Published:Updated:

அழுக்கும் ஆவேசமுமாக ஈர்க்கும் ஐஸ்வர்யா! - 'சர்ப்ஜித்' படம் எப்படி?

அழுக்கும் ஆவேசமுமாக ஈர்க்கும் ஐஸ்வர்யா! - 'சர்ப்ஜித்' படம் எப்படி?
அழுக்கும் ஆவேசமுமாக ஈர்க்கும் ஐஸ்வர்யா! - 'சர்ப்ஜித்' படம் எப்படி?

அழுக்கும் ஆவேசமுமாக ஈர்க்கும் ஐஸ்வர்யா! - 'சர்ப்ஜித்' படம் எப்படி?

’Bio-Pic' படங்களின் வரிசையில் வெளியாகியிருக்கிறது சர்ப்ஜித். 1990ல் பாகிஸ்தான் ராணுவத்தால் ‘எல்லை தாண்டிய’ குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருபது வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்த சரப்ஜித் சிங்-கின் வாழ்க்கையைத்தான் சர்ப்ஜித் என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார்கள்.

பஞ்சாப்பின் ஒரு கிராமத்தில், பிறரது நிலங்களில் விவசாயம் செய்து வருகிறான் சர்ப்ஜித் (ரந்தீப் ஹூடா). மனைவி சுக்ப்ரீத் (ரிச்சா சட்டா), சகோதரி தல்பீர் கௌர் (ஐஸ்வர்யா ராய்), இரு மகள்கள், தந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கையை 1990ன் ஓர் இரவு சிதைக்கிறது. நண்பனுடன் குடித்துவிட்டு, வழிமாறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடும் சர்ப்ஜித்தை, ராணுவம் அழைத்துச் சென்றுவிடுகிறது. ’நீதானே ரஞ்சித் சிங்? லாகூர் குண்டுவெடிப்பில் உன்னால் எத்தனை அப்பாவிகள் பலியானார்கள் தெரியுமா?’ என்று சித்திரவதை செய்து, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை உட்பட பல்வேறு வேதனைகளை அனுபவிக்கிறான் சர்ப்ஜித்.

இங்கே, இந்தியாவில் காணாமல் போன சகோதரனைத் தேடி தல்பீர் (ஐஸ்வர்யா ராய்), தெருவில் அமர்ந்து போராடுவது முதல் இந்திய பிரதமரை சந்திப்பது வரை பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். பலனில்லாமல் போக, பாகிஸ்தான் நீதிமன்றக் கதவுகளைத் தட்டுகிறார். பாகிஸ்தானின் சிறைகளில் வாடும் இந்தியக் குற்றவாளிகளுக்காகப் போராடும் வழக்கறிஞர் அவாயிஸ் ஷேக் (தர்ஷன் குமார்) ஐஸ்வர்யா ராய்க்கு உதவுகிறார். உண்மையான குற்றவாளியான ரஞ்சித் சிங்கைக் கண்டுபிடித்து, தன் சகோதரனை மீட்க முயலும் ஐஸ்வர்யாவின் கனவு கைகூடியதா என மிகுந்த கனத்துடன் விவரிக்கிற படம்தான் சர்ப்ஜித்.

உண்மைக்கதையை படமாக எடுப்பதில் உள்ள சிக்கலே, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகனிடம் விதைக்க முடியாது. சரப்ஜித் சிங் வாழ்வில் நிகழ்ந்ததும், அவரது சகோதரி போராடியதும் இந்தியா முழுக்க பிரபலம். பொக்ரான் அணுகுண்டு சோதனை, 2002ல் பார்லிமெண்ட் தாக்குதலில் கைது செய்யப்பட்ட அப்சல் குரு வழக்கு, 2008ல் மும்பை தொடர்குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் வழக்கு எல்லாமே பாகிஸ்தான் சிறைகளில் இருக்கும் இந்திய குற்றவாளிகளையும்,  குற்றம் சாட்டப்பட்டவர்களையும் எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை, சர்ப்ஜித் கதையின்மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறர்கள்.

சர்ப்ஜித்தாக நடித்திருக்கும் ரந்தீப் ஹூடா, அவரது சகோதரியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் இருவரது நடிப்புக்கும் நிச்சயம் விருதுகள் காத்திருக்கும். சிறையில் இரண்டடி உயரப் பெட்டிக்குள் உடலைக் குறுக்கி கதறும்போதும், பல வருடங்களுக்குப் பிறகு தன்னை சந்திக்க வரும் குடும்பத்தினருக்காக தன் சிறைக்கூடத்தை (செல்) சுத்தம் செய்யும்போதும், தன் மகளின் வாழ்த்து அட்டையை வருடும்போதும் நம்மை நெகிழ வைக்கிறார் ஹூடா.

படத்தின் ஆரம்பத்தில் ரோஜா நிறத்தில் அத்தனை அழகாக வரும் ஐஸ்வர்யா, சகோதரன் காணாமல் போனபிறகு, வாழ்வின் சோகம் தன் உடல்மொழியிலும் வெளிப்படும்படி தோற்றமாற்றத்தைக் காண்பித்து நடித்திருக்கிறார். நம்பிக்கையை விட்டுக் கொடுக்காமல் போராடும்போதும், ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து தற்கொலைக்கு முயலும்போதும் ஐஸ்வர்யா ராய் மறைந்து, ரசிகனின் உள்ளுணர்வில்  உண்மையாகவே சரப்ஜித்துக்காகப் போராடிய அவரது சகோதரி நினைவுக்கு வருகிறார்.

சர்ப்ஜித்தின் மனைவியாகவரும் ரிச்சா சட்டாவும், பாகிஸ்தான் வழக்கறிஞர் வேடத்தில் வரும் தர்ஷன் குமாரும் தங்கள் கதாபாத்திரத்துக்கு நியாயம் கற்பித்திருக்கிறார்கள்.  ஓர் உண்மைக்கதையில் எந்தவித மசாலாக்களும் சேர்க்கமுடியாது எனினும், சர்ப்ஜித் விடுவிக்கப்படும் செய்தி கேட்டு ஆட்டம்போடுவது, தொய்வாகவே சென்று கொண்டிருக்கும் திரைக்கதையில் சிறு நம்பிக்கை விதைக்கிறது. படம் முடியும்போது, உண்மையான சரப்ஜித் குடும்பத்தினரின் புகைப்படங்களையும், சகோதரன் இறப்பிற்குப் பிறகு, எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் வாடும் பாகிஸ்தானியர்களில் மூன்று பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த சரப்ஜித்தின் சகோதரி தல்பீர் கௌர், அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்ததையும் எழுத்தில் காட்டுகிறார்கள்.

அவருக்கான சமர்ப்பணமாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். இறுகிய மனதுடன், 131 நிமிடங்கள் ஓர் ஆவணப்படத்தை ரந்தீப் ஹூடா - ஐஸ்வர்யா ராயின் சிறந்த நடிப்பில் காண நீங்கள் தயாரானால்.. ஒருமுறை பார்க்கலாம்!   

’சர்ப்ஜித்’ படத்தின் டிரெய்லரைக் காண: 
 

அடுத்த கட்டுரைக்கு