Published:Updated:

தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும்...பட்டியலிடும் எஸ்.வி.சேகர்

தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும்...பட்டியலிடும் எஸ்.வி.சேகர்
தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும்...பட்டியலிடும் எஸ்.வி.சேகர்

தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும்...பட்டியலிடும் எஸ்.வி.சேகர்

 திருட்டு விசிடி, தியேட்டர் அதிபர்கள்- தயாரிப்பாளர்கள் பிரச்னை, விநியோகஸ்தர் -பிரபல நடிகர்களுக்கிடையேயான பிரச்னை என தமிழ்சினிமா பிரச்சனைகளால் தெறித்துக்கொண்டிருக்கிறது.சரத்குமார், ராதாரவி இன்னும் சிலர் கோலோச்சிக்கொண்டிருந்த தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் விஷால், கார்த்தி, நாசர் என புது ரத்தம் பாய்ந்து யாரும் எதிர்பாராத க்ளைமேக்ஸ் அமைந்துவிட்டது. 

எந்த மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தமிழகத்தில் அரசியல் அதிகார மையங்களின் ஒத்துழைப்பின்றி எதையும் நிகழ்த்திவிடமுடியாது என்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்த விஷயம். இந்நிலையில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் சினிமாத்துறையை மேம்படுத்த புதியதாக   பொறுப்பேற்ற அரசு செய்யவேண்டிய விஷயங்களை பட்டியலிடுகிறார் நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான எஸ்.வி சேகர். நடிகர் சங்கம் புதிய ஆடை போர்த்திக்கொண்டதில் இவரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. தேசிய திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினராகவும் தற்போது உள்ளார்.  

திரைப்படத்துறையில் சீனியர் என்ற முறையில் சினிமாத்துறையை மேம்படுத்த அரசு என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தோம்.

“திரையுலகம் பல நடைமுறைச் சிக்கல்களில் சிக்கித் தவித்துவருகிறது. சினிமாவின் சீனியர் என்ற முறையிலும் ஜெயலலிதா நிறைய சீர்திருத்தங்களை சினிமாத்துறையில் செய்யவேண்டி உள்ளது. ஆண்டுக்கு 400 படங்கள் வெளிவந்தால் அதில் 350 படங்கள் சிறு பட்ஜெட் படங்கள். இந்தப்படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் 500 கோடிக்கு மேல் நட்டமடைகிறார்கள். கேரளா, கர்நாடக மாநிலங்களில் தங்களின் மொழிப்படங்களுக்கு அடுத்த முக்கியத்துவத்தைதான் மற்ற மொழிகளுக்கு தருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் டப்பிங் படங்கள், மற்ற மொழிப்படங்களே பெரும்பாலான தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளன. நேரடி தமிழ்த்திரைப்படங்களுக்கு 75 சதவீதம், மற்ற மொழிப்படங்களுக்கு 25 சதவீதம் என்பதாக அரசாணை வெளியிடவேண்டும். அப்போதுதுான் சினிமாத்துறையைக் காக்கமுடியும்.

சிறந்த தமிழ்ப்படங்ளுக்கு அரசு தரும் மானியத் தொகை கடந்த 2007 முதல் தரப்படாமல் உள்ளது. அவற்றைத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திரைப்படங்களுக்கான வரிவிலக்கிலும் மாற்றங்கள் செய்யவேண்டும். பொதுவாக ஒரு படத்திற்கு அளிக்கப்படும் வரிவிலக்கு அதன் தயாரிப்பாளருக்கான லாபமாக மட்டுமே இருக்கிறது. படத்தின் வெற்றிக்குக் காரணமான ரசிகர்களுக்கு அதனால் ஒரு பயனுமில்லை. அதனால் இந்த வரிவிலக்கை ரசிகர்களுக்கான கட்டணச் சலுகையாக அறிவிக்கவேண்டும். 120 ரூபாய் டிக்கெட்டை 80 லிருந்து 90 ஆக்க வேண்டும். அரசின் நோக்கம் நேரிடையாக பொதுமக்களைச் சென்றடைவதோடு தன் பட்ஜெட்டில் சினிமாவுக்கான செலவு அடங்கினால் திருட்டு விசிடி, நெட்டில் பார்ப்பது ஆகியவற்றை தவிர்த்து ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். அது சினிமாவை இன்னும் நுாறாண்டு வாழவைக்கும். 

