Published:Updated:

`அன்பே சிவம்’ படத்துல கமல் போட்டிருந்த கண்ணாடிக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு! - #60YearsOfKamal

Kamal Haasan
Kamal Haasan

கமல் ஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதற்கான சிறப்புக் கட்டுரை!

கமல் ஹாசனுக்குக் கொடுக்கப்பட்ட நம்மவர் என்கிற பெயர், வெறும் சாதாரண சொல்லோ பெயரோ அல்ல. அது ஓர் உணர்வு. பொதுவாக சினிமாவில் 'ஹீரோ' என்பவருக்கு ஓர் அங்கீகாரமும், பிம்பமும் உண்டு. படத்துடைய கதாநாயகனுக்கு முக்கியமான குணாதிசியமாகக் கருதப்படுவது, 'தப்பை தட்டிக் கேட்கும் ஒருவர்'. இதுதான் கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் உச்சக்கட்ட அங்கீகாரம். ஆனால் அதைத் தகர்தெறிந்து நம்மவரானவர், கமல். அந்தச் சொல்லுக்கான அர்த்தம் அந்த வார்தையிலே உள்ளது. 'உலக நாயகன்' என்ற பட்டத்தைவிட 'நம்மவர்' என்பதுதான் அவருக்கான சரியான அடையாளம். கதாநாயகனுடைய பிம்பத்தை உடைத்து நம்மில் ஒருவனாக சினிமாவில் இவர் தோன்றி 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன!

``சின்னச் சின்ன தப்புக்கு எல்லாம் சாமி கண்ணைக் குத்திடும்னு சொன்னா, உலகமே குருடாதான் சுத்தணும்!"
கமல் ஹாசன்

நம்மைத் திரையில் காணும்போது எந்தளவிற்கு ஒரு சந்தோஷம் எழுமோ நம்மில் ஒருவனை, நம்முள் இருக்கும் ஒருவனை திரையில் காணும்போது மனம் அளவில்லா ஆர்ப்பரிப்பைப் பெறும். அப்படி நம்முள் ஒருவனாக, நம்மில் ஒருவனாக இவர் தோன்ற ஆரம்பித்த படம், `களத்தூர் கண்ணம்மா'. இவருக்குக் கடவுளின் மீது நம்பிக்கையில்லை. ஆனால், தடுக்கிவிழப்போகும் பெருமாளை தாங்கிப் பிடிக்கும் ரங்கராஜ நம்பியாக நம் முன் அவதரிப்பார். காந்தி மீது இவருக்கு எந்த கோபமும் தொடர்பும் இல்லை. காந்தியின் பேரன் என சொல்லிக் கொள்வதில் தனி கர்வம் கொண்டவர் கமல். ஆனால், அவரைக் கொல்லத் துடிக்கும் கோட்சேவின் பணியாளாக, பின் விஷயம் தெரிந்து திருந்தும் சாமானியனாக வருவார். தனக்கு முரண்பாடான கதைகளிலும் கமல் நடித்திருக்கிறார் என்பதற்கு இவையெல்லாம் சாட்சி. ஆனால், தன் கொள்கைக்கு நேரெதிர் கருத்துக்களை கொண்ட படங்களை கமல் பெரும்பாலும் ஏற்பதில்லை. ஜென்டில்மேன் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்தது ஒரு சிறு உதாரணம். ஒரு நல்ல நடிகனுக்கு அடையாளம் முதலில் அவர் வாங்கும் விருதுகள். நடிகர்கள் அதைப் பெறும்போதும், கையில் பிடிக்கும்போது ஒருவித பெருமிதத்துடன் சிரிப்பார்கள். ஆனால், இவர் வாங்கும் விருதுகளுக்கு உயிரிருந்தால் அது பெருமிதத்துடன் சிரிக்கும். இப்படிப்பட்ட கலைஞனின் கையில் நாம் இருக்கிறோம் என!

