Published:Updated:

விஷாலுக்காக கதகளி பார்க்கலாமா?

Vikatan Correspondent
விஷாலுக்காக கதகளி பார்க்கலாமா?
விஷாலுக்காக கதகளி பார்க்கலாமா?

கடலூரின் மீனவ சங்கத்தலைவரும், கட்டப் பஞ்சாயத்துக்காரருமான தம்பாவுடனான (மதுசூதன் ராவ்) ஒரு சம்பவத்திற்குப் அமைதியாக வேலைக்கு வெளிநாடு சென்று திரும்புகிறார் விஷால். நான்கு நாளில், கேத்தரின் தெரசாவுடன் தனக்கு நடக்க இருக்கும் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்து விட்டு, சென்னைக்கு காதலியுடன் ஜவுளி எடுக்க வந்தவருக்கு, தம்பா கொலை செய்யப்பட்டு விட்டதாக அதிர்ச்சித் தகவல் வருகிறது.

தம்பாவின் மச்சான்கள், போலீஸ் இன்ஸ்பெக்டரும் என பலரும் இதை விஷால்தான் செய்திருக்கக் கூடும் என சந்தேகிக்க அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். தம்பாவின் மனைவி, கொலையாளியை கைது செய்யும் வரை பிணத்தை வாங்கமாட்டேன் என தர்ணா இருக்க, விஷாலை கைது செய்யும் நோக்கில் சென்னையில் இருந்து கடலூருக்கு அழைக்கிறார் இன்ஸ்பெக்டர்.

விஷாலுக்காக கதகளி பார்க்கலாமா?

இதற்கிடையில், தம்பாவின் ஆட்களால் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று விஷாலின் குடும்பம் வீட்டை விட்டு வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊரே கொந்தளிப்பில் இருக்க, கடலூர் வந்து இன்ஸ்பெக்டரை சந்திக்கிற விஷால், சரண்டர் ஆனாரா என்பதையும் கொலையாளி யார் என்பதை நம் பொறுமையை சோதித்து விளக்கி முடிக்கிறார்கள்.

வழக்கம் போல் இல்லாமல் அமைதியான அறிமுகத்துடன் தோன்றுகிறார் விஷால். ஆரம்ப காட்சிகள் ஆர்ப்பாட்டமில்லாமல் இருப்பினும், விஷாலின் பலமே ஆக்‌ஷன் என்று டிரெண்ட் ஆனபின்பும் அவர் கெஞ்சிக் கொண்டே இருப்பது ரசிகனின் பொறுமையை சோதிக்கிறது. கதாநாயகியாக கேத்தரின் தெரசா. மெட்ராஸை விட இதில் பப்ளியாக, இன்னும் அழகாக.

ஒளிப்பதிவாளர் எம்.பாலசுப்ரமணியெம்முக்கு நன்றி. கருணாஸ், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஜெய்பரகாஷ் என்று நட்சத்திரப்பட்டாளம் இருந்தும் ஒருவருக்கும் அழுத்தமான பாத்திரப்படைப்பு ஏதுமில்லை. வலுவற்ற திரைக்கதை. இடைவேளைக்கு முன்பே வில்லன் கொலை நடந்துவிடுகிறது. தவிரவும் ‘அவன் சாக வேண்டியவந்தான். அவனை எவன் கொன்னா என்ன?’ என்ற மனநிலையில் இருக்கும் பார்வையாளனுக்கு ‘யார் கொன்னிருப்பா?’ என்ற சஸ்பென்ஸில் மனம் லயிக்கவில்லை.

விஷாலுக்காக கதகளி பார்க்கலாமா?

ஹீரோ – ஹீரோயின் காதல் காட்சிகளிலும் அவ்வளவு ரொமாண்டிக் இல்லை. விஷால் ஆக்‌ஷனில் இறங்காமல் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதெல்லாம், 'இப்போ அடிதடியை ஆரம்பிக்கிறியா... இல்ல தூங்கட்டுமா?’ என மிரட்டல் விடுக்கிறது தியேட்டர் ஜனம். இன்று நேற்று நாளை, ஆம்பள, தனி ஒருவன் வரிசையில் படத்தின் தலைப்பை தீம் மியூசிக்காக போடுவதில் ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

படத்தின் ஆரம்ப காட்சிகளில், விஷால் சானிடைசர் வைத்துக் கொண்டு கையை சுத்தம் செய்து கொண்டே இருப்பார். இரண்டு மூன்று முறை அதைக் காட்டி, ஏதோ சொல்ல வருகிறார்கள் போல என்று நினைத்தால்.. ஒன்றுமே இருக்காது. இதைப் போலவே படத்தில் பல ஏமாற்றங்கள்.

வலுவிழந்த திரைக்கதை, வீணாக்கப்பட்ட நட்சத்திரப் பட்டாளம், நீளமான சஸ்பென்ஸ் என்று இருந்தாலும், இரண்டு மணி நேரம் மட்டுமே படம் என்பதாலும், விஷாலின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸுக்காகவும் ஒரு சான்ஸ் எடுக்கலாம்தான். விஷாலுக்காக மட்டும் கதகளி பார்க்கலாம்!