Election bannerElection banner
Published:Updated:

எத்தனை தடவை எங்களை சாகடிப்பீங்க? - கதறும் பிரபலங்கள்!

எத்தனை தடவை எங்களை சாகடிப்பீங்க? - கதறும் பிரபலங்கள்!
எத்தனை தடவை எங்களை சாகடிப்பீங்க? - கதறும் பிரபலங்கள்!

எத்தனை தடவை எங்களை சாகடிப்பீங்க? - கதறும் பிரபலங்கள்!

'நான் உயிரோடுதான் இருக்கிறேன்!' என அதற்கான ஆவணங்களுடன் ஒருவர் காவல்துறையிடம் வந்து கதறுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சில தினங்களுக்கு முன் அது நடந்தது. மதுரை கமிஷனர் அலுவலகத்தில். அப்படிக் கதறியவர் நடிகர் செந்தில்.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் என சமூக வலைத்தளங்கள் வருகைக்குப்பின் தேவையான / உண்மையான தகவல்களோடு, தேவையற்ற செய்திகளும், வதந்திகளும் பரவவிடப்படுகின்றன. ‘நான்தான் உனக்கு முதல்ல இதச் சொன்னேன்’ என்று சொல்லிக் கொள்வதற்காகவே அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல், உடனே பிற குழுக்களுக்கு, நண்பர்களுக்கு என்று ஃபார்வேர்ட் செய்பவர்களே அதிகம்.

பிரபலங்களைக் குறித்து இப்படி வதந்தி பரப்புவதால், அது அதிகம் பேசப்படும் என்பதால் அவர்கள்தான் இலக்காகிறார்கள். இதுபோன்ற வதந்திகளால் சம்பந்தப்பட்டவரும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று, அந்த வதந்தியைப் பரப்புபவர்கள்  உணர்வதில்லை. 

திரையுலகில் எம்.எஸ் பாஸ்கர் தொடங்கி, ஆனந்தராஜ், கனகா, சோ, கே.ஆர்.விஜயா, சிந்து மேனன், லியோனி, பப்லு என இன்று செந்தில் வரை பலரும் சந்தித்திருக்கிற தொல்லை ’நீங்க இறந்துட்டீங்கன்னு நியூஸ் வந்துச்சே’ என்பது. இதனால் அவர்கள் எத்தனை மனஉளைச்சலுக்கு ஆளானார்கள் என்பதை, சிலர் வேதனையுடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

 'ஈரம்' சிந்து மேனன்


'ஈரம்' படத்திற்குப் பிறகு வாய்ப்புகள் மிகக்குறைந்த அளவுக்கே சிந்து மேனனுக்கு வந்துகொண்டிருந்தது. அதன் பிறகு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். இவர் திரைத் துறையில் இல்லை என்பதால் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது.

'திருமணம் ஆகி லண்டனில், என் கணவரோடு செட்டில் ஆகிட்டேன்.  எனக்கு இரண்டரை வயது மகள் இருக்கிறாள். என்னைப்பற்றி உலவிய வதந்தி என் கணவரின் நண்பர் மூலமாகத்தான் தெரிந்தது. அவர் ஃபோன் செய்து, விசாரித்தபோது  அதிர்ச்சியானேன். செய்தி கேட்டதும் எனக்கு 'பக்'கென்று இருந்தது. இப்பொழுதும் கூட. என் பெயரில் உள்ள வேறு ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இந்த வதந்தி பரவியிருக்கிறது. என்னுடைய பெயரும், 'சிந்து' என்பதால் நான் தான் இறந்துவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த வதந்தியால் என் நண்பர்கள் உறவினர்கள் கலங்கிப்போனார்கள். எந்த ஒரு செய்தியையும் உறுதிப்படுத்தாமல் பகிர்வதால்தான் இதெல்லாம் நேர்கிறது”


பட்டிமன்ற பேச்சாளர் லியோனி


நான் பயணம் சென்ற கார் விபத்துக்குள்ளாகி நான் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக ஆறு மாதத்திற்கு முன்பு, 'தீ'யாக செய்தி பரவியது. நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று நானே வந்து சொன்னேன். அதன்பிறகு மூன்று மாதம் கழித்து தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தசமயம் திடீரென என்னுடைய படத்திற்கு பொட்டு வைத்து மாலை போட்டு வாட்ஸ் அப்பில் நான் இறந்துவிட்டதாக வதந்தியை பரவ விட்டார்கள். முதலில் இருந்ததை விட இரண்டாவதாக வந்த வதந்தி பலரையும் பாதிப்புக்குள்ளாக்கியது. கனடா, இந்தோனேசியா, அமெரிக்கா என பல நாடுகளிலிருந்து ஃபோன் மேல் ஃபோன். அவ்வளவு விசாரிப்புகள். நான் நன்றாக இருக்கிறேன் என்று சொன்ன பிறகே நிம்மதியானார்கள்.
என் திறமை மீது பொறாமை கொண்டவர்கள் செய்யும் விஷமம்தான் இது.  மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டால் இந்த பிரச்னையில் நகைச்சுவை உணர்வை இழந்துவிடுவார் என்பதே அவர்களது திட்டம். அறிவியல் வளர்ச்சியில் எத்தனையோ நல்ல விஷயங்களை செய்யலாம். எதற்காக இப்படி கோழைத்தனமான தாக்குதலை செய்ய வேண்டும். இதற்கு, காவல்துறையில் சைபர் க்ரைம் பிரிவுதான் ஒரு தீர்வு தரவேண்டும். கொஞ்சம் முயற்சி செய்தால் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்புவதை கண்டிப்பாக தடுக்கமுடியும். இதுபோன்ற விஷமிகளுக்கு பெரிய தண்டனை கொடுத்து, மீடியாவில் அது செய்தியாக வரவேண்டும். அப்போதான், இது இதுபோன்று செய்பவர்களுக்கு பயம் வரும்.

நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர்

இது அற்பத்தனமான நீசர்கள் செய்யக்கூடிய நீசச் செயல். இவர்களுக்கும் அண்ணன், தம்பிகள், தாய் தந்தையர் என எல்லோருமே இருக்கத்தானே செய்வார்கள்.  வெளியூரில் இவர்கள் இருந்து தங்களைப்பற்றி இந்தமாதிரி செய்தியை கேள்விப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை உணரவேண்டும். யாருடைய மரணம் பற்றியோ தீர்மானிப்பதற்கு இவர்களுக்கெல்லாம் எந்த அருகதையும் கிடையாது.  ஒழுக்கமான எண்ணமுடையவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்யமுடியும். கத்தியை காய் வெட்டவும் பயன்படுத்தலாம்...கழுத்திலும் வைக்க பயன்படுத்தலாம்...நான் கழுத்தை அறுக்கத்தான் பயன்படுத்துவேன் என்பவர்களை என்னசெய்வது?

என்னைப் பற்றிய இறப்பு செய்தி வந்தபோது நான் வீட்டில் இருந்தேன். என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு காண்பித்து சிரித்துக் கொண்டோம். ஆனால், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து வரும் ஃபோன்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. நான் வீட்டில் இருந்ததால்  பரவாயில்லை. இதுவே நான் படத்திற்காக வெளிநாட்டிலோ, வெளியூரிலோ இருந்திருந்தால் என் குடும்பத்தாரின் மன நிலை? இது