பல வருடங்களாக சினிமா என்பது ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. அதற்குப் பின் சில அரசியல் ஆதாயங்கள் அவரவர் படங்களில் இடம்பெற ஆரம்பித்து. இன்னும் சில படிகட்டுகள் தாண்டி தன்னுடைய சக நடிகர்களை அவரவர் படத்தின் வாயிலாக பாடல்களிலோ, வசனங்களிலோ விமர்சித்தும்கொண்டார்கள். இதற்கெல்லாம் அப்பாற்பட்டது சினிமா என்பதைக் கலையின் புரிதலோடு ஒவ்வொரு படைப்புகளிலும் வழங்கினார் கமல். தமிழ் சினிமாவின் 'பரிசோதனை எலி'யும் இவரே, அந்த முயற்சியைச் செய்து பார்க்கும் விஞ்ஞானியும் இவரே. பொதுவாக ஏதோவொரு விஷயத்தை முதலில் பரிசோதித்துப் பார்க்கும்போது அது தோல்வியில்தான் முடியும். பின் நாள்களில்தான் அதைச் சாதனையாகக் கொண்டாடுவார்கள். சோதனையில் பயணித்து சாதனையில் முடிந்த படைப்புகள், தமிழ் சினிமாவில் ஏராளமாக உள்ளது. அப்படியான படைப்புகளின் பட்டியலில் கமலின் படங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
இந்தியன்

எதையும் முன்கூட்டியே சிந்திக்கும் கெட்டபழக்கம் கமலுக்கு உள்ளது. அப்படி இவர் யோசித்து எடுத்த படங்களில் முக்கியமான ஒரு படைப்புதான் 'ஹேராம்'. கலைத் துறையின்படி ஒவ்வொரு ஜானர்களிலும் ஒவ்வொருவர் இருப்பார். நகைச்சுவை என்று சொல்லும்போது சிலருக்கு சார்லி சாப்ளின், சிலருக்கு லாரல் அண்ட் ஹார்டி, சிலருக்கும் வடிவேலு. சிரிக்க வைக்க சில கலைஞர்கள், சிந்திக்க வைக்க சில கலைஞர்களை என நம்முடைய உணர்வுக்குத் தீனி போடுவதற்கு தகுந்த சில கலைஞர்களை நாம் தேடியிருப்போம். ஆனால், கமலைப் பொறுத்தவரை இவருக்கு வரையறையே கிடையாது. கூண்டுக்குள் சிக்காத கலைக் கிளி, கமல். விஞ்ஞானி, வைணவர், அமெரிக்கப் பிரதமர், களரி வீரன், சி.ஐ.ஏ வில்லன், காவல்துறை அதிகாரி, பாட்டி, பஞ்சாப் பாடகர், ஏழடி கலிஃபுல்லா, புரட்சியாளன்... எனப் பத்து அவதாரங்களெடுத்த விஸ்வரூபனாக இவரை ’தசாவதாரம்’ படத்தில் பார்த்திருப்போம்.

"மதங்கொண்டு வந்தது சாதி; இன்றும் மனுஷனைத் துரத்துது மனு சொன்ன நீதி!"
கமல்ஹாசன்

ஆனால், இவர் திரைத்துறையில் எத்தனை அவதாரங்கள் எடுத்திருக்கிறார் என்பது தெரியுமா. குழந்தை நட்சத்திரத்தில் ஆரம்பித்து உதவி இயக்குநர், மேடை அமைப்பு, நடன இயக்கம், பின்னணி பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் எனத் திரைத்துறையிலே பத்து அவதாரங்களை எடுத்தவர். 'இது எப்படி பதிலாவும்?' என கேலியாக இவர் கேட்டால், நடிகர் என்ற பெரிய அவதாரமும் இவர் தன்னுடைய படைப்புகளில் எடுப்பார். இது கண்டிப்பாக 'இந்தியன் 2' வரை தொடரும். ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறைக்கான தீர்க்கதரிசி என்று ஒருவர் இருப்பார். ஆனால், இவர் எல்லாத் துறைகளிலும் கால் பதித்த சகலகலா வல்லவன். அந்தத் துறையைச் சேர்ந்தவருக்கே இவரைக் கண்டால் பொறாமையாக இருக்கும் அளவிற்கு வல்லமை படைத்த ஆளென்றால் அது கமல்தான்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
அன்பே சிவம்

