Published:Updated:

விசாரணை ஹீரோவும் விஜய், அஜித் மாதிரிதான் - சாரு நிவேதிதா பேச்சு!

Vikatan Correspondent
விசாரணை ஹீரோவும் விஜய், அஜித் மாதிரிதான் - சாரு நிவேதிதா பேச்சு!
விசாரணை ஹீரோவும் விஜய், அஜித் மாதிரிதான் - சாரு நிவேதிதா பேச்சு!

நேற்று, 24 ஃபிப்,  விசாரணை திரைப்படம் குறித்த ஒரு கருத்துரை மற்றும் கலந்துரையாடல், வெற்றிமாறன் முன்னிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, லீனா மணிமேகலை, அஜயன் பாலா சித்தார்த், பாமரன் மற்றும் சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இயக்குநர் பாரதிராஜா தலைமையேற்றார். இதில் பேசிய சாரு நிவேதிதா ‘இந்தப் படம் ஒன்றும் மாற்றுப்படமல்ல’ என்கிற ரீதியில் தன் கருத்தை முன்வைத்தார்.

விசாரணை ஹீரோவும் விஜய், அஜித் மாதிரிதான் - சாரு நிவேதிதா பேச்சு!

அவர் பேசியதன் சுருக்கம்:

“படம் பாத்து உண்மையத்தான் சொல்லணும்னு வீக்னெஸ் எனக்கிருக்கு. அப்டி எழுதறப்ப உயிர்மை ஆஃபீஸ் போன் பண்ணி சாரு கெட்டவன்கறாங்க. மேடைல கை குடுத்தா உதறிட்டு போய்டறாங்க. இதுனால ப்ரச்னைகள், கமலோட சண்டைன்னெல்லாம் போய்ட்டதாலயே படம் பார்க்கறதில்ல. விசாரணையையும் பாக்கல. ..  

வெற்றிமாறனோட மத்த படம் எல்லாம் பார்த்து, பாராட்டி எழுதிருக்கேன். ஆனா திட்னாதான் போய் சொல்லுவாங்க. பாராட்னா சொல்ல மாட்டாங்க. பாரதிராஜாவோட பொம்மலாட்டம் வரைக்கும் எல்லா படம் பத்தியும் பெரிய ஆராய்ச்சிக்கட்டுரை புரியற மாதிரி ரொம்ப பாரட்டி எழுதிருக்கேன். அதை சொல்ல மாட்டாங்க.

இந்தக் கூட்டத்துக்கு வரணும்னு, நேத்துதான் படம் பார்த்தேன். பாத்துட்டு வர்லன்னு சொல்லீட்டேன்.  ‘நான் வெற்றிமாறனோட ரசிகன். இந்தப் படம் குறித்து எனக்கு வேறு கருத்துகள் இருக்கு’ ன்னுட்டேன். ‘இல்ல கொஞ்சம் பாலிஷ்டா பேசிடுங்க’ன்னு சொன்னார். நான் வாங்கின அடியெல்லாம் ஞாபகம் வந்துச்சு. பல் கூட ஒடைஞ்சிருக்கு. பெருமாள் முருகனோட நாவல் அப்டி ஒண்ணும் நீங்க எதிர்க்கற அளவுக்கு இல்லைன்னதுக்கு பெரிய ப்ரச்னையாகி, போலீஸ் பாதுகாப்பெல்லாம் கேட்க வேண்டி வந்துச்சு. கருத்து சுதந்திரம் பத்தி பேசவே சுதந்திரம் இல்லை. இங்க கருணாநிதி, ஜெயலலிதாவகூட க்ரிடிசைஸ் பண்லாம். சினிமாங்கறது மதம். திட்னா கோச்சுக்குவாங்க.

