Published:Updated:

‘விஜய் சாரோட எளிமை எனக்குப் பெரிய ஆச்சர்யம்!’ - நடிகர் காளி வெங்கட் சிறப்புப் பேட்டி

‘விஜய் சாரோட எளிமை எனக்குப் பெரிய ஆச்சர்யம்!’ - நடிகர் காளி வெங்கட் சிறப்புப் பேட்டி
‘விஜய் சாரோட எளிமை எனக்குப் பெரிய ஆச்சர்யம்!’ - நடிகர் காளி வெங்கட் சிறப்புப் பேட்டி

மாரி டிரெய்லரில் ‘எட்டு வருஷத்துக்கு முந்தி நடந்ததா சொல்றாங்க சார்.. அப்ப அவன் ஐட்டக்காரன்கூட இல்ல’ என்ற குரலை மறக்க முடியுமா? முண்டாசுப்பட்டியில் கொங்கு பாஷை. இறுதிச் சுற்றில் மெட்ராஸ் பாஷை. தெகிடியில் வேறு பாணி.

ஏற்கிற கதாபாத்திரத்திற்கேற்ப மாடுலேஷன், உடல்மொழி என்று கலக்கிக் கொண்டிருக்கிறார் காளி வெங்கட்.

காமெடியோ, குணச்சித்திரமோ தனக்கென ஒரு பாணியைப் பதித்து வருகிறார்.  மௌனகுரு, தெகிடி, முண்டாசுப்பட்டி, தொடங்கி மாரி, இறுதி சுற்று , மிருதன் வரை கலக்கிய காளி வெங்கட் தற்போது விரைவில் வெளி வர உள்ள தெறி படத்திலும் நடித்துள்ளார். பிஸி ஷூட்டிங்கின் நடுவே அவரை “சினிமா விகடன்” சார்பாக சந்தித்த போது..

‘விஜய் சாரோட எளிமை எனக்குப் பெரிய ஆச்சர்யம்!’ - நடிகர் காளி வெங்கட் சிறப்புப் பேட்டி


அது என்ன காளி வெங்கட்? கொஞ்சம் வித்தியாசமான பெயராக இருக்கே?

காளி வெங்கட் எல்லாம் இல்ல, வெறும் வெங்கட் தான் என்னோட பெயர். முதன் முதலா ஒரு படம் பண்ணினேன் 2008 ல, அந்த படத்துல என்னோட கேரக்டர் பெயர் காளி. அதுக்கு அப்புறம் நண்பர்கள் ‘காளி.. காளி’ ன்னு  கூப்பிட ஆரம்பிச்சாங்க. சினிமா உலகத்துலயும் வெங்கட்ன்னு  சில பேர் இருந்தாங்க. அதுனால என்னோட பெயருக்கு முன்னால ‘காளி’  சேர்ந்திடுச்சு.

வெங்கட் டு காளி வெங்கட்?

வெங்கட், கோவில்பட்டி பக்கத்துல உள்ள ஒரு சின்ன கிராமத்துல பிறந்து வளர்ந்தவன். நான் சின்ன பையனாக இருக்கும் பொது ஊர்ல அறிவொளி இயக்கத்தின் சார்பாக வரதட்சணை கொடுமை பற்றி நாடகங்கள் போடுவாங்க. அதுல நடிச்சதுல தான் சினிமா ஆசை வந்திச்சு. 1997 ஆண்டு சென்னைக்கு கிளம்பினேன். 2006 ல இருந்து சினிமா வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். ஒரு ரெண்டு வருசத்திலே வாய்ப்பு கிடைச்சுது.  என்னோட குரு விஜய் பிரபாகரன் தான் அவரோட ’தசையினை தீச்சுடினும்’ படத்துல முதல் வாய்ப்பு கொடுத்தார்.  1940 ல நடக்கிற மாதிரியான கதை. அந்த படத்திலே பெரிய ரோல், கொடுத்தாங்க. எனக்கே 15  காட்சிகள் மேல உண்டு. அந்த படம் பண்ணினதுக்கு அப்புறம் எந்த மாதிரியான கேரக்டர் கொடுத்தாலும் பண்ண முடியும்ன்னு நம்பிக்கை வந்தது.

