Published:Updated:

நிறைய பேரால் நேசிக்கப்படுவது சுகம் - விஜய் சேதுபதி பேட்டி

நிறைய பேரால் நேசிக்கப்படுவது சுகம் - விஜய் சேதுபதி பேட்டி
நிறைய பேரால் நேசிக்கப்படுவது சுகம் - விஜய் சேதுபதி பேட்டி

நிறைய பேரால் நேசிக்கப்படுவது சுகம் - விஜய் சேதுபதி பேட்டி

சுற்றிலும் பேட்டியெடுக்கும் கேமராக்கள்சூழ அமர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. முகம் முழுக்க சோர்வு. தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதாலோ, என்னவோ குரலில் ஒருவித களைப்பு. ஆனாலும் உடல்மொழியில் உற்சாகமாய் இருக்கிறார் மனிதர். இன்றைய தேதி இளம் ஹீரோக்களில், பரீட்சார்த்தமான வேடங்களை விரும்பிச் செய்யும் நாயகன். பண்ணையாரும் பத்மினியும் இயக்குநருடன் மீண்டும் கைகோர்த்திருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு.

“சேதுபதி. முதல் தடவையா போலிஸ் கெட்டப். பண்ணையாரும் பத்மினியும் நல்ல படமா இருந்தாலும், வெற்றிப் படமான்னு ஒரு குழப்பம் இருக்கற படம். இருந்தாலும் அதே இயக்குநரோட அடுத்த படம், அதுக்கு மாறான ஆக்‌ஷன் ப்ளாட். எப்டி வந்திருக்கு?”

“நல்லா வந்திருக்கு. ஃபேமலி எண்டர்டெய்னர் வித் ஆக்‌ஷன். சாங்க்ஸ்லாம் நெட்ல பாத்து, ஒரு நம்பிக்கையோட வருவீங்க. அதை பூர்த்தி செய்ற படம்.  பரபரப்பான, ஃபேமலி ஒரியண்டட் போலிஸ் ஸ்டோரி. உங்க நேரத்தை வீணடிக்காதுன்னு நான் நம்பறேன்”

நிறைய பேரால் நேசிக்கப்படுவது சுகம் - விஜய் சேதுபதி பேட்டி

“அருண் பத்தி?”

“டைரக்டர் அருணைப் பத்திக் கேட்டீங்கன்னா.. இந்தப் படம் திட்டமிட்டதை விட அஞ்சாறுநாள் முன்னாலயே முடிச்சுட்டோம். அவ்ளோ டிஸிப்ளிண்ட். ஃபேமலி டிராமா, எமோஷனல்ஸ்லாம் ப்யூரா எடுக்கற ஆள். இப்ப ஆக்‌ஷன்ல எறங்கிருக்கார். இன்னைக்கும் பண்ணையாரும் பத்மினியும் படத்தை குறிப்பிட்டுச் சொல்ற நிறைய பேரை சந்திக்கறேன். உயிரற்ற பொருளுக்கு, உயிர் இருக்குன்னு நம்பி இருக்கற ஒரு கேரக்டர். அதை ஹேண்டில் பண்றதுல அருண் தேர்ந்தவர். எந்தப் படமா இருந்தாலும் எப்படி ஓடிச்சுங்கறதவிட எடுக்கப்பட்டிருக்குன்னு பார்க்கறதுதான் முக்கியம்னு தோணுது.  இப்ப ஆக்‌ஷன் படம். இனி இந்த மாதிரி படங்கள்தான் பண்ணணும்னு வருவாங்க அவர்கிட்ட. ஆனா அவர் அதையும் உடைச்சுட்டு வேற வேற ஜானர்னு பண்ணுவார்னு எதிர்பார்க்கறேன். பண்ணணும்”

“ரம்யா நம்பீசன்?”