விசாரணை படம் பத்திக் கேட்டீங்கன்னா, அது ஒண்ணும் மாற்று சினிமா அல்ல. அதுல வர்ற போலீஸ் நம்ம மண்டைலதான் இருக்கான். நிர்பயா கேஸ்ல மாட்ன 5 பேர் நம்மகிட்ன மாட்னா, நாமளும் அவங்களை அடிச்சு துவைப்போம். வன்முறையை ரசனையா காட்டி பாமர ரசனைய தூண்டி விடறாதலயே ஒரு சினிமா மாற்று சினிமா ஆகிடாது. பல காட்சிகள் செயற்கையா இருக்கு. ஒண்ணு சொல்லணும்னா, லாடம் கட்ற சீன். அப்டி லாடம் கட்னா நடக்கவே முடியாது. அவ்வளவு ஏன், ஒரு அறை பலமா வாங்கினா, ரெண்டு நாள் ஆகும் இயல்புக்கு வரதுக்கு. மாற்றுசினிமான்னு சொல்றதுல வர்ற ப்ர்ச்னை இதான். விஜய் படத்துக்கும் இதுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. இதுல வர்ற ஹீரோ விஜய் மாதிரிதான்.  அந்தப் போலீஸ் அடிக்க அடிக்க நிமிர்ந்து நிக்கறான்ல ஹீரோ, அதான் எம்ஜியார், விஜய், அஜீத். ஒவ்வொரு டெரரரிஸ்டும், போலீஸ்கிட்ட மாட்டற, எதிராக சொல்லப்படற ஆட்கள் அடி தாங்காம போட்டுக் குடுத்துடுவாங்கங்கறதுதான் நிஜம். அதுனாலயேதான் அவங்க சயனைடு குப்பியோடவே திரிவாங்க.

விசாரணை ஹீரோவும் விஜய், அஜித் மாதிரிதான் - சாரு நிவேதிதா பேச்சு!

ஏழைகள திட்னா ஒத்துக்க மாட்டாங்க. அதுனாலயே இதைப் பாராட்ட வேண்டிய படமா பார்க்கறாங்க. ஆனா நான் இதை மாற்றுசினிமாவா பாக்க மாட்டேன். இந்த படத்தின் இசைதான் இப்டி இருக்க்ககூடாதுங்கறதுங்கறதுக்கு மாடல். அவ்ளோ அடி வாங்கறப்போ வயலின் ஓடுது. இசை, மாற்று சினிமா, ஸ்டேட் வயலென்ஸ் எப்டி இருக்குன்னு பார்க்க கோர்ட்னு ஒரு மராட்டி ஃப்லிம் இருக்கு. அதப்பாருங்க. விசாரணை பேட் ஃப்லிம் - இதற்கான மாற்று ‘கோர்ட்’

போலீஸை மட்டும் சொல்லி தப்பிச்சுக்கற மாதிரி நாம பண்ணக்கூடாது. சமூகம் எப்டி இருக்குன்னும் பார்க்கணும். காந்தி யுனிவர்சிடில ப்ரொஃபசரா இருந்த, ஒரு 85 வயசான காந்தியவாதி பஸ்ல வர்றப்ப அவர்கிட்ட இருக்கற செல்ஃபோன், பர்ஸ், பின் நம்பர் எழுதிவெச்ச சீட்டெல்லாம் எடுத்து 30000, 40000 திருடிடறாங்க கூடவே பயணிச்ச 30 வயசுப் பெண்மணி. சமூகமே இப்படிப்பட்ட பல வன்முறைகளைக் கொண்டிருக்கு. அதையும் நாம பார்க்கணும்.

இந்தப் படத்துக்கான என் கருத்தே இது, என்பதைத் தவிர.. நான் இன்னும் வெற்றிமாறன் ரசிகன்தான்” என்று முடித்துக் கொண்டார்.