மேலும் பொத்தாம் பொதுவாக எல்லாப் படங்களுக்கும் வரிவிலக்கு அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். அந்த வகையில் 100 முதல் 150 தியேட்டர் எண்ணிக்கைகளில் ரிலீசாகும் திரைப்படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு சலுகையை தரவேண்டும். பெரிய பட்ஜெட் படங்களுக்கும் வரிச்சலுகை என்பது பென்ஸ் காரில் வந்திறங்குபவர்களுக்கு 'அம்மா உணவக' உணவு தருவதுபோலதான். 500 முதல் 1000 தியேட்டர்களில் தங்கள் படத்தைத் திரையிடுபவர்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய லாபமுமில்லை. அதை அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை. ஆனால் சிறுதயாரிப்பாளர்களுக்கு அது பெரிய வரப்பிரசாதம். நட்டத்தில் சிறு ஆறுதல். அதனால் வரிச்சலுகையிலும் மறுபரிசீலனை செய்யவேண்டும். 
மேலும் சமீப காலமாக தவறான வழிமுறை உருவாகியுள்ளது. வரிச்சலுகைக்காக கமிட்டி முன் படம் வருவதற்கு யு சான்றிதழ் அவசியம் என்பதால் அந்தச் சான்றிதழைப் பெற சில தயாரிப்பாளர்கள் 'பலவித' முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இது தவறான முன்னுதாரணமாகிவிட்டது. இதைத் தவிர்க்க யு அல்லது யுஏ சான்றிதழ் என்று விதிமுறை தளர்த்தப்படவேண்டும். இதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அந்த வரிவிலக்கு அளிக்கும் தேர்வுக் கமிட்டியிடமே விடலாம். இது முறைகேடுகளைத் தவிர்க்க உதவும். 

கேரளாவிலும் மற்ற மொழித் திரைப்படங்களிலும் திருட்டு விசிடி என்ற ஒருபிரச்னை இல்லை. ஆனால் தமிழகத்தில் அது பெரும்பிரச்னை. இதைத் தவிர்க்க சினிமா வெளியிடும்போதே அதற்கான டிவிடிக்களையும் தயாரிப்பாளர்களே வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் சர்வசாதாரணமாக அரசு கேபிள்டிவிகளில், புதிய படங்கள் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பும் அவலம் நடக்கிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்சினிமாவில் முன்புபோல் சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் உருவாகவில்லை. காரணம் குறைந்தபட்ச தயாரிப்புச் செலவே இப்போதெல்லாம் பல கோடிகளைத் தொடுகிறது. சினிமாத்துறை தொய்வின்றி வளர சிறுதயாரிப்பாளர்கள் அவசியம். அதனால் எம்.ஜி.ஆர் திரைப்பட நகரை மீண்டும் நவீனமாக அரசு புதுப்பிக்கவேண்டும். அப்படிச் செய்வதால் சிறுதயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் படப்பிடிப்பிற்கு பல கோடிகள் செலவழித்து வெளிநாட்டிற்கு போகவேண்டிய அவசியமிருக்காது.   

நீங்கள் நாடக நடிகரும் கூட...நாடகத்துறைக்கு என்ன கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்கள்...?

சினிமாவின் தாய்வீடான நாடகத்துறை சினிமாவை விட மோசமான நிலையில் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் அரங்கில் சினிமா அரங்கம் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாடகங்கள் இல்லையேல் இன்று சினிமா இல்லை. கலைவாணர் அரங்கில் நாடகங்களையும் நடத்தும் வகையில் அரங்கம் கட்டினால் நல்ல விஷயம். இதற்கு பெரிய செலவொன்றும் ஆகாது. ஒரு லட்சம் செலவழித்தால் சினிமா அரங்கையே நாடகத்திற்குமானதாக மாற்றமுடியும். கலைவாணர் பெயரில் இயங்கும் அரங்கத்தில் இந்த வசதி செய்யப்பட்டால் கலைவாணருக்கான மரியாதையாக அது இருக்கும். 

