Published:Updated:

‘என் அம்மா மட்டுமில்ல... நானே தனியாத்தான் இருக்கேன்!’ - ‘அம்மா’ சர்ச்சைக்கு பார்த்திபன் பதில்

‘என் அம்மா மட்டுமில்ல... நானே தனியாத்தான் இருக்கேன்!’ - ‘அம்மா’ சர்ச்சைக்கு பார்த்திபன் பதில்
‘என் அம்மா மட்டுமில்ல... நானே தனியாத்தான் இருக்கேன்!’ - ‘அம்மா’ சர்ச்சைக்கு பார்த்திபன் பதில்

பார்த்திபன் பற்றி பரவி வரும் வாட்ஸ் அப் செய்தி:

'திரைப்பட நடிகர்களில் வித்தியாசமானவர் பார்த்திபன். பாக்யராஜின் வார்ப்பு.  முதல் படத்தில் மனைவியையே தாயாகப் பார்க்கும் காட்சி  வைத்து வசூலை அள்ளி திரைத்துறையில் நுழைந்தவர். தாய்க்கு ஒரு தாலாட்டு என்று தாய்மை போற்றும் தலைப்பு இவர் படத்தில் இருக்கும். காதலுக்கு மரியாதை கொடுப்பது போல் படமெடுத்த இவர் காதல் மனைவி சீதாவை தள்ளி வைத்தது ஒருவகை , கௌபாய் வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட பார்த்திபன்  தொடர்ந்து அதே போல் வாழ்வது என்று தற்போது தனது தாயாரை வீட்டைவிட்டு துரத்திவிட்டார். மகன் துரத்தியதால் வாழ வழி இன்றித் தவிக்கும் அவரது 85 வயது தாயார் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். திரைத்துறையில் பார்த்திபனின் அம்மா என்று பரிதாபப்பட்டு சிலர் செலவுக்குப் பணம் தருகின்றனர். அது எத்தனை நாளைக்கு வரும்.  கோடீஸ்வர வாழ்க்கை வாழும் பார்த்திபன்  தங்குவது தனது அலுவலகத்தில். வீட்டில் மகளும், இரண்டு வேலைக்காரப் பெண்களும் உள்ளனர். வேலைக்காரப் பெண்களுக்கு இடம் இருக்கும் வீட்டில் தாயாருக்கு இடம் இல்லை. சமூகத்தில் இது போன்ற ஆட்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அறிவுரை சொல்வது இருக்கே, ஓட்டு போட்டுவிட்டு வந்து நோட்டா பற்றி அரைமணி நேரம் பேசினார். வெள்ளப்பாதிப்பு பற்றி பாட்டு எழுதியவர், அன்னையின் பாதிப்பு பற்றி கவலைப்படாமல் பிச்சை எடுக்க விடலாமா?

எதையும் வித்யாசமாக செய்யும் இவர் வயதான காலத்தில் தாயாரை பிச்சை எடுக்கவைப்பதிலும் வித்தியாசம் காட்டுகிறார்.'

வாட்ஸப்பில் பரவிவரும் இதற்கு பார்த்திபன் மறுப்புத் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்

“இவ்வளவு பிரச்னைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சமூக நன்மைக்காகவே உழைத்து வருகிறேன். இதோ இப்போது கூட சென்னை கூவத்தை  சுத்தம் செய்வதற்காகத் தலைமைச் செயலகத்தில் அனுமதி பெறக் காத்திருக்கிறேன். இப்படி வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சமூகத்திற்கு நல்லதையே நினைத்து வேலை செய்து கொண்டிருக்கும் போது, பெற்ற  தாயை எப்படி பிச்சை எடுக்க விடுவேன்?' என்றபடி ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார் பார்த்திபன்.

“நல்ல விஷயத்தை செய்ய நினைக்கிற எல்லோரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு விஷயம் தான் இது. இதை அரசியலாகத்தான்  பார்க்கிறேன்.  நடந்து முடிந்த தேர்தலுக்கு முன், என்னுடைய சொந்தக் காசை செலவு செய்து மக்களுக்கு விழிப்பு உணர்வு தரும் வகையில் ஒரு அறிக்கை விட்டேன். அதில் ‘யாரும் ஓட்டுப் போடாமல் இருந்து விடாதீர்கள். உங்களுக்கு அதிருப்தி இருந்தால், நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றேன். அதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு கூட, மரக்காணத்தில் எனக்குச் சொந்தமான  பண்ணை விட்டில்தான் அம்மா இருந்தார். இப்பொழுதும் என்னுடன் தான் இருக்கிறார். 

தொலைக்காட்சி ஒன்றில் இந்தச் செய்தி வந்தது. சிரித்துக் கொண்டேதான் பார்த்தேன். அம்மா உடனே ‘இப்படி எல்லாமா பேசுவாங்க.?' என கோபப்பட்டு சத்தம் போட்டார். நான் சமாதானப்படுத்தினேன்.

வேலை காரணமாக, எங்க குடும்பத்திலேயே நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் அல்லவா வாழ்ந்து வருகிறோம். இன்னும் சொல்லப்போனால், நானே தனியாகத்தானே இருக்கிறேன்.  இதுபோன்ற ஆதாரமில்லாத செய்திகளைப் பரப்பி என்னுடைய பெயரைக் கெடுக்கவே இப்படி வதந்தி பரப்புகிறார்கள்  சிலர்.  இதற்கு  நான் 'ரியாக்ட்' செய்தால் என்னைப் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுபவர்களுக்கு நானே இடம் கொடுப்பது போலாகும். என் அம்மாவிற்கும், எனக்கும் தெரியும், அவரை நான் எப்படி பார்த்துக் கொள்கிறேன் என்று' என முடித்தார்.

-வே. கிருஷ்ணவேணி