Published:Updated:

கபாலியின் ஆறு தளபதிகள்

கபாலியின் ஆறு தளபதிகள்
கபாலியின் ஆறு தளபதிகள்

கபாலியின் ஆறு தளபதிகள்

ஆரம்பாகிறது கபாலி ஃபீவர். ரஜினி படம் என்றாலே எதிர்பார்ப்பு கூடும். கோச்சடையான், லிங்காவெல்லாம் பெரிதாகப் பேசப்படாமல் போக, கே. எஸ். ரவிகுமாரா  ஷங்கரா என்றெல்லாம் பேச்சு. படாரென்று அடுத்த ரஜினி பட இயக்குநர் பா.ரஞ்சித் என்று அறிவிப்பு வெளியாகிறது.  இசை சந்தோஷ் நாராயணன். அவ்வளவுதான். இளைஞர் கூட்டத்துக்கு குஷி தொற்றிக் கொள்கிறது. இரண்டே படத்தில் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு. ஸ்டில்ஸ் வெளியாகி, டான் கெட்டப்பில் வயதான வெள்ளைத் தாடியுடன் ரஜினியைப் பார்த்ததும் ‘டைரக்டரே.. சபாஷ்’ என்கிறார்கள் ரசிகர்கள்.

இப்போது கபாலி குழுவில் இருக்கும் ஆறு பேர்களைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம்...

‘அட்டகத்தி’ தினேஷ்

கபாலியின் ஆறு தளபதிகள்


 

தினேஷ்ரவி என்கிற பெயர் மறந்து ‘அட்டகத்தி’ தினேஷ் என்று அழைக்கப்படுகிற அளவு அட்டகத்தியில் அடித்து ஆடிய நடிகர். ஆனால், அட்டகத்தி அவருக்கு முதல்படமல்ல. 2006 ஆம் ஆண்டு வெளியாகி, ஜீவா நயன்தாரா நடித்த ‘ஈ’ படத்தில் சின்னவேடத்தில் நடித்திருக்கிறார். அதன்பின் எவனோஒருவன், ஆடுகளம், மௌனகுரு ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் 2012 இல் வெளியான அட்டகத்தி அவருக்கான வாழ்நாள் அடையாளமாகிவிட்டது. அதற்குப்பின்னர் அவரைத் தேடி ஏராளமான தயாரிப்பாளர்கள் வந்தாலும் அவர் படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருந்தார். அட்டகத்திக்கு அடுத்து குக்கூ, திருடன்போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்றெல்லாம் பவுண்டரி, சிக்ஸர் விளையாடிக் கொண்டிருந்தவர் வெற்றிமாறனின் விசாரணையில் அடித்தது முதல் செஞ்சுரி! இப்போது கைவசம் ஒருநாள்கூத்து, உள்குத்து ஆகிய படங்கள் இருந்தாலும் ரஜினியின் கபாலி படத்தில் முக்கிய வேடமேற்றிருப்பது அவருக்குப் பெரிய பலமாக அமையும்.


‘மெட்ராஸ்’ கலையரசன்

கபாலியின் ஆறு தளபதிகள்


நந்தலாலா, அட்டகத்தி, முகமூடி, மதயானைக்கூட்டம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், எப்படி  தினேஷ் அட்டகத்தி தினேஷ் ஆனாரோ.. அப்படி - அதே ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் இவர்மேல் பெரிய கவனம் விழுந்தது. அதன்பிறகு உறுமீனில் வில்லனாய் வெரைட்டி காட்டியிருந்தார். தற்போது அவரே கதாநாயகனாக நடிக்கும் ராஜாமந்திரி, பட்டினப்பாக்கம் உட்பட சில படங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. மெட்ராஸ் படத்தில் இவருக்குக் கிடைத்த பெயர் மட்டுமின்றி அநத்ப்படத்தில் ரஞ்சித்தோடு ஏற்பட்ட நட்பும் கபாலி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை இவருக்குக் கொடுத்திருக்கிறது. கபாலியில் ரஜினிக்கு மிகவும் நம்பிக்கையான நண்பராக இவர் நடித்திருப்பதால் ரஜினியின் ரசிகர்களுக்கும் இவர் பிடித்த நடிகராக மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

தன்ஷிகா

கபாலியின் ஆறு தளபதிகள்


கதாநாயகியின் தோழி, ஐந்து கதாநாயகிகளில் ஒருவர் என்று தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடங்கிய தன்ஷிகாவின் நடிப்பை நம்பும் வசந்தபாலன், பாலா ஆகியோர் அரவான், பரதேசி ஆகிய படங்களில் நடிக்கும் வாயப்பைக் கொடுத்தார்கள். கொடுத்த வாயப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வேடத்துக்குத் தகுந்த நடிப்பை வெளிப்படுதியதால் அந்தப்படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தன. இதுபோன்ற படங்களுக்கு மட்டுமல்ல மாஞ்சாவேலு, நில் கவனி செல்லாதே ஆகிய படங்களில் நாகரிக மங்கையாகவும் நடித்து வரவேற்புப் பெற்றார். ஆனாலும் அவருக்கு தனிநாயகியாக குறிப்பிடத்தக்க இடம் கிடைக்கவில்லை, கபாலி படத்தில் அவருடைய வேடமும் தோற்றமும் அவருக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருமென்று நம்புகிறாராம். முடியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும் உடனே அதற்கு ஒப்புக்கொண்டு பாப் கட்டிங்கோடு வந்து நின்ற இவரது அர்ப்பணிப்புக்கு, நல்ல எதிர்காலம் உண்டு.