மேலும் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட நாடக விருதுகளைப் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அவர்களுடன் செல்லும் ஒருவருக்கும் இலவச பயணச் சலுகை அளிக்கவேண்டும். நானோ கார்த்தியோ விஷாலோ இதை பயன்படுத்தப்போவதில்லை. நலிந்த கலைஞர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். 

அதிருக்கட்டும் அதிமுகவில் இணைந்தீர்கள், தேர்தலிலும் வென்றீர்கள், இருவரும் ஒரே துறையிலிருந்தாலும் ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும் எதனால் பிரச்னை வந்தது?

எங்கிருந்தாலும் நான் நானாகவே இருக்க விரும்புவதுதான் பிரச்னை (பகபகவென சிரிக்கிறார்.)...முதல்வருடன் எனக்கு 1992 லிருந்து பழக்கம். கட்சியிலிருந்து விலகிவிட்ட  நிலையிலும் இன்றும் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கடிதம் தொடர்ந்து அனுப்பிவருகிறேன். அவர் எனக்குக் கட்சியில் அளித்த கவுரவத்திற்கு அவர் மீது நான் வைத்திருக்கும்  மரியாதை இது. 1992 முதல் 2009 ல் கட்சியை விட்டு வெளியேறியதுவரை 30 தடவைகள் சந்தித்திருக்கிறேன். எப்போதும் என்னை அவர் நிற்கவைத்துப் பேசியதில்லை. மிஸ்டர்  என்று விளிக்காமல் என்னை அவர் அழைத்ததுமில்லை. பத்து பைசா கொடுக்காமல் மைலாப்பூர் தொகுதியில் வென்றேன். தொகுதி நிதியை பரிசுத்தமாக மக்களுக்கே செலவிட்டேன். மக்கள் பணத்தில் கைவைக்கும் நிலையில் என்னை ஆண்டவன் வைத்திருக்கவில்லை. சேகர் ஏதோ சில காரணங்களுக்காக அதிமுகவிற்கு தேவைப்படாதவனாக இருந்திருக்கலாம். அதனால் வெளியேற்றியிருக்கலாம். அது ஒரு கட்சியின் முடிவு. அதை இப்போது பேசுவதில் பயனில்லை. நான் இன்னொரு கட்சியின் உறுப்பினர். பொறுப்பிலும் இருக்கிறேன். பாஜகவோ அதிமுகவோ எதுவானாலும் நான் நானாகவே இருக்கிறேன். என் இருப்பை கட்சிகள்தான் தீர்மானிக்கின்றன.

ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளுகிறீர்கள், பிரதான எதிர்க்கட்சி சார்பாக பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஸ்டாலின் அவமதிக்கப்பட்டிருக்கிறாரே...?

சார் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். அதிமுகவில் முக்கிய விஷயங்கள் மட்டுமே ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்படும். எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரிந்தே நடக்கும் என்று சொல்லிவிடமுடியாது. ஜெயலலிதாவை குஷிப்படுத்துவதாக நினைத்து அதிகாரிகள் இப்படிச் செய்திருக்கலாம். இத்தனை பெரிய கொண்டாட்டத்தில் தன் மீது ஒரு விமர்சனம் வர அவரே காரணமாகியிருப்பாரா? என்கிற எஸ்.வி சேகர், “அதைவிடுங்கள்... சினிமாவின் எதிர்காலத்திற்கு மேற்சொன்னவற்றை முதல்வர் செய்தால் திரைப்படத்துறை என்றும் நன்றியுடன் இருப்போம்”-மெல்லிதாக சிரித்து பேட்டியை முடித்துவைக்கிறார்.
 

-எஸ்.கிருபாகரன்

அடுத்த கட்டுரைக்கு