1997 சென்னை வந்ததா சொன்னீங்க. 2006ல இருந்து தான் சினிமா வாய்புகள் தேட ஆரம்பிச்சேன்னு சொல்றீங்க? நடுவுல என்ன பண்ணீங்க?

‘விஜய் சாரோட எளிமை எனக்குப் பெரிய ஆச்சர்யம்!’ - நடிகர் காளி வெங்கட் சிறப்புப் பேட்டிசென்னை வந்துட்டேன், ஆனா நினைச்சது மாதிரி சினிமா உலகத்துக்குள்ள நுழைய முடியல. சென்னைல ஒரு நாள் ஒட்டுறதே ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்போ தான் முடிவு பண்ணினேன், சினிமா அப்புறமா பார்க்கலாம். முதல்ல வாழ்க்கைய பாக்கணும்ன்னு ஒரு மளிகை கடையில வேலை செஞ்சேன். அப்புறமா ஒரு டீ ஸ்டால்ல வேலை பார்த்தேன். அதுக்க அப்புறம், நானும் என்னோட அண்ணனும் சேர்ந்து ஒரு மளிகை கடை வச்சோம். நான் வீடுகளுக்கு வாட்டர் கேன் போடுவேன். இப்படி பல வேலைகள் பார்த்து, அரும்பாக்கம் பக்கத்துல சின்னதாக ஒரு வீடு வாங்கினோம். கண்டிப்பா கஷ்டப்பட்டோம். ஆனா அத பெருமையா சொல்ற அளவுக்கு ஒண்ணும் இல்லை. எல்லாருக்கும் அவங்க அவங்க நிலைமைக்கு ஏற்ப கஷ்டம் இருக்கும். அவ்ளோ தான். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக வாழ்கையில நிலையான பிறகு சினிமாவுக்கு உலகத்துல நுழையனும்கிற ஆசை மீண்டும் வந்திச்சு. அதுக்கு அப்புறம் தான் 2006 ல்ல இருந்து முயற்சி பண்ண ஆரம்பிச்சேன்.
 
வடிவேல் சாருக்கு அப்புறம் தமிழ் சினிமாவுல அந்த இடம் காலியாதான் இருக்கு. ஏன் யாராலையும் அந்த இடத்தை நெருங்க முடியலைன்னு நினைக்கிறீங்க?

வடிவேல் சார் இடத்தை எல்லாம் யாராலயும் புடிக்க முடியாது. அது அவரு மட்டும் தான். இப்போ இருக்கிற நடிகர்களாலயும் முடியாது. இனி வரப் போறவங்களாலயும் முடியாத காரியம். அவர்லாம் பெரிய லெஜன்ட்.  இப்போ நாகேஷ் சார் இடத்தை யாராவது புடிக்க முடிஞ்சிதா? முடியவே முடியாது. அது மாதிரி தான் வடிவேல் சாரும். சார் கண்டிப்பா ரீ என்ட்ரி குடுப்பார்.... முன்னால இருந்தத உச்சத்தை விட இன்னும் அதிகமான உயரத்தை தொடுவார்.
 
காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர். எது உங்களுடைய முதல் சாய்ஸ்?

எனக்கு என்னை ஒரு நடிகனாக சொல்லிக்கிறது தான் பெருமைன்னு நினைக்கிறேன். என் குரு நாதர் எப்பவும் சொல்லுவார், ‘கேரக்டர் என்ன கேட்கிறதோ, அத நீ குடுக்கணும்’. அப்படி தான் என்னை நான் பழக்கப்படுத்திட்டு வர்றேன். இவர் இந்த மாதிரி நடிகர், அந்த மாதிரி நடிகர்ன்னு சொல்லுவதை விட “நடிகர்”ன்னு  சொன்னா சந்தோசம். அந்த கேரக்டர் காமெடி பண்ணலாம்னா கண்டிப்பா பண்ணுவேன். அழணுமா அழுவேன். எதுவுமே கேரக்டர் கேட்கிறது தான்.

