மாலைகூட எங்களுக்கு ஒரு டிரக் நிறைய உதவி பொருட்களை அனுப்ப உள்ளனர். அதில், சாப்பாடு, போர்வை, தண்ணீர், 15 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 2 கிலோ உப்பு, ஒரு கிலோ சக்கரை, மெழுகுவத்தி, தீப்பெட்டி உள்பட மொத்தம் 10 பொருட்கள் அடங்கிய கிட்டுகளாக அனுப்பி வருகின்றனர். அது ஒரு குடும்பத்துக்கு ஒரு வார காலத்துக்கு தேவையான பொருட்களாக இருக்கும்!’’

‘‘நாங்க போவது எல்லாமே சென்னையில் இருந்து 25 கி.மீட்டரை தாண்டிய ஊர்களுக்குத்தான். இன்னமும் பல ஏரியாக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணிர் நிற்கிறது. சில பஞ்சாயத்துகளில் சாப்பாடு போடுகிறார்கள். மற்றபடி ‘தனியார் அமைப்பினர் தான் வர்றாங்க, அரசாங்கத்துல இருந்து யாரும் வரலை’னு சொல்கிறார்கள். அவர்களுக்கு அரசின் உதவிகள் போய்ச்சேரவில்லை. ‘யாராச்சும் வந்து உதவுறாங்களே’ என்ற சந்தோஷம் அவர்களின் முகத்தில் தெரிகிறது. ஆனால் இந்த உதவி மட்டுமே நிரந்தர தீர்வாகாது. தவிர அவர்களுக்கு பேரிடர் தொடர்பான எந்த விழிப்புணர்வும் இல்லை என்பதும் வருத்தமாக இருக்கிறது. நான் வளர்ந்தது மதுரையில் என்றாலும் பிறந்தது சென்னையில்தான். மதுரை அளவுக்கு எனக்கு சென்னையும் ரொம்ப ஸ்பெஷல். எத்தனை எத்தனை மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வாழும் ஊர் என்பதை உலகம் இப்போது அறிந்திருக்கும். நட்பு, உதவி... என்றால் எனக்கு மதுரைதான் நினைவுக்கு வரும். தற்போது அதே உணர்வோடு சென்னையையும் பார்க்கிறேன். சென்னையில் வசிக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது’’ என்கிறார் துரைதயாநிதி.

- ம.கா.செந்தில்குமார்