Published:Updated:

ஜீவா.. இன்னொரு தடவை இப்படி செய்யாதீங்க ப்ளீஸ்..! - போக்கிரி ராஜா விமர்சனம்

ஜீவா.. இன்னொரு தடவை இப்படி செய்யாதீங்க ப்ளீஸ்..! - போக்கிரி ராஜா விமர்சனம்
ஜீவா.. இன்னொரு தடவை இப்படி செய்யாதீங்க ப்ளீஸ்..! - போக்கிரி ராஜா விமர்சனம்

கொட்டாவிதான் பிரச்சினை ஜீவாவுக்கு. எப்பப் பாத்தாலும் கொட்டாவி விட்டுட்டிருக்கான் என்று ஆஃபீஸிலிருந்து தூக்கி எறியப்பட, சேரும் இன்னொரு ஆஃபீஸிலும் அதே கதை. டாக்டரைப் பார்த்தால், அவர் பெரிதாக ஒன்றுமில்லை என்றுவிடுகிறார். ஊரையே கலக்கும் (?) ‘வில்லன் கூலிங்க்ளாஸ் குணா’ சிபிராஜை, யாரென்று தெரியாமல் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்திவிடுகிற ஜீவாவை, பழிதீர்க்கத் தேடுகிறார் சிபிராஜ்.

இதற்குள் கொட்டாவி விடுகிற ஜீவாவுக்கு, வேறொரு ஸ்பெஷல் பவர் வந்துவிடுகிறது. அதாவது ஜீவா கண்ணை, மூக்கைச் சுருக்கி வாய் கோணி வாயைத் திறந்தால் எதிராளி பத்தடிக்கு பறந்து போய் விழுந்துவிடுகிறார். சிபிராஜ் அரிவாளோடு வெட்ட வர, வாயைத்திறக்கிற ஜீவாவால் அவர் கூலிங்க்ளாஸ் உடைந்து கண்ணில் குத்தி, அவர் விழுந்துவிட அப்போதுதான் 'நமக்கு இப்படி ஒரு சக்தியா’ என்று ஜீவாவுக்கு (நமக்கும்தான்) தெரியவருகிறது.


அதன்பிறகு சிபிராஜ் ஜீவாவைப் பழிவாங்குகிறாரா, ஜீவா சிபிராஜைப் பழிவாங்குகிறாரா, இல்லை இவர்கள் இருவருடன் டைரக்டரும் சேர்ந்து கொண்டு நம்மை பழிவாங்குகிறார்களா என்பதை.... ஆங்.. அதேதான்.
 

ஜீவா. வித்தியாசமான கதாபாத்திரம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஒரு படத்தில் நடிகனுக்கு உடல்மொழி அவசியம் என்பார்கள். இவருக்கு இதில் முகத்தில் மட்டும்தான் வேலையே. கொட்டாவி விடுவது, முகத்தை அஷ்டகோணலாக்கி காற்றாலேயே எதிராளியைப் பறக்க விடுவது என்று இயக்குநர் சொன்னதை, நம்பிக்கையோடு தன்னால் என்ன இயலுமோ அப்படி செய்திருக்கிறார்.
ஹன்சிகாவுக்கு ஐ.டி. ஊழியர் + சமூக சேவகி வேடம். ‘தண்ணியடிக்கிறார்’ என்று டிரெய்லரில் காட்டினார்களே... அதாவது சாலையில் யாரேனும் சிறுநீர் கழித்தால் தண்ணிலாரியை எடுத்துக் கொண்டு போய் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறார். குப்பையைக் கூடையில் போட்டால் பால்கோவா தருகிறார். ஜீவாதானே படத்தோட ஹீரோ? அப்ப அவரைத்தான் லவ் பண்ணனும் என்கிற ரீதியில் பெரிதாக காரணமேதும் இல்லாமல் லவ்வுகிறார்.

ஜீவா.. இன்னொரு தடவை இப்படி செய்யாதீங்க ப்ளீஸ்..! - போக்கிரி ராஜா விமர்சனம்


 

கூலிங்க்ளாஸ் குணாவாக சிபிராஜ். அப்பாவின் மாடுலேஷன் பிள்ளைக்கு. அசால்டாக படத்தைத் தூக்கி நிறுத்துவார் என்று பார்த்தால், ஒரு மொக்கைக் காட்சியில்தான் அவர் அறிமுகமே நடக்கிறது. குருடாக்கி, காமெடியனாக்கி என்று படாதபாடு படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் முடிந்தவரை நடித்திருக்கிறார்.
 

கொட்டாவிக்கு காரணம் வேறு என்று டாக்டர் ‘சூப்பர் பவர் ஆட்கள்’ வீடியோவையெல்லாம் காட்டி விளக்க, எதாச்சும் சொல்லுவாங்க போல என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். திடீரென்று வீட்டிற்கே வந்து ‘நீ யார் தெரியுமா?’ என்று டாக்டர் ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்கிறார். போதிதர்மன் மாதிரி, இதில் அதியன் ஓரி. ப்ரிட்டிஷ் அரசாங்கத்தையே ‘ஊதித்தள்ளிய’ அதியன் ஓரியின் எள்ளுப் பேரன்தான் ஜீவாவாம். என்னது இப்ப சொன்ன கதைல ப்ரிட்டிஷ் காலத்து ஃப்ளாஷ்பேக்கா என்கிறீர்களா? அதே குரல்தான் தியேட்டரிலும் கேட்கிறது.
 

ஜீவா.. இன்னொரு தடவை இப்படி செய்யாதீங்க ப்ளீஸ்..! - போக்கிரி ராஜா விமர்சனம்

வித்தியாசமான கதை என்றால் திரைக்கதை அதற்குத் தகுந்து அமையவேண்டும். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் அழுத்தமான திரைக்கதையால் கவர்ந்திருந்த ராம் ப்ரகாஷ் ராயப்பா, இதில் ‘ஜீவா, ஹன்சிகா கால்ஷீட். சிபிராஜ் வில்லன்’ என்று பேப்பர் எடுத்து எழுத ஆரம்பித்திருக்கிறார்.


யோகிபாபு, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருந்தாலும் ஒரு சில இடங்களில்தான் சிரிப்பு வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அபானவாயுவை வைத்து காமெடி பண்ணி, அருவருப்பைத் தருவீர்களோ? அதுவும் கொடூர வில்லனாகக் காட்டிய சிபிராஜையே காமெடியெல்லாம் பண்ணவைத்து... முடியல ப்ரோ.
 

இசை என்றால், சிபிராஜ் வரும்போது வரும் பின்னணி இசை மட்டுமே சொல்லும்படி இருக்கிறது. ‘காதலி ஏமாத்திட்டா.. காதலன் பாடற பாட்டு வேணும்’ என்றால் இமான் டஜன் டஜனாக ஸ்டாக் வைத்திருப்பார் போல. இதில் வரும் ‘அத்துவுட்டா’ பாடலும் அந்த ரகம். ஆனால் அதற்காக யாரோ ஒரு பெண் ‘நமக்கு செட் ஆகாது’ என்று அத்துவிடுவதாய் காட்சி வைப்பதெல்லாம்... ஓவர் சாரே!

ஸ்பெஷல் பவர், பீரியட் கதை, கெத்து காட்டப் போகும் வில்லன், சிரிக்க வைக்க சில காட்சிகள் என்று எதை என்ன செய்யலாம் என்று தெரியாமல் குட்டையைக் குழப்பி, என்று என்னென்னவோ முயன்றிருக்கிறார். ‘இல்லைங்க.. நான் எதுக்கு வேணா சிரிப்பேன்’ என்பீர்களானால் ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் வரலாம்.

ஜீவா...உங்க மேல நல்ல நம்பி்க்கை வைச்சிருக்கோம். ப்ளீஸ்.... அதை கெடுக்குற மாதிரி இப்படிலாம் நடிச்சு சங்கடப் படுத்தாதீங்க. Because, we care for you..!