ராதிகா ஆப்தே

கபாலியின் ஆறு தளபதிகள்

கண்ணழகி. மாராத்தியின் மேடைநாடகக் கலைஞராக நன்கு அறியப்பட்டிருக்கும் இவர், இந்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ஏற்கெனவே தோனி, ஆல்இன்ஆல்அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அந்தப்படங்கள் அவருக்கு எவ்வித மரியாதையையும் கொடுக்கவில்லை. தமிழ் ரசிகர்கஈ இவர் பற்றி அறிந்ததெல்லாம் வேறுவகையில்தான். கடந்தஆண்டு அவர் நடித்து வெளியான அகல்யா குறும்படம், இதுவரை நடித்த அவர் படங்கள் எல்லாவற்றைக்காட்டிலும் அவருக்கு மிகப்பெரிய நற்பெயரைக் கொடுத்தது. அதனாலேயே இந்தப்படத்தில் ரஜினிக்கு இணையாக அவர் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இப்போதே அவருடைய நடிப்பைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

ஜான் விஜய்

.

கபாலியின் ஆறு தளபதிகள்


வெர்சடைல் கலைஞன். நகைச்சுவையாகட்டும், குணச்சித்திர நடிப்பாகட்டும், வில்லன் வேடமாகட்டும் சொல்லி அடிக்கும் கில்லி. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உடல்மொழி காட்டும் கலைஞன். ஓரம்போ, பொய்சொல்லப்போறோம் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாகட்டும் கலகலப்பு, தீயாவேலைசெய்யணும் குமாரு போன்ற முழுமையான கமர்ஷியல் படங்களாகட்டும் எல்லாவற்றிற்கும் நான் பொருந்துவேன் என்று சாவல் விட்டு வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். திருடன்போலீஸ் படத்தில் இவர் நடித்த வேடத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் அது நூறோடு நூற்றியொன்றாக ஆகியிருக்கும். அதுபோலவே நேரம் படத்திலும் ‘இன்ஸ்பெக்டர் கட்டக்குஞ்சு’-வாய் சங்கீதம் பாடி சரவெடி நடிப்பை வெளிப்படுத்திய இவர் இடத்தில் இன்னொரு நடிகரை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எவ்வளவு சின்ன வேடத்திலும் தன்னுடைய நடிப்பால் அடையாளம் பெறுவதில் தேர்ந்த இவர்,கபாலி படத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படிப் பயன்படுத்தியிருப்பார் என்று சொல்லவே வேண்டியதில்லை.

கிஷோர்

கபாலியின் ஆறு தளபதிகள்

சமீபகாலத்தில் தவிர்க்கவே முடியாத நடிகர். கன்னட நடிகரான கிஷோரை தன்னுடைய பொல்லாதவன் படத்துக்காக தமிழகத்துக்கு அழைத்து வந்தார் வெற்றிமாறன். அதன்பின் தமிழிலும் அவருக்கு நிறைய படங்கள். வெண்ணிலா கபடிக்குழு, ஆடுகளம் ஆகியன மட்டுமின்றி அவரே கதாநாயகனாக நடித்திருந்த போர்க்களம், ஹரிதாஸ் ஆகிய படங்கள் அவருக்கு மிகுந்த நற்பெயரைப் பெற்றுத் தந்திருந்தன. நாகேஷில் ஆரம்பித்து டெல்லி கணேஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் என்று உடல்மொழியில், நடிப்பில் கலக்கும் எவரையும் பிடித்து தன்னுடைய படத்தில் பயன்படுத்திக் கொள்ளும் கமலஹாசன் தூங்காவனத்தில் இவரை நடிக்க வைத்து இவருக்கான முக்கியத்துவத்தை உணர்த்தினார். கிஷோருடைய தோற்றமும், வேடத்துக்குப் பொருத்தமான மிக இயல்பான நடிப்பும்தான் அவருக்கான பலம். அஜித் (ஆரம்பம்) கமல் (தூங்காவனம்) ஆகியோருடன் கைகோர்த்த இவர் ரஜினியுடன் கபாலியிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கிறார். இதனால், உதவி இயக்குநர்கள் மத்தியில் இவர் கதாநாயகனாக நடிக்கக் கூடிய கதைகள் உருவாகிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

பா.ரஞ்சித் இவர்களை இயக்கும் விதம் நிச்சயம் வேறு விதமாகத்தான் இருக்கும். இந்த தளபதிகளுடன், ரஜினி என்ற ராஜாதிராஜாவும் சேர்ந்து கலக்கப்போகும் கபாலிக்காக  ரசிகர்கள் வெய்ட்டிங்!

அடுத்த கட்டுரைக்கு