Published:Updated:

சாதிக்கெதிரான சாட்டையடி!

Vikatan Correspondent
சாதிக்கெதிரான சாட்டையடி!
சாதிக்கெதிரான சாட்டையடி!

பூமியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐம்பெரும் நில பிரிவுகள் இருக்க, பூமியில் வசிப்பவர்களுக்கு இடையே தவறுதலாக ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய பிரிவினை தான் “சாதியும் சாதி சார்ந்த இடமும்” என்பதைச் சொல்லும் சாதி சார்ந்த பல படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், மாறுபட்ட கோணத்தில் மீண்டும் ஒரு முயற்சி தான் உறியடி.. மைம் கோபியை தவிர அனைவருமே புதுமுகங்களாக கொண்டு திரைக்கு வந்திருக்கிறது.

சாதிய அமைப்புகளும் அதன் கட்டுப்பாடுகளும் இன்று வரையிலும் தளர்த்தவோ, உடைத்தெறியவோ முடியாத ஒரு சமூகத்தில் நாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம். அன்றிலிருந்து இன்றுவரையிலும் கொலைகள், கலவரங்கள் மற்றும் போராட்டங்கள் என வெடித்துச் சிதறுவதற்கு மூலகர்த்தாவாக பல இடங்களில் சாதிய பிரச்னைகளே காரணியாக இருக்கிறது. 1999-ல் இரு வேறு சாதிகளுக்கு இடையே சிக்கிய, தீண்டாமையை எதிர்க்கிற  நான்கு மாணவர்களைச் சுற்றியே உறியடி படத்தின் கேமிரா நகரத்தொடங்குகிறது.

வெளியூர்களிலிருந்து, முதல் தலைமுறை பட்டதாரிகளாக பொறியியல் படிக்க வரும் நான்கு மாணவர்கள், தாபா (மதுவுடன் கூடிய உணவு விடுதி), கல்லூரி, காதல் என்று ஜாலியாக சுற்றித்திரிகிறார்கள். அதே ஊரில் சாதிச் சங்கத்தினர் வைக்கும், தங்கள் தலைவரின் சிலையை அரசு சில காரணங்களால் சீல் வைத்துவிடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தன் சாதி சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நினைக்கிறார் மைம் கோபி.  இதற்கு நடுவே, தனிப்பட்ட பகை காரணமாக அந்த நான்கு மாணவர்களையும் கொல்லத் துடிக்கும் மைம்கோபியின் சாதிக்காரர் சுருளி. இவர்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும் இந்த நால்வரும், எல்லாம் இந்த சாதியினால்தான் என்றறிந்த மாணவர்கள் எடுக்கும் முடிவும்தான் உறியடி!
 
”என்னத்துக்கு வம்பு” என்ற காரணத்தாலேயே 1999-ல் நடப்பது போல படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அதற்கான சூழ்நிலை சரியாக காட்சியில் அடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதிருந்த சாதிய நிலைப்பாடுகள் என்னென்ன என்பதை லைட்டாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தாழ்ந்த சாதி மக்களை ஓட்டலுக்குள் அனுமதிக்க மறுப்பது, அவ்வாறு சாப்பிட நேர்ந்தாலும் காசு வாங்க அருவெறுப்பது என்று பிரச்னைகளை கண்ணாடி போலச் யாக சொல்லிச்செல்கிறது திரைப்படம்.

மாணவர்களாக நடித்திருக்கும் விஜயகுமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் எல்லோருமே அவர்களுக்கான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். “நீங்களாம் எதிர்காலத்துல என்னவாக போறீங்க?” என்று கேட்க, ஒவ்வொருவராக  “ஜாலியா இருக்கணும்” என்று சொல்வதும், தன் சகோதரி திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும் இடத்தில், “உங்களத் தவிர இன்விடேஷன் கொடுக்கற அளவுக்கு எனக்கு வேற யாரு இருக்கா?’ என்று நண்பன் சொல்வதும் என்று பல இடங்கள், நம் கல்லூரி நாட்களை நினைவுபடுத்தும்

பிரச்னையில் சிக்கியிருக்கிறோம் என்று தெரிந்ததும், சண்டை போட ஆள் வருவார்கள் என்று முன்கூட்டியே சண்டைப் போட தயாராகும் காட்சிகள், எதற்கெடுத்தாலும் அடிக்க கிளம்புவது என்று படம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் வன்முறை காட்சிகள் அரங்கேறுவது கொஞ்சம் வருத்தம். இவர்களெல்லாம் வகுப்பறைக்கு செல்ல மாட்டார்களா? அந்த ஊரில் போலீசாரே இல்லையா என்ற சில கேள்விகளும் எழுகிறது. ஹீரோயினாக வரும் ஹெல்லா பென்னா கதாபாத்திரம் படத்தோடு ஒட்டாமல், வந்து போகிறது.

இதுவரை வெளியான பல சாதியப் படங்களின் முடிவு நிச்சயம் கொலையாகவோ, டிராஜடியாகவோ தான் முடியும். ஆனால் இதில் வித்தியாசமான நோக்குகளைக் கையாட்டிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணி இசையமைப்பாளர் என்று எடுத்த அனைத்தையும் கச்சிதமாக செய்திருக்கிறார் விஜய்குமார்

“நம்ம ஜாதிப்பெயரை சொன்னாலே நாம தான் தலைவரா இருக்கணும், எவனையும் வளர விட்டுறக்கூடாது” என்று சாதியை பகடையாக கொண்டு தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கும் சாதித்தலைவர்களின் மனநிலையை ஒற்றை வசனத்தில் சொன்னது நச்.  சமீபகாலத்தில் விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் பல சாதியக் கட்சிகளின் வரலாற்று பின்னணியில் நிச்சயம் பல உயிர்கள் பலியாகி இருக்கும் என்ற கேள்வியை எழுப்பிய விதத்தில் உறியடி, சாதிக்கெதிரான சாட்டையடி...