Published:Updated:

புதிய நியமம் - விமர்சனம்

புதிய நியமம் - விமர்சனம்
புதிய நியமம் - விமர்சனம்

திருஷ்யம் என்ற திரைப்படம் உண்டாக்கிய அதிர்வலைகள், மலையாள திரைப்பட உலகத்தை சற்று புரட்டித்தான் போட்டது. அதே போன்ற ஒரு முயற்சியை நாமும் மேற்கொள்வோம் என மம்முட்டியும் நினைத்தாரோ என்னவோ ! சுரேஷ் கோபியை வைத்து ஏ.கே.சாஜன் உருவாக்கவிருந்த "சாலமன்டே கூடாரம்" மம்முட்டியின் என்ட்ரியால் புதிய நியமமானது.

பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும் அயோக்கியர்களுக்கு பாரபட்சமின்றி மரணத்தை பரிசளிக்க வேண்டும் என்பது தான் "புதிய நியமத்தின்" ஒன் - லைன்.

புதிய நியமம் - விமர்சனம்

சூழ்நிலைகளின் கட்டாயத்தால் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு ஏற்படும் ஓர் அதிர்ச்சி சம்பவமும், அதிலிருந்து மீண்டு வரும் நெகிழ்ச்சித் தருணமுமாக இத்திரைப்படம்,  "திருஷ்யத்தின்" மம்முட்டி வெர்ஷன்.

லூயிஸ் போத்தன் - வாசுகி ஐயர் தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை. கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்த லூயிஸ், கதக்களி நடனக் கலைஞரான வாசுகி ஐயரை காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் அப்பார்ட்மெண்டில் தனிக் குடித்தன வாழ்க்கை.

குடும்ப நல நீதி மன்றத்தில் வழக்குரைஞராகவும், பகுதி நேரமாக தனியார் தொலைக்காட்சியில் சினிமா விமர்சனம் செய்பவராகவும் வலம் வரும் மம்முட்டி, வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகவும், எந்த ஒரு விஷயத்தையும் பாஸிடிவ் எனர்ஜியோடும் பார்க்கும் மனோபாவமும் கொண்டவர். விவாகரத்து வழக்குகளுக்காக தன்னைத் தேடி வரும் நபர்களை பெரும்பாலும் கவுன்சிலிங் செய்து மீண்டும் இல்லறத்தில் இணைத்துவிடுவார்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்தே ஒரு இறுக்கமான மனநிலையோடு இருப்பது, பள்ளிப் பேருந்தில் ஏறும் தன் பெண் குழந்தையை தொட்டு தூக்கும் பேருந்துப் பணியாளரை அதட்டுவது, தன் கணவரை மயக்கி விடுவாரோ என பக்கத்து வீட்டு பெண் நிருபரை வெறுப்பது, என்று தன்னையும், தன் குடும்பத்தைச் சுற்றியும் தவறுகள் நிறைந்திருப்பதாக நெகட்டிவ் சிந்தனைகளில் மூழ்கியிருப்பவர் வாசுகி.

இப்படி இரு வேறு மனநிலைகளைக் கொண்டவர்களின் இல்லற வாழ்க்கை நல்ல முறையிலேயே சென்றிகொண்டிருக்க, ஓர் எதிர்பாரா சம்பவம் வாசுகியை நிலைகுலையச் செய்கிறது. தன் கணவனிடம்கூட சொல்வதற்குப் பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் வாசுகிக்கு, அந்த ஊரில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை விசாரித்து வரும் டி.சி.பி ஜீனாபாய் மீது நம்பிக்கை ஏற்பட்டு, தன் கணவருக்குத் தெரியாமல் அவரைத் தொடர்புகொள்கிறார். வாசுகி இப்படியொரு இறுக்கமான மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டிலேயே முடங்கிக்போகும் நிலை ஏற்படக் காரணமென்ன என்பதை பிளேஷ் - பேக் காட்சிகளில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் மூலம் விவரிக்கிறது திரைக்கதை. செல்போன் உரையாடலின் மூலமாகவே நடந்ததை கேட்டுத் தெரிந்துகொள்ளும் டி.சி.பி. ஜீனாபாய், வாசுகியை நேரில் சந்திக்காமலேயே, ஒரு தோழியாக இருந்து அவருக்கு ஆலோசனையளித்து, ஸ்மார்ட்டான சில முயற்சிகளின் மூலம், அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

புதிய நியமம் - விமர்சனம்

கேரளா என்றாலே பாரம்பரிய வீடு, அதில் வாழும் குடும்ப உறவுமுறை என்பதைத் தாண்டி, அப்பார்ட்மெண்ட்களில் வசிக்கும் மனிதர்கள், லோ-ஹிப் ஜீன்ஸும், பாப் -மார்லியின் உருவம் வரைந்த டி-சர்ட்டும் அணிந்துகொண்டு போதைக்கு அடிமையான இளைஞர்கள் என தற்கால கேரளத்தின் ஒரு சிறிய முகத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தப் படத்தையும் தன் தோலில் தாங்கிச் செல்வது ஹீரோயின் கதாபாத்திரமே என்று தெரிந்தும், படம் முழுவதும் அண்டர் - பிளே பெர்ஃபார்மன்ஸ் காட்டியிருக்கிறார் மம்முட்டி. இப்படி ஒரு சாதாரணமான கதாபாத்திரத்திற்கு மம்முட்டியை எதற்க்கு நடிக்க வைக்க வேண்டும் என்று நாம் யோசிக்கும்போதே, கிளைமாக்ஸ் காட்சிகளில் கொடுக்கும் அதிரடி ட்விஸ்டுகளின் மூலம், மெகா ஸ்டார் தன் பங்களிப்பை சுவாரஸ்யப்படுத்துகிறார்.

நிஜத்தில் மனிதருக்கு 64 வயது ஆகிறதென்று அவரே சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். கல்யாணதுக்கு மட்டும் பல லட்சம் செலவு செய்வாங்க.. ஆனா டைவர்ஸ்னு வந்துட்டா பத்து பைசா செலவு பண்ண, பத்து மாசம் யோசிப்பானுங்க என்று படம் முழுவதும் கலகலப்பாகவே இருக்கிறார்.

கேரளாவில் வசிக்கும் தமிழ் ஐயர் வம்சத்தைச் சேர்ந்த பெண்மணியான தன் கதாபாத்திரத்திற்கு, தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார் நயன்தாரா. மாயா, நானும் ரவுடிதான் படங்களைத் தொடர்ந்து இதிலும் அவருடைய பெர்ஃபார்மன்ஸ் அசத்தல்.

புதிய நியமம் - விமர்சனம்

குறைந்த அளவிலான நடிகர்கள், ஒரே மாதிரியான லொகேஷன்கள் என கிடைத்திருக்கும் சிறிய கிரவுண்டையும் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ். படத்திற்கு பக்கபலமாக இருப்பது விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு. முன்பாதியில் போரடித்த கோபி சுந்தரின் பின்னணி இசை, இடைவேளைக்குப் பிறகு தடதடக்க வைக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி மலையாௐளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த "திருஷ்யம்" திரைப்படத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதே மாதிரியான ஒரு திரில்லர் டிரீட்மென்டை சினிமாவாக்கியிருக்கும் தைரியத்திற்காகவே இயக்குனர் ஏ.கே சாஜனை பாராட்டியாக வேண்டும்.

ஆனால் படத்தின் மையமே "பிளாஷ் - பேக்கில்" என்ன நடந்தது என்று எதிர்பார்ப்பில் இருக்கும்போது, அதை இன்னும் சற்று பரபரக்க வைத்திருக்கலாம். ஆங்காங்கே இடரும் ஒரு சில லாஜிக் குறைபாடுகளால், திருஷ்யம் ஏற்படுத்திய பிரமிப்பு இதில் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றாலும், திரைக்கதை சொன்ன விதமும், அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்டுகளும் நம்மை ஆர்ப்பரிக்க வைக்கின்றன.

மம்முட்டி, நயனுக்காகவும், தெளிவான திரைக்கதைக்காகவும் புதிய நியமத்தை நிச்சயம் ரசிக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு