Published:Updated:

"ஐ.டி. மட்டுமே தரமணி இல்லை!” - ராம்

Vikatan Correspondent
"ஐ.டி. மட்டுமே தரமணி இல்லை!” - ராம்
"ஐ.டி. மட்டுமே தரமணி இல்லை!” - ராம்

ரமணி டீசர் வெளியிடப்பட்டு பலரும் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க.. படம் ஆரம்பித்தபோது, ராம் இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதை இங்கே பகிர்கிறோம்:

''இது, ஐ.டி. இளைஞர்கள் பற்றிய படம் இல்லை!'' - 'தரமணி’ குறித்து இயக்குநர் ராம் சொல்லும் ஒன்லைன் இதுதான்!

வெளியீட்டில் சிக்கல், எதிர்பார்ப்புடன் வெளியீடு, விமர்சன சர்ச்சைகள், விருதுகள், அங்கீகாரங்கள்... என 'தங்கமீன்கள்’ இன்று வரை செய்திகளில் ஸ்க்ரோல் அடித்துக்கொண்டிருக்க, அதற்குள் 'தரமணி’யில் பெரும் தூரத்தைக் கடந்துவிட்டார் ராம். 'தரமணி’ என்ற பெயரும் 'யோயோ பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்’ டீஸர்களும் 'ஐ.டி. இளைஞர்கள் பற்றிய படமோ?!’ என்று எழுப்பும் சந்தேகத்தை முதல் வரியிலேயே மறுக்கிறார் ராம்.

''ஆனா, 'தரமணி’னா ஐ.டி, ஐ.டி-யும் சார்ந்ததும்னுதானே நினைவுக்கு வரும்?''

''சார்ந்ததும்னு சொல்றீங்களே... அதுதான் உண்மையான தரமணி! ஐ.டி. அடையாளங்கள், இப்போ கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு வந்தது. ஆனா தரமணி, பல நூற்றாண்டுகளா அங்கேயேதான் இருக்கு. சென்னையில் தென் சென்னைக்கும், வட சென்னைக்கும் தனித்தனி அடையாளங்கள் இருக்கும். அதே மாதிரி தரமணியையும் பிரிக்கலாம். ஐ.டி. கட்டடங்கள் இல்லாத தரமணியில், வட தமிழகத்தின் பூர்வ குடிகள் இருக்காங்க. அங்கே காடு, ஏரி, குளம், மலை, வயல், கிராமம், பேக்வாட்டர் எல்லாம் இருக்கு. வட இந்தியாவில் இருந்து வந்து கூலி வேலை பார்க்கும் பீகார், ஒடிசா, மிசோரம் மாநில நண்பர்கள் இண்டு இடுக்குகள்ல ஆயிரக்கணக்கில் குடியிருக்காங்க. பல்லவர்களோட வரலாற்று மிச்சங்கள் இன்னும் இருக்கு. மீனவர்கள் இருக்காங்க. அவங்களுக்கு நடுவுல மூணாவது மாடிக்கு ரெண்டு கோடி கொடுத்து 'ஸீ வியூ ஃப்ளாட்’ல குடியிருக்கிற வசதியானவங்களும் இருக்காங்க. இவர்கள்... இவைக்கு மத்தியில் நடக்கிற கதைதான் 'தரமணி’. படத்தில் ஐ.டி. துறை இருக்குமே தவிர, அது மட்டுமே படம் கிடையாது. ஆண்ட்ரியா, வசந்த் ரவி இடையிலான காதல்தான் படத்தின் பேசு பொருள்!''

'' 'கற்றது தமிழ்’ல தமிழ் பட்டதாரிகளை சென்னை துரத்தியடிக்கிறதைச் சொன்னீங்க... 'தரமணி’யில் பளபளக்கும் சென்னையின் மற்றோர் உண்மையான முகத்தைக் காட்டுறேன்னு சொல்றீங்க. சென்னை மேல் உங்களுக்கு என்ன கோபம்?''

''கோபம் இல்லைங்க. சென்னைதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர். இதுதான் எனக்கு எல்லாமே கொடுத்தது. ஆனா, சென்னை, மும்பை போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்குனு பிரத்யேகக் குணங்கள் இருக்கு. அது தனது அடையாளத்தை மாத்திட்டே இருக்கும். சென்னையின் பிரமாண்டத்தால் ஈர்க்கப்பட்டு வர்றவங்க, அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தங்கள் உழைப்பைச் செலவிடுவாங்க. அவங்களை அரவணைச்சுக்கிற சென்னை, அதுக்கு முந்தைய தலைமுறையை தனக்கு வெளியே கொண்டுபோயிடும். இப்படி குடியிருப்புகளும் குடியிருக்கும் மனிதர்களும் மாறிக்கிட்டே இருப்பது, சென்னை மாதிரியான நகரங்களின் பிரத்யேகக் குணம். அதை நாம் குற்றம்னு சொல்ல முடியாது. அதே சமயம் அதனால் பாதிக்கப்படுறவங்களோட வலியைப் பேசாமல் இருக்க முடியாதே!''

''சும்மா ஒரு காதல் கதைங்கிறதுக்காக ஆண்ட்ரியா இந்தப் படத்துல நடிக்க வந்திருக்க மாட்டாங்க. அவங்களை எப்படிச் சம்மதிக்கவெச்சீங்க?''

'' 'தங்கமீன்கள்’ ரிலீஸுக்காகக் காத்துட்டு இருந்த நாள்களில் 'தரமணி’க்கான ஒன்லைன் மட்டும் என்கிட்ட இருந்தது. அந்தக் கதைக்கு சூப்பர் ஸ்பெஷல் ஹீரோயின் தேவைப்பட்டாங்க. அதை மனசுல வெச்சுக்கிட்டு ஆண்ட்ரியாகிட்ட ஒரு காபி ஷாப்ல இந்தக் கதையைச் சொன்னேன். '10 நிமிஷக் கதைதான் என்கிட்ட இருக்கு. நீங்க நடிக்கிறதா இருந்தா சொல்லுங்க... மேல டெவலப் பண்றேன். படத்துக்கு தயாரிப்பாளர் யாரு, உங்க சம்பளம் என்ன, எப்போ ஷூட்டிங் போவோம்... எதுவுமே இப்போ எனக்குத் தெரியாது. ஆனா, நீங்க ஓ.கே. சொன்னா இந்தப் படம் பண்ணலாம்’னு சொன்னேன். அப்போ ஆண்ட்ரியா சொன்ன 'யெஸ்’தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் கியர்.

ஆண்ட்ரியா கொஞ்சம் ஸ்பெஷல். ஸ்க்ரிப்ட்ல இருந்து டயலாக் டெலிவரி வரை யோசிக்கிற நடிகை. தமிழ் தெரிஞ்ச பொண்ணு. அவங்களுக்குனு இருக்கிற இமேஜ், படத்துக்கு பெரிய ப்ளஸ். அதுக்கு நேரெதிரா எந்த இமேஜும் இல்லாத ஒரு ஹீரோ தேவைப்பட்டான். ஏன்னா, அவன் செய்யும் சில விஷயங்களை எந்த முன்தீர்மானமும் இல்லாமல் பார்க்கணும். அந்த கேரக்டருக்கு வசந்த் பர்ஃபெக்ட் ஃபிட்!'

''ஒவ்வொரு படத்திலும் யுவன்கிட்ட இருந்து ஒரு மாஸ்டர் பீஸ் டியூன் எப்படிப் பிடிக்கிறீங்க?''

''அது திட்டம் போட்டு நடக்கிறது இல்லை. எனக்கு மியூசிக் தெரியாது. ஆனா, யுவனுக்கு ஸ்க்ரிப்ட் தெரியும். அதனால் அந்த மூடுக்கு என்ன தேவைனு அவரே தீர்மானிச்சு ப்ளே பண்ணிடுவார். நான் கடைசி ஆளா கேப்பேன். பிடிச்சிருக்கும். அவ்வளவுதான். அது எத்தனை அற்புதமான மெலடியா இருந்தாலும், அரை மணி நேரத்துக்குள் நா.முத்துக்குமார் பாட்டு எழுதிடுவார். ரெண்டும் சேர்ந்தா, அது மேஜிக் ஆகிடுது. இந்தப் படத்துல இன்னொரு ஸ்பெஷல், தேனி ஈஸ்வரின் கேமரா. கேண்டிட் ஷாட்களையே உலகத் தரத் துல்லியத்தில் கொடுக்கக்கூடிய ஆளு. இந்தப் படத்துக்கு அப்புறம் இவரை அநேகமா இந்தி சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போயிருவாங்க!''

''தங்கமீன்களுக்கு முன், தங்கமீன்களுக்குப் பின்... ராமிடம் என்ன வித்தியாசம்?''

''பெரிய வித்தியாசம் எதுவும் நான் உணரலை. ஆனா, பொறுமையா இருந்தா நமக்கு நடக்க வேண்டிய நல்லதோ, வெகுமதியோ கிடைக்கும்னு புரிஞ்சுக்கிட்டேன். பொறுமையின் அவசியத்தை அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். சட்சட்டுனு முன்னாடி எல்லாம் கோபம் வரும். இப்போ இந்தக் கோபம் அவசியமானு ஒரு சின்னக் கேள்வி தோணுது! அப்புறம் நம்ம படைப்புல குறைந்தபட்ச நேர்மை இருந்தாலும் போதும்... அதுக்கான நம்ம போராட்டம் வீண்போகாது!

இதை ஒரு புரிதலுக்காகத்தான் சொல்றேனே தவிர, நிஜ வாழ்க்கையில் ஆங்ரி யங் மேன் கேரக்டர் வாழணும்னு ஆசைப்படலை. அதனால, எங்கேயும் சண்டை போட்டுத்தான் ஒரு விஷயத்தை அடையணும்னு இல்லை. நாம பண்ற விஷயம் சரியா இருக்கிறப்ப, அதுக்காகக் குரல் கொடுக்கிறது தப்பு இல்லையே. என் படைப்புகள் அரசியல் பேசும். அது என் உரிமை!'

''உங்க குரு பாலு மகேந்திரா இழப்பில் இருந்து மீண்டுட்டீங்களா?''

''அடிக்கடி போய் அவரைப் பார்க்க மாட்டேன். ஆனா, சில பிரச்னைகள், சில சந்தர்ப்பங்களின்போது அவர் பக்கத்தில் இருந்தா நல்லா இருக்குமேனு தோணும். சினிமா மொழியைத் தாண்டியும் என் வாழ்க்கையை டிசைன் பண்ணவர் அவர். 'உன் கோபத்தை விட்டுராத... எப்பவும் உனக்குள்ள அந்த ஆவேசத்தைத் தக்கவைச்சுக்கோ’னு சொல்லிட்டே இருப்பார். இப்பவும் பல சமயங்களில் அவரோட வார்த்தைகள்தான் என்னை ஓடவைக்குது. திடீர்னு மனசு அவரைத் தேடும். அப்போ மொபைலை எடுத்து அவர் நம்பருக்கு கால் பண்ண கை துடிக்கும். அந்த நிமிஷங்களைக் கடக்கிறதுதான் கஷ்டம்!'

''பாலுமகேந்திராவோட சினிமா லாங்வேஜ் ரொம்ப ஸாஃப்ட். தன் வரம்பு மீறி வீம்புக்குனு இயக்கின படம் 'நீங்கள் கேட்டவை’ மட்டும்தான்னு அவரே சொல்லியிருக்கார். ஆனா, அவர் பட்டறையில் இருந்து வந்த பாலா, ராம் போன்றவர்கள் அன்பு, பிரியத்தைக்கூட வயலென்ட்டா சொல்றீங்க... ஏன்?'

''ஒரு சினிமாவை எப்படி எடுக்கணும்னுதான் பாலு சார் சொல்லியிருக்காரே தவிர, எந்த சினிமாவை எடுக்கணும்னு சொல்லிக் கொடுத்தது இல்லை. கேமரா பொசிஷன், லைட்டிங், எடிட்டிங்னு ஒரு சினிமாவை மோல்டு பண்ணக்கூடிய பிட்ச் பத்தி பேசிட்டே இருப்பார். ஆனா, கதை-வசனம் பத்தி ரொம்ப விவாதிக்க மாட்டார். இன்னொரு விஷயம், எங்க எல்லாரையும்விட பாலுமகேந்திரா ரொம்ப ரௌத்ரமானவர். அவர் ஆசைப்பட்ட சினிமாவை கடைசி வரை அவரால் எடுக்க முடியலை. ஏன்னா, 'புலம் பெயர்ந்தவர்’ என்ற அடையாளம் இருந்ததால், உள்ளூரின் அரசியலை, சமூகச் சூழலை அவரால் முழு வீரியத்தோட படமாக்க முடியாத தயக்கம் இருந்தது. நாங்கள்லாம் இந்த ஊர் பசங்க. எதையும் துணிஞ்சு பேசலாம். அந்தத் தயக்கம் மட்டும் இல்லாம இருந்திருந்தா, பாலு சாரின் அடையாளமே வேறயா இருந்திருக்கும்!''

கி.கார்த்திகேயன்

 (ஆனந்தவிகடன் 18 ஜூன் 2014)