Published:Updated:

கதை வேணும் கதை ! : ஹன்சிகா

2011ம் ஆண்டில் தமிழ்நாட்டின் அடுத்த குஷ்பு என்று வர்ணிக்கப்பட்டவர் ஹன்சிகா. இவரது ரசிகர்கள் கோவில் எழுப்ப போகிறோம் என்று சொன்ன போது, அதைத் தடுத்து " மக்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்" என்று கூறி நழுவி விட்டார்.

2011ம் ஆண்டு ஹன்சிகாவிற்கு 'வேலாயுதம்' படம் மட்டுமே ஓரளவிற்கு பெயர் வாங்கி கொடுத்தது. தனுஷுடன் நடித்த 'மாப்பிள்ளை'யும் ஜெயம் ரவியுடன் நடித்த 'எங்கேயும் காதல்' படமும் வரவேற்பை பெறவில்லை.

2012ம் ஆண்டு தமிழ்த்திரையில் கண்டிப்பாக முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறாராம் ஹன்சிகா. சிம்பு நடித்து வரும் 'வேட்டை மன்னன்' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக இல்லாமல், ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தினை பெரிதாக நம்பி இருக்கிறாராம் ஹன்சிகா. 2 பாடல்கள் காட்சிகளுக்காக 10 நாட்கள் வெளிநாட்டிற்கு சென்று படப்பிடிப்பு முடித்து திரும்பி இருக்கிறார்கள். பொங்கல் முடிந்தவுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தினை விளம்பரப்படுத்த இருக்கிறார்கள்.

ஹன்சிகா  இந்த புத்தாண்டு முதல்  ஒரு கொள்கையை கடைப்பிடிக்க இருக்கிறாராம். இனிமேல் வருடத்திற்கு 2  தமிழ் படங்களில் மட்டுமே நடிப்பது என்பது தான் தீர்மானமாம். அதுவும் நல்ல கதையம்சம் உள்ள படமாக இருக்க வேண்டுமாம்.

தீர்மானம் எல்லாம் சரி.. கதை ?