தெறி படத்துல நடிச்ச அனுபவம்?


அட்லி சாரை முன்னாலே தெரியும். ராஜா ராணி படத்துக்காக போயிருந்தேன். ஆனா அதுல எனக்கு கொடுக்கிறது மாதிரி ரோல் எதுவும் இல்ல. அதுக்க அப்புறமா தெறி படத்துக்காக கூப்டாங்க. போலீஸ் கேரக்டர் தான். இந்த படம் கமிட் ஆகும் போது மாரியும் ரிலீஸ் ஆகல, மிருதனும் ரிலீஸ் ஆகல. அதுனால சொன்னேன் இந்த மாதிரி ரெண்டு படத்துல போலீஸ்காரன் தான் என்று. அதுக்கு அவங்க எங்களுக்கு அதுனால எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைனா  தாராளமா பண்ணுங்க ன்னு  சொன்னாங்க. விஜய் சார் கூட நடிக்கிறது எல்லாம் பெரிய விஷயம். எனக்கும் இந்த படம் பெரிய இடத்தை தரும். ஒரு போஸ்டர் வந்ததுக்கே அவ்ளோ பெரிய ரீச். மாட்டேன்னா சொல்லுவேன்? உடனே ஒத்துகிட்டேன்.

‘விஜய் சாரோட எளிமை எனக்குப் பெரிய ஆச்சர்யம்!’ - நடிகர் காளி வெங்கட் சிறப்புப் பேட்டி
‘விஜய் சாரோட எளிமை எனக்குப் பெரிய ஆச்சர்யம்!’ - நடிகர் காளி வெங்கட் சிறப்புப் பேட்டி


(படம்: பா. அபிரக்க்ஷன், மாணவ பத்திரிகையாளர்)

 
விஜய் சார் கூட நடிக்கிற அனுபவம்?

படத்துல எனக்கு சின்ன ரோல் தான். ஆனா கொஞ்சம் முக்கியமான ரோல், சும்மா சொல்லனும்ன்னு சொல்லல, நிஜமாவே, ஷூட்டிங்க்கு போறத்துக்கு முன்னால வரைக்கும் அவரு பெரிய மாஸ் ஹீரோ. எப்படி சார் கிட்ட பேசுவேன்ன்னு எல்லாம் பயம் இருந்திச்சு. ஆனா அவ்ளோ சாதாரண மனிதனா பழகுவார். காலையில ஸ்பாட்க்கு வந்ததும் செட்ல இருக்கிற எல்லாருக்கும் ஒரு வணக்கம் சொல்லிட்டு தான் போவாங்க. அது எனக்கு பெரிய ஆச்சிர்யமா இருந்திச்சு. இப்போ வளர்ந்து வர்ற எல்லோரும் கூட பண்ணுவாங்களா ன்னு தெரியல. தன்னோட சீன் ஷூட் பண்ணாத நேரங்களில் அவரே தன்னோட குடையை புடிச்சிட்டு ஓரமாக நிற்பார். ரொம்ப பெரிய அனுபவம் சார் கூட நடிச்சது எல்லாம். சில பேர் சொல்லலாம், அவர் தன்னோட அப்பா மூலமா தான் சினிமாவுக்குள்ள வந்தார்ன்னு. இப்போ எல்லாம் சினிமாவுக்குள்ள வர்றது பெரிய விஷயமே இல்லை, தாக்குப் பிடிச்சி நிக்கறது தான் பெரிய விஷயம். அது கடுமையான உழைப்பால மட்டும் தான் முடியும். அது அவர்கிட்ட அதிகமாவே இருக்கு.


-எஸ்.கே பிரேம் குமார்
(மாணவ பத்திரிக்கையாளர்
 

 
 

அடுத்த கட்டுரைக்கு