விழாவில் பேசிய எஸ்.ராமகிருஷ்ணன், பாரதிராஜா ஆகியோர் படத்தைப் புகழ, லீனா மணிமேகலை, சாரு நிவேதிதா ஆகியோர் தங்களது மாற்றுப் பார்வையைப் பதிவு செய்தனர்.  எழுத்தாளர் எஸ்.ரா ‘மனித உரிமைகள் பேசும் இந்தப் படம், மனித உரிமைக்கான பகுதியில் விருது பெற்றதே மகிழ்ச்சியான விஷயம்’ என்று சொன்னதோடு இன்னொரு கதையையும் பகிர்ந்து கொண்டார்.

“படம் பார்த்துவிட்டு வரும்போது எழுத்தாளர் பாரத இந்து ஞாபகத்திற்கு வந்தார். நாடக ஆசிரியர். அவர் எழுதின ஒரு நாடகம் என்னன்னா, ஒரு சுவர் கட்றாங்க. அப்ப ஒரு அழகான பொண்ணு போறா. அதைப் பார்த்துட்டு போன கொத்தனார், சுவரை சரியா கட்ல. சுவர் விழுந்து சிலருக்கு காயமாகுது. நீதி விசாரணை நடக்குது. கொத்தனார் சொல்றார், ‘பெண்தான் குற்றவாளி’ன்னு. பெண் சொல்றா ‘மந்திரிதான் விழாவுக்கு அழைச்சார் அவர்தான் குற்றவாளின்னு. அரசன் மந்திரியை தூக்குல போடச் சொல்றார். மக்கள் முன்னாடி தூக்குப் போட தயாராக, தூக்குகயிறை விட, மந்திரி கழுத்து பெரிசா இருந்தது. உடனே மன்னன் இந்த கயிறு யாருக்கு பொருந்துதோ அவனைத் தூக்குல போடுங்கன்னாராம். ஆக, அரசு தண்டிக்கணும்னு நெனைச்சா காரணம் கண்டுபிடிச்சுடும். நாம ஒண்ணுமே பண்ண வேண்டியதில்ல”

விசாரணை ஹீரோவும் விஜய், அஜித் மாதிரிதான் - சாரு நிவேதிதா பேச்சு!

கருத்துரையில் ‘இதற்கு முன் பல படங்கள் வெனிஸ் திரைவிழாவில் கலந்து கொண்டிருக்கிறதே’ என்று லீனா எழுப்பிய கேள்விக்கு ‘வெனிஸ்ல இருந்து வந்த அழைப்புல இருந்ததைத்தான் நான் சொன்னேன் என்று ஏற்புரையில் விளக்கம் கொடுத்த வெற்றிமாறன், ‘ஒரு படம் சிறந்த படைப்பா வரணும்னா உன்னை ஒரு கருவியா பயன்படுத்தி அது தனக்குத் தேவையானதை தேடிக்கும்னு பாலுமகேந்திரா சொல்லுவார். அந்த விதத்துல நான் இந்த படம் இயக்கிய ஒரு கருவின்னுதான் நெனைக்கறேன்’ என்றும் கூறினார்.

விழா ஏற்பாட்டாளர் வேடியப்பனிடம் பேசியபோது, ‘நிகில் முருகன் உள்ளிட்ட பலரும் இதைக் கொண்டு சென்றதால் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கூடிய நல்லதொரு கூட்டமாக அமைந்தது’ என்றார். ஆனால் கருத்துரை, கலந்துரையாடல் என்பதில் நேரம் போதாமையால் கருத்துரை மட்டுமே நடந்தது என்றும், ‘சீக்கிரம் கலந்துரையாடல் மாதிரி ஒண்ணு நடத்தணும். இந்தப் படம் குறித்து கேள்வி கேட்க, பேச மாணவர்களுக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும் ஒரு வாய்ப்பா அதைப் பண்ணணும்’ என்று வெற்றிமாறன் குறிப்பிட்டதாகப் பகிர்ந்து கொண்டார். ஆக, விரைவில் இன்னொரு கலந்துரையாடலை எதிர்பார்க்கலாம்.

-சத்ரியன்