“பீட்சால நடிக்கறப்ப நான் யார்னே தெரியாது. ரம்யா அப்பவே நிறைய படம் மலையாளத்துல நடிச்சவங்க.  ரொம்ப கோ ஆபரேடிவ். இந்தப் படத்துக்கு அவர் கமிட் ஆனது எனக்கு சந்தோஷமான விஷயம். அவங்க ஒரு கேரக்டர் பண்ணினா, அதுல நீங்க ரம்யா நம்பீசனை மறந்து கேரக்டரைத்தான் பார்ப்பீங்க. இதுலயும் அப்டித்தான்”

நிறைய பேரால் நேசிக்கப்படுவது சுகம் - விஜய் சேதுபதி பேட்டி

“ஷார்ட் ஃப்லிம் பண்ற புது டைரக்டர்களுக்கு சான்ஸ் குடுக்கறதுல நீங்க முக்கிய இடம் வகிக்கிறீங்க. கதை கேக்கறப்ப புது டைரக்டரான்னு பார்ப்பீங்களா.. இல்ல அவர் பண்ணின ஸ்கிரிப்டை வெச்சு முடிவு பண்ணுவீங்களா?”

“என்ன படம் பண்ணீருக்காங்கன்னு பார்க்கறதும் முக்கியம்தான்.. போடா போடி எனக்குப் பிடிச்ச படம். அந்தப் படம் பண்ணின டைரக்டர்னதும்தான் நானும் ரௌடிதானுக்கு கதைகூட கேட்காம ஒத்துகிட்டேன். மத்தபடி ஒரு புது டைரக்டருக்கு விசிட்டிங் கார்டே, கதையும் அதை அவர் சொல்ற விதமும்தான்”

”ஆரஞ்சுமிட்டாய், பண்ணையாரும் பத்மினியும், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடிதான்.. இப்ப சேதுபதி.. விதவிதமான முயற்சிகள். எப்படி இப்படி?”

“முயற்சி பண்றோம். பார்க்கறவங்களுக்கு பிடிக்கணும். வெற்றி அடைஞ்சா மகிழ்ச்சி. நீங்க சொன்னதுல ஆரஞ்சு மிட்டாய் மட்டும்தான் எக்ஸ்பரிமெண்ட்னு சொல்லலாம். என் வயசுக்கு அந்த வயசான கேரக்டர்ல நடிச்சதும், அதுக்கு வசனம் எழுதினதும் எக்ஸ்பரிமெண்ட்தான். அதுக்கு தயாரிப்பாளருக்குத்தான் நன்றி சொல்லணும். அதையெல்லாம் மீறி ஒரு படம் ரசிகனை சேரணும், அவங்க ரசிக்கணும்னுதான் ஆசை”

“ஒவ்வொரு படத்துக்கும் விதவிதமான பாடிலேங்வேஜ். அப்படீன்னா கேரக்டர்களுக்காக மனிதர்களை அதிகமா அப்சர்வ் பண்ணுவீங். இல்லையா?”

“ஆமாம். எதிர்ல இருக்கறவங்க என்ன சொல்றாங்க, பாடி லேங்க்வேஜ் எல்லாத்தையும் பார்ப்பேன். என்கிட்ட கேள்வி கேட்கறீங்கன்னா, உட்கார்ந்திருக்கறத வெச்சு என்ன மனநிலைல கேக்கறீங்கன்னு யூகிக்க டிரை பண்ணுவேன். எனக்கு வாசிப்பு அனுபவம் கம்மி. நிறைய படிக்கணும்னு ஆசைப்படறேன். கூடிய சீக்கிரம் ஆரம்பிப்பேன். வாசிப்பு மூலமா கத்துக்கலாம், அதுக்கடுத்து ஆட்களை அப்சர்வ் பண்றது மூலமா கத்துக்கலாம். நடிகனுக்கு அது முக்கியமா தேவைன்னு நம்பறேன்.”

நிறைய பேரால் நேசிக்கப்படுவது சுகம் - விஜய் சேதுபதி பேட்டி

”நடிக்கறதுல சேலஞ்ச்னு எதைச் சொல்லுவீங்க?”

“இப்ப நீங்க அடுத்தது என்ன கேள்வி கேட்கப்போறீங்கன்னு தெரியாது. நான் என்ன பதில் சொல்லப்போறேன்னு உங்களுக்குத் தெரியாது. ஆனா சினிமால, எதிர்ல இருக்கறவங்க என்ன சொல்லப்போறாங்கன்னு எனக்குத் தெரியும். ஸ்கிரிப்ட் படிச்சிருப்பேன். ஆனாலும் அது தெரியாதமாதிரி நான் இருக்கணும். அதான் சவால். அதான் நடிப்பு”

“ஃபிப்ரவரில் 19 சேதுபதி ரிலீஸ். இப்பவே உங்க கைல ஆறு படம் ரிலீஸ்க்கு காத்திருக்கு. 2016ல கலக்கப்போறீங்க”

“அப்டிலாம் இல்லைங்க. எனக்கு பயமாத்தான் இருக்கு. தொடர்ந்து என் மூஞ்சியவே பாத்துட்டிருருந்தா போரடிச்சுடுமோன்னு பயம். ஒருவேளை பிடிச்சுப் போச்சுன்னா -ன்னு  சேலஞ்சிங்காவும் இருக்கு. நானும் ஆர்வமாத்தான் இருக்கேன்” 

“உங்களுக்குள்ள ஒரு ரைட்டர் இருக்கார்னு தோணுது. டைரக்‌ஷன் ஆசை உண்டா?”

“எழுதப் பிடிக்கும். இப்ப ஒரு ஷார்ட் ஃப்லிம்க்கு வசனம் எழுதிருக்கேன். டைரக்‌ஷன் ஆசை.. இருக்கு ஆனா அவ்ளோ பொறுப்பு இருக்கற வேலை. அதுக்கு நான் இன்னும் தயாராகல. என்னை அறிமுகப்படுத்தின குருநாதர் சீனுராமசாமி சார். அவர், தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், இப்ப தர்மதுரை பண்றார். அஞ்சு வருஷத்துல நாலு படம். ஆனா அதே அஞ்சு வருஷத்துல, தர்மதுரை எனக்கு பதினாறாவது படம். அப்ப இயக்குநர்னா, படம் முடிஞ்சு அடுத்த படத்துக்கு அவ்ளோ உழைப்பு குடுக்கணும். அதெல்லாம் பண்ணணும்னா, நான் இன்னும் நிறைய கத்துக்கணும்”

நிறைய பேரால் நேசிக்கப்படுவது சுகம் - விஜய் சேதுபதி பேட்டி

“புதுப்பேட்டை இப்ப டிவில போட்டாலும் ‘டேய் விஜய் சேதுபதிடா’ன்னு அடையாளம் கண்டுக்கறாங்க. சின்ன சின்ன வேஷங்கள்ல நீங்க நடிச்சது இப்ப கவனிக்கறாங்க. அந்த, கவனிக்கப்படாத நிலைல இருந்து இப்ப, இந்த இடத்துக்கு வந்தது..இந்த நேரத்துலகூட உங்களை பேட்டி, அது, இதுன்னு கேமரா சூழ வர்றது இதையெல்லாம் எப்டி எடுத்துக்கறீங்க? ப்ரஷரா பார்க்கறீங்களா?”

“சத்தியமா இல்லைங்க. இதுக்காக ஏங்கிருக்கேன். தவம் கெடந்திருக்கேன். நான் யாரோ. இருந்தாலும் முகம் தெரியாத பலர் குழந்தைகள்லேர்ந்து பெரியவங்க வரை, சிரிச்ச முகத்தோட வரவேற்பாங்க. நல்லாருன்னு வாழ்த்தறாங்க. நிறைய பேரால நேசிக்கப்படுவது சுகம், ஆசிர்வாதம். பாரமல்ல”

-பரிசல் கிருஷ்ணா

அடுத்த கட்டுரைக்கு