Published:Updated:

கவர்ச்சி நடிகைகள் காணாமல் போவது ஏன்? - நடிகை ஷகிலாவின் ஓபன் டாக்!

கவர்ச்சி நடிகைகள் காணாமல் போவது ஏன்? - நடிகை ஷகிலாவின் ஓபன் டாக்!
கவர்ச்சி நடிகைகள் காணாமல் போவது ஏன்? - நடிகை ஷகிலாவின் ஓபன் டாக்!

டிகை ஷகிலாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைப்படம் வெளிவர இருப்பதாகவும் அதில் சன்னிலியோன் ஷகிலாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கேள்விப்பட்டு ஷகிலாவின் வீட்டுக்கதவை தட்டினோம். ஹாட் வெயிலில் செம கூலாகப் பேசுகிறார் ஷகிலா.

சினிமா லைஃப் எப்படி இருக்கு?

இதுவரைக்கும் சினிமா வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருக்கு. தமிழ், கன்னடம், தெலுங்குன்னு 7 படம் கைவசம் இருக்கு. தெலுங்குல சம்பூர்னேஷ் பாபுவுக்கு அம்மாவா நடிச்சிருக்கேன். ரொம்ப சீரியஸான கேரக்டர் அது. ஆனா, பார்க்குறவங்களுக்கு அந்த காட்சிகள் செம காமடியா இருக்கும். இதுவரைக்கும் நான் நடிக்காத ரோல் இது .எனக்கு பிரசவம் நடக்குற சீன்லாம் இருக்குனா பார்த்துக்கோங்க. என் நிஜ வாழ்க்கையில நிறைவேறாத ஆசையை படத்துல ஏத்து நடிக்குறப்ப சந்தோஷம்தானே?

உங்க படம் நிறைய வெளிவராமலே இருக்குன்னு சொல்றாங்களே... என்ன காரணம்?

என்ன பண்றது? என் படத்துல வர சீன்ஸ் அப்படி. சென்சார் போர்ட்ல 'ஏ' சர்டிஃபிகேட் தான் கிடைக்குது. அதனாலயே நிறைய படம் ரிலீஸ் ஆக மாட்டேங்குது.

இந்தப் படங்கள் ரிலீஸ் ஆகலைனு நீங்க எப்பவாச்சும் வருத்தப்பட்டிருக்கீங்களா?

’வெண்ணிலாவின் அரங்கேற்றம்’னு ஒரு படத்துல காது கேட்காத, வாய் பேசாத ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அந்தப் படம் ரிலீஸாகியிருந்தால் ஷகிலாவால இப்படியும் ஒரு கேரக்டர் ரோல் நடிக்க முடியும்னு தெரிய வந்திருக்கும். என்னை கிளாமர் நடிகையா பார்த்தாங்க. அப்புறம் காமெடி கேரக்டர்களில் கலக்குனேன். இந்தப் படம் ஓடியிருந்தா குணச்சித்திர நடிகையாகவும் அடையாளம் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

கவர்ச்சி நடிகைகள் நிறையப் பேர் குறுகிய காலத்துலயே காணாமல் போயிடுறாங்களே?

காரணம், கவர்ச்சிதான்!. வயசு இருக்குற வரைக்கும் கவர்ச்சி காட்டி நடிச்சிடணும். வாய்ப்பும் வருமானமும் கிடைக்கும் போதே அதை பயன்படுத்திக்கணும். இங்க நிறைய பேர் நல்லா சம்பாதிக்கும் போது அதைச் சேர்த்து வைக்காம செலவு பண்ணிடுறாங்க. அப்புறம் காலம் போனபிறகு பணத்துக்காக கஷ்டப்படுறாங்க. சில பேர் வசதியானவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிடுறாங்க. ஒண்ணு, சம்பாதிக்கும் போதே சேர்த்து வைக்கணும். இல்லாட்டி கல்யாணம் பண்ணிக்கனும். இதைத் தவறவிட்டா கஷ்டப்படணும்ங்கிறது நடிகைகளோட தலை எழுத்து. இதைப் பலபேர் என்கிட்ட சொன்னப்போ நான் கேட்கலை. இப்ப வாழறதுக்கான குறைந்தபட்ச வருமானத்தோட மட்டும் வாழ்ந்துட்டு இருக்கேன்!

கவர்ச்சி நடிகைகள் காணாமல் போவது ஏன்? - நடிகை ஷகிலாவின் ஓபன் டாக்!

கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்லையா?

எனக்கும் ஆசைதான். ஆனா யாருமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறாங்களே. எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் இருக்கார். ஆனா கல்யாணம் பண்ணிக்க அவர் தயாரா இல்ல. கல்யாணம் பண்ணிக்கனும், குழந்தைகள் பெத்துக்கணும்னு எனக்கும்தான் ஆசை இருக்கு. இப்ப 38 வயசாகுது. இந்த வயசுல யாரும் கல்யாணம் பண்ணிக்க முன்வரமாட்டாங்கனு எனக்கும் தெரியும். வர்றவங்களும் பணம் இருக்கானு பார்க்குறாங்க. இல்லைனு தெரிஞ்சதும் போயிடுறாங்க. என் சூழலைப் புரிஞ்சுக்கிட்ட ஒருத்தர் எனக்குக் கிடைச்சா, கல்யாணத்துக்கு ரெடி!

சன்னி லியோன் நடிக்க, உங்க வாழ்க்கை வரலாறு சினிமா ஆகுதாமே?

சன்னி லியோனா, பிபாஷா பாஷூவான்னு இன்னும் முடிவாகலை. முடிவு ஆனதும் ஹிந்தியிலயும் மற்ற மொழிகள்லயும் வரும்னு நினைக்குறேன்.

சமீபத்துல கனிமொழியை சந்திச்சது பற்றி?

ஒரு நட்பு ரீதியா பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னேன். அவ்வளவு தான். ஆனா ஜெயலலிதா அம்மாவுக்கு தான் என்னோட ஆதரவு. அவங்க ஒரு இரும்பு மனுஷி. அவங்களோட வாழ்க்கையைப் பார்த்து நான் பிரமிக்கிறேன்!

கவர்ச்சி நடிகைகள் காணாமல் போவது ஏன்? - நடிகை ஷகிலாவின் ஓபன் டாக்!

யாருக்கு உங்க ஓட்டு?

இதுவரைக்கும் நான் ஒருமுறைகூட ஓட்டு போட்டதில்லை.வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு இதெல்லாம் எங்க வாங்கணும்ணுகூட எனக்குத் தெரியலை. யாராச்சும் எனக்கு வாங்கிக் கொடுத்தா நல்லா இருக்கும்.

பூரண மதுவிலக்கு தேவையா?

எதுக்கு டாஸ்மாக்கை மூடணும்னு ப்ளான் பண்றீங்க? அப்போ குடிக்கிறவங்க எல்லாம் எங்க போவாங்களாம். தேவையில்லாம கள்ளச்சாராயம் விக்குறதுக்கும், ஃபாரின் சரக்கு வந்து இறங்குறதுக்கும் தான் நீங்க வழிகாட்டப்போறீங்க. குடிக்கிறவன் எங்க இருந்தாலும் குடிக்கத்தான் போறாங்க. வேணும்னா டாஸ்மாக் கடைகளோட எண்ணிக்கையை குறைங்க போதும்!

ஷகிலாவுக்கு என்ன ஆசை?

எனக்குத் தான் குடும்ப ஆசைன்னு ஒண்ணு  நிறைவேறலை. ஆனா குடும்ப வாழ்க்கையில இருக்குறவங்களுக்கு தாம்பத்ய ரீதியான பிரச்னை இருக்கும்ல... அதுக்கு ஏதாச்சும் உதவணும்னு ஒரு தனியார் தொலைக்காட்சியில ’தித்திக்கும் இரவுகள்’னு பாலியல் சார்ந்த ஆலோசனை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறேன். பொதுவா இந்த மாதிரி நிகழ்சிகள்ல ஆண்களுக்கு மட்டும் தான் ஆலோசனை சொல்லிட்டு வருவாங்க. இந்த விஷயத்துல ஆண், பெண் ரெண்டு பேருக்குமே பிரச்னை இருக்கு. அதனால இந்த நிகழ்சியில பெண்கள் சார்பாக நான் விளக்கம் கேட்டு வாங்கித் தருவேன். எல்லாரும் நல்லா இருந்தா போதும். வேறென்ன ஆசை இருக்க போகுது. சீக்கிரமே ஆதரவில்லாதவங்களுக்கு ஒரு இல்லம் தொடங்கி சேவை பண்ணனும்!

- பொன்.விமலா-

பின் செல்ல