Published:Updated:

விஜய் சேதுபதியுடன் நடித்தது பெருமை - காகபோ மணிகண்டன் #முகம் அறிமுகம்

விஜய் சேதுபதியுடன் நடித்தது பெருமை - காகபோ மணிகண்டன் #முகம் அறிமுகம்
விஜய் சேதுபதியுடன் நடித்தது பெருமை - காகபோ மணிகண்டன் #முகம் அறிமுகம்

காதலும் கடந்துபோகும் படத்தில் விஜய் சேதுபதியுடனே வரும் அந்த இளைஞர் ‘யார்ரா இது’ என்று கேட்க வைத்தார். விசாரித்தால்.. அவரும் இயக்குநராம்!

இதோ.. அவரைப் பற்றி அவரே...

விஜய் சேதுபதியுடன் நடித்தது பெருமை - காகபோ மணிகண்டன் #முகம் அறிமுகம்

“இளமையில் வறுமை கொடியது, முதுமையில் தனிமை கொடியது என்கிற ஔவையாரின் பாட்டை தழுவியே “நரை எழுதும் சுயசரிதம்” படத்தை எடுத்திருக்கிறேன்” எனத் துவங்கினார் இயக்குநர், நடிகர் திரு மணிகண்டன் அவர்கள். க க க போ திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘முரளி’ எனும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர் தான் இந்த வாரம் நமது முகம் அறிமுகம் பகுதிக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

சென்னை அடையாறில் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அம தேதி பிறந்தேன். பத்தாம் வகுப்பு வரையில் புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியிலும், +1,+2 சந்தோமிலும் படித்தேன். எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி கல்லூரியில் பி.ஈ. இன்ஸ்ட்ருமேண்டஷன் படித்தேன். சிறு வயதிலிருந்தே சினிமா என்றால் ஒரு ஈர்ப்பு, யாருக்கு தான் இருக்காது.

எனது சினிமா வாழ்க்கைக்கு முதல்அடியாக இருந்தது விஜய் டிவி நடத்திய கலக்கப் போவது யாரு எனும் நிகழ்ச்சி தான். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனிற்கு விளம்பரங்கள் வந்தது. எனக்கு மிமிக்கிரியில் ஆர்வம் இருந்ததால் முயன்று பார்க்கலாம் என்று தோன்றி அதில் பங்கேற்றேன். அந்த சீசனில் ஆதவன் என்பவர் முதல் பரிசையும் நான் இரண்டாம் பரிசையும் பெற்றது இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது.

விஜய் சேதுபதியுடன் நடித்தது பெருமை - காகபோ மணிகண்டன் #முகம் அறிமுகம்

அந்த தருணத்திலிருந்து பொறியியல் மீதான எனது ஆர்வம் குறைந்தது எனக்கே தெரிந்தது. அதற்காக படிப்பை விட்டுவிடவில்லை, டிகிரி முடித்து விட வேண்டும் என்றே படித்தேன். அனால் படிக்கும் பொழுதே பல எப்.எம்.களில் ஆர்.ஜே.வாக பனி புரிந்து வந்தேன். அது எனக்கும் சினிமாவிற்குமான இடைவெளி குறையாமல் பார்த்துக் கொண்டது. படிப்பை முடித்துவிட்ட காலகட்டத்தில் எழுத்து மீது ஒரு நாட்டம் உருவானது பல நிகழ்ச்சிகளுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக சென்று எழுதியுள்ளேன்.


இந்த நேரங்களில் எனது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி விடாமல் என்னைப் பார்த்துக்கொண்டது ‘டப்பிங்’ என்ன தான் பல வேலைகள் செய்தாலும் எனது வருமானம் டப்பிங்கை சார்ந்தே இருந்தது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் கலந்து கொண்ட பொழுது தான் நலன் குமாரசாமி போன்றோரது அறிமுகம் கிடைத்தது. அந்த சீசனின் சிறந்த நடிகர் விருதை பெற்றேன். பிறகு பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணி ஆற்றினேன். குறிப்பாக இவரிடம் இந்த படம் என்று கூறும் அளவிற்கு பணி ஆற்றியதில்லை. ஏனென்றால் பலரின் ஸ்கிரிப்ட் டிஸ்கஷன், ஷூட்டிங், டப்பிங் என்று அனைத்திற்கும் என்னை உரிமையோடு அழைப்பார்கள், அனைவருக்கும் ஒரு தத்துப் பிள்ளை என்று கூறும் அளவிற்கு என் பங்கு இருந்தது.

பிட்சா 2 திரைப்படத்திற்கு வசனம் எழுதினேன், கோ டைரக்டர் ஆகவும் பணி ஆற்றினேன். இப்படியெல்லாம் இருந்தாலும், நடிக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு ஆசை இருந்து கொண்டே இருந்தது. வாய்ப்பு கேட்டு செல்லும் பொழுதெல்லாம் பல தடைகள் வந்ததுண்டு. ஒருசிலர் ‘இந்த முகத்தை வைத்துக் கொண்டு நடிக்க வர்றியா’ என்று கூட கூறியதுண்டு. இதை எல்லாம் விட அதிகமாக ‘இந்த ரோல் நீங்க தாங்க பண்றீங்க’ என்று கூறி விட்டு பிறகு எனக்கே தெரியாமல் வேறு ஒருவரை வைத்து அந்த ரோலை இயக்குவது பெரிதும் வேதனையாக இருந்தது. இந்த இன்னல்களில் எல்லாம் ஏன் குடும்பத்தினர் என்னை எந்தத் தொந்தரவும் செய்யாமல் என்னை சுதந்திரமாக விட்டு வைத்ததே எனக்கு அவர்கள் அளித்த பெரிய சப்போர்ட்.
 

விஜய் சேதுபதியுடன் நடித்தது பெருமை - காகபோ மணிகண்டன் #முகம் அறிமுகம்

2012 செப்டம்பர் 29-ம் தேதி. என் வாழ்வில் மிக முக்கியமான நாள். எனது படம் ENDLESS- நரை எழுதும் சுயசரிதம் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அன்று தான் நிகழ்ந்தது. ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று நான் சிந்திக்கும் பொழுது என்னிடம் இரண்டு கதைகள் இருந்தது.

1. வயதானதால் ஒதுக்கப் படும் ஒரு முதியவரின் வேதனை.
2. கடன் தொல்லையால் சென்னைக்கு ஒடி வந்து பிரச்சனைகளை சந்திக்கும் ஒரு இளைஞனின் கதை.

இது இரண்டையும் இணைத்து, அவர்கள் இப்படி இரு வேறு துருவங்களில் இருக்கும் இரண்டு மனிதர்கள் சந்தித்து நண்பர்களானால் எப்படி இருக்கும் என்று உருவாக்கப் பட்டது தான் இந்தத் திரைப்படம். இளமையில் வறுமை கொடியது, முதுமையில் தனிமை கொடியது என்கிற ஔவையாரின் பாட்டை தழுவியே “நரை எழுதும் சுயசரிதம்” படத்தை எடுத்தேன்.


இந்த படத்தை தயாரித்த திரு சஷாங்க் அவர்கள் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு மனிதர் ஷூட்டிங்கில் என்றில்லாமல் எப்பொழுது எந்த உதவி கேட்டாலும் உடனே செய்யும் மனம் படைத்தவர். அவர் உதவியன்றி இந்த கதைகள் படமாகி இருக்காது.

இந்த திரைப்படத்தை நாங்கள் திரையிட்ட பொழுது வந்த வரவேற்பு நாங்களே எதிர்பாராதது தான். ஒவ்வொருவரும் வந்து கைகொடுத்து “நல்ல படம்” என்று கூறிய பொழுது தான் உணர்ந்தேன் இதுவே எனது வெற்றி என்று.
 
இந்த திரைப்படத்தை பல பிலிம் பெஸ்டிவல்களில் திரையிட்டுள்ளோம், பல விருதுகளையும் இந்த படத்தால் பெற்றுள்ளோம்.

1. Raintree பிலிம் பெஸ்டிவலில் சிறந்த Feature Film-க்கான விருது.
2. Black bird பிலிம் பெஸ்டிவலில் டெல்லி கணேஷ் சாருக்கு சிறந்த நடிகருக்கும் எனக்கு சிறந்த இயக்குனருக்கும் நாமினி.
3. சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற பிலிம் பெஸ்டிவலில் 3 முறை திரையிட்டு மூன்று முறையும் standing ovation பெற்றோம்.

இதையெல்லாம் தாண்டி இந்தியாவின் முன்னணி சினிமா விமர்சகர் மீனாக்ஷி செட்டே அவர்கள் ஜூரியாக இருந்த 3௦ திரைப்படங்களில் இந்த படத்தை பற்றி மட்டும் தனது பிளாக்கில் கட்டுரை எழுதியுள்ளதே பெரிய வெற்றியாக கருதுகிறேன். அவர்கள் எழுதியுள்ளதை பார்த்துவிட்டு, டில்லி பிலிம் பெஸ்டிவலிற்கு எனக்கு அழைப்பு வந்துள்ளது.

இந்த சினிமா வாழ்கை சற்றே சோர்வாக சென்ற காலத்தில் ஒரு நாள் நண்பர்களிடம் எனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கேட்டேன். கேட்ட அடுத்த நாள் நலன் குமாரசாமி என்னை அவர் அலுவலகத்திற்கு அழைத்து க க க போ திரைப்படத்தில் முரளி எனும் கதாப்பாத்திரத்தை அளித்தார். விஜய் சேதுபதி அண்ணாவோடு நடிப்பதென்பது மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் அவர், ஒரு பெரிய நடிகர் என்று எல்லாம் அலட்டிக் கொள்ளாமல், நான் நடிக்கும் ஷாட்கள் முடிந்த பிறகு வந்து பாராட்டுவார். பல சஜெஷன்கள் சொல்லுவார். ‘சரி பேசி பாப்போம்’ என்று ஆன்லைன் சீரியல் ஒன்று இயக்கி வருகிறேன். அதை பார்த்து விட்டு என்னை அழைத்து சுமார் ஒரு மணி நேரம் கருத்தை தெரிவித்து பாராட்டினார். ஒரு நல்ல சகோதரரை போல் பழகும் அவருடன் மீண்டும் நடிக்க வேண்டும்.

சினிமாவில் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் மட்டும் தேர்வது என்பது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு ஆல் இன் ஆல் மனிதனாக வர வேண்டும் என்பதே எனது பெரிய கனவு.

-அபிரக்‌ஷன்
(மாணவ பத்திரிகையாளர்)