Published:Updated:

கணிதனின் கணக்கு சரியாக வருகிறதா? - கணிதன் விமர்சனம்

கணிதனின் கணக்கு சரியாக வருகிறதா? - கணிதன் விமர்சனம்
கணிதனின் கணக்கு சரியாக வருகிறதா? - கணிதன் விமர்சனம்

அதர்வா, கேதரீன் தெரசா, பாக்யராஜ், கருணாகரன், ஆடுகளம் நரேன், தருண் அரோரா  ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநராக இருந்த டி.என். சந்தோஷ் இயக்கி இருக்கும் படம் கணிதன்.

டி.ஆர்.பி-யில் கடைசி இடத்தில் இருக்கும் ஒரு சாதாரண சேனலின் ரிப்போர்டர் அதர்வா. பிபிசி-யில் வேலை செய்ய வேண்டும் என்ற அவரது லட்சியம் கைகூடும் வேளையில், போலிச் சான்றிதழ் மூலம் வாங்கிய கடனுக்காக அவரை கைது செய்கிறது போலீஸ். பெருத்த அவமானத்திற்குப் பின், ஜாமீனில் வெளிவரும் அதர்வா என்ன செய்கிறார் என்பதே... கணிதன்!

கணிதனின் கணக்கு சரியாக வருகிறதா? - கணிதன் விமர்சனம்

அதர்வாவுக்கு ஏற்ற கதாபாத்திரம். காதலிக்கும்போது மட்டும் கொஞ்சம் ஸ்டீரியோடைப். மற்றபடி ஆக்‌ஷன் காட்சிகளிலும், சிபிஐ ரேஞ்சுக்கு எல்லாவற்றையும் தோண்டித் துருவும் காட்சிகளிலும் துறுதுறு. கேத்தரின் தெரசா வீட்டு பெட்ரூமில் உடைகளைக் கழட்ட, திடீரென்று கேத்தரினின் நண்பிகள் எல்லாரும் வந்துவிட அவர் கேட்கும் கேள்விக்கு செம க்ளாப்ஸ். கேத்தரின் தெரசா... மெட்ராஸில் மெலிந்த மல்லிகையாய் வந்தவர் கதகளிக்குப் பின், இதிலும் குண்டுமல்லியாய் கவர்கிறார். கொடுத்த சம்பளமெல்லாம் பாடல் காட்சிகளில் அவர் ஆடிய ஆட்டத்துக்கே போய்விட, நடிக்கணுமா என்ன என்று கேட்டிருக்கிறார்.

இயக்குநர், ஏ.ஆர்.முருகதாஸின் அசிஸ்டெண்ட் என்பது காட்சிக்குக் காட்சி நிரூபிக்கிறார். படு சிக்கலாக ஒவ்வொரு  காட்சிகளையும் பின்னிய இவரது திரைக்கதையில் ரமணா, கத்தி, துப்பாக்கி என்று பல படங்கள் வந்து வந்து போகிறது. ஆனாலும் அலுப்பு தட்டாத வண்ணம் இருக்க மிகவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. பொதிகையில் பணிபுரியும் அப்பா, தன் மகன் பற்றிய பெருமிதச் செய்தியை படிக்கும் காட்சி, பழசாயிருந்தாலும் நச்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவுக்கு டபுள் ட்யூட்டி. பாடல் காட்சிகள், சேஸிங் காட்சிகள் என்று பல டாஸ்குகளை சமாளித்திருக்கிறார். பாடல்கள் இசை ட்ரம்ஸ் சிவமணி. யப்பா சப்பா மட்டும் தேறுகிறது. பின்னணி இசையில் சின்னா ’கைய எடுக்க மாட்டேன் பாத்துக்கிடுங்க’ என்று கீபோர்டிலேயே தவம் கிடந்திருக்கிறார். வில்லன் தருண் அரோரா, உடல்மொழியில், பார்வையில் அசத்தும் அவர் ஆய் ஊய் என்றால் கண்ணில் படுபவர்களையெல்லாம் சுடுகிறார். யாருமே கேள்வி கேட்பதில்லை அவரை.

கணிதனின் கணக்கு சரியாக வருகிறதா? - கணிதன் விமர்சனம்

இந்த மாதிரியான கதையில் ஹீரோவின் நண்பன், ஹீரோவின் அப்பாவின் நண்பன் என்ன செய்வார்களோ அதைச் செய்திருக்கிறார்கள் கருணாகரனும், பாக்யராஜும்.  பாக்யராஜ் சொல்லும் ‘இந்தக் காலத்துல தப்பு பண்ணினவங்களை விட்டுடுவாங்க. ஆனா அதத் தட்டிக் கேட்டவங்களை சும்மா விடமாட்டாங்க’ வசனத்துக்காக, இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

லாஜிக்குகள் என்று பார்த்தால், படத்தில் அதர்வாவை அரெஸ்ட் செய்ய வரும்போது கோவம் கொள்ளும் போலீஸ், அதற்குப் பிறகு என்ன செய்கிறதென்றே தெரியவில்லை. அதைப் போலவே... சரி விடுங்க பாஸ். அதெல்லாம் பார்த்தா ஆகாது.

இடைவேளையிலேயே அதர்வா எங்கே தப்பு நடந்திருக்கிறது, தான் ஏன் அரெஸ்ட் செய்யப்பட்டோம் என்று கண்டுபிடித்து, மீடியாக்கள் எல்லாம் ‘போலிச் சான்றிதழ் மோசடியை அம்பலப்படுத்துகிறது. இதற்கப்புறம் என்ன செய்யப் போகிறார்கள் என்று நம்மைப் போலவே, இயக்குநரும் பயந்திருக்கிறார். 20 நிமிடம் கழித்துதான் படம் ஆரம்பிக்கிறது. அதைப்போலவே, 20 நிமிடங்களுக்கு முன்பே முடிந்துவிடுகிறது. சரி, படத்தின் ஆரம்ப காட்சிகள், எண்டர்டெய்ன்மெண்டுக்காக என்று எடுத்துக் கொண்டாலும் இறுதி நிமிடங்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் ட்ரிம் செய்திருந்தால் டிஸ்டிங்ஷன் எடுத்திருப்பான் இந்தக் கணிதன்!