இவர் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில்தான் ரஜினிகாந்த்தும் இமய மலையின் உச்சியில் இருந்தார். பல தடைகளைக் கடந்து சூப்பர் ஸ்டாருமானார். தமிழ் சினிமாவின் சாபக்கேடாக இருப்பது ஒப்பீட்டுச் சண்டை. இது சில வகையில் ஆரோக்கியமாக இருந்தாலும், பல வகையில் தேவையற்ற வாக்குவாதங்களையும், சண்டைகளையும் மட்டுமே கிளப்பிவிடுகிறது. முக்கியமாக சமூக வலைதளங்களில் இதன் வீச்சு இன்னும் அதிகமாக உள்ளது. எம்.ஜி.ஆர் - சிவாஜியில் ஆரம்பித்து ரஜினி - கமல், விஜய் அஜித், சிம்பு - தனுஷ்... என இவர்கள் வழியே, தற்போதுவரை பயணித்து வந்துகொண்டிருக்கிறது. ஆனால், அவரவராக இருப்பது அவரவருக்குத்தான் தெரியும். இவ்வளவு ஏன். ரஜினிகாந்த் கமலைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில், "நான் 'அவர்கள்' பட ஷூட்டிங் சமயத்துல வெளியில சும்மா உட்கார்ந்திருந்தேன். கே.பி சார் என்னைக் கோபமா கூப்பிட்டு 'என்னடா தம் அடிக்கப் போனியா. கமல் நடிச்சிட்டிருக்கான் அங்க பாருடா. அப்போதான் உனக்கு நடிப்பு நல்லா வரும்' "னு என்கிட்டச் சொன்னார். இப்படித்தான் இருவருக்குமான நட்பு உள்ளது.

தன்னுடைய சொந்த விஷயத்தை ஒருபோதும் கமல் தன்னுடைய படைப்புகளில் பேச மாட்டார். கதையும் கதாபாத்திரமும் எதை வழியுறுத்துமோ அதை பாரபட்சமே பார்க்காமல் வழங்குவார். 'கடவுள் இல்லைனு சொல்லல. இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்' என நாத்திகத்துக்கு புது விளக்கம் கொடுத்தவர், இவர். ஆனால், இவர் ஆத்திகனாக எத்தனை படத்தில் நடித்திருப்பார்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

அதே சமயம் இவர் மிகப் பெரிய புத்திசாலியும்கூட. உதாரணத்திற்கு 'அன்பே சிவம்' படத்தைச் சொல்லலாம். படத்தில் இவரது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் காட்சி எக்கச்சக்கமாக இருந்தாலும், படத்திற்காக இவர் செய்த புத்திசாலித்தனத்தை இங்கே பகிர்கிறேன். படத்தில் இவர் அணிந்திருக்கும் கண்ணாடியின் பவர் -10. சாதாரணமாக அப்படியெல்லாம் இதை அணிந்து, பார்த்து, நடித்துவிட முடியாது. ஆனால், கேமராவின் ஃப்ரேமில் அந்தக் கண்ணாடியும் உள்ளே இருக்கும் கண்களும் தத்ரூபமாகத் தெரிய வேண்டுமென்பதற்காக, +10 லென்ஸை தனது கண்களில் அணிந்து ஈக்குவல் செய்து நடித்தவர், கமல்.

குறிப்பாக இவருக்கு வழங்கப்பட்ட 'ஆண்டவர்' என்ற பெயருக்கே தனி விளக்கம் கொடுக்கலாம். இவருக்கு ஆண்டவர் என்ற பெயரை வழங்கியது வேறு யாரோ இல்லை, இவரேதான். இவரது படங்களில், தன்னைத்தானே கடவுள் என்று பல இடங்களில் உணர்த்துவார். சில சமயம் வசனங்கள் வாயிலாகவும், சில சமயம் கேமராவின் ஃப்ரேம்களின் வாயிலாகவும் உணர்த்திக்கொண்டே இருப்பார்.

``அநாதைகள் கடவுளின் குழந்தைகள் எனில், குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் கடவுளுக்கு!"
கமல் ஹாசன்

'நானும் கடவுள்தான்' என அன்பே சிவத்தில், 'எங்க அம்மாகிட்ட சொல்லியிருக்கேன். நீதான் என்னுடைய கடவுள்’ என வசூல் ராஜாவில் ஜாகீர் கமலைப் பார்த்து சொல்வதில் போன்ற சில வசனங்களிலும் சரி, சில ஃப்ரேம்களில் சரி இதை நம்மிடையே வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார். இதே கமல்தான் 'வசூல் ராஜா' படத்தில், 'கடவுள் இல்லைங்கிறான் பார், அவனை நம்பலாம். கடவுள் இருக்குங்கிறான் பார், அவனைக்கூட நம்பலாம். ஆனா, நான்தான் கடவுள்ங்கிறான் பார் அவனை மட்டும் நம்பாத... பூட்ட கேசாகிடுவ' என்று ஒரு வசனம் பேசியிருப்பார். இதை இறுதியில் ஜாகீரைக் காப்பாற்ற முடியாத கமல், இதை நிரூபித்துக் காட்டியிருப்பார்.

கமல் ஹாசன் - ரஜினிகாந்த்
கமல் ஹாசன் - ரஜினிகாந்த்

இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்தான் எத்தனை எத்தனை. ’களத்தூர் கண்ணம்மா’வில் 'செல்வக்' குழந்தை நட்சத்திரமாக அவதரித்த பின் 'அரங்கேற்றம்' தியாகுவாக, 'அவள் ஒரு தொடர்கதை'யின் பிரசாத்தாக, 'சினிமா பைத்தியம்' நடராஜனாக, 'மன்மத லீலை' செய்யும் மதுவாக, '16 வயதினிலே' சப்பானியாக, 'சிகப்பு ரோஜாக்கள்' திலீப்பாக, கல்யாண- ராமனாக, 'வாழ்வே மாயம்' ராஜாவாக, 'மூன்றாம் பிறை' சீனுவாக, 'சகலகலா வல்லவன்' வேலுவாக, 'காக்கிச் சட்டை' முரளியாக, 'புன்னகை மன்னன்' சாப்ளினாக, 'நாயகன்' வேலுநாயக்கராக, 'உன்னால் முடியும் தம்பி' உதய மூர்த்தியாக, 'வெற்றிவிழா' வெற்றிவேலாக,'குணா'வில் குணசேகரனாக, 'நம்மவர்' செல்வமாக, 'இந்தியனி'ன் சேனாபதியாக, 'ஹேராமி'ல் சாகெத் ராமாக, சம்மந்தமாக, ராமசந்திர மூர்த்தியாக, விஸாமாக, சுயம்புலிங்கமாக, உத்தமனாக, மனோரஞ்சனாக நடித்து, தன்னுடைய ஒற்றை உருவத்தை வைத்து எத்தனை பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார்.

இவர் பிறந்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. அதில் கலைக்கென தன்னுடைய 60 வருடங்களை எழுதி வைத்துவிட்டார். இவருடைய 60 வருட கலைப் பயணத்தை சுருங்கச் சொல்வது ரொம்பவே கடினம். இருப்பினும் ஒரு கலைஞனின் பயணத்தை வாழ்த்துவது ரசிகனின் கடமை. வாழ்த்துகள் கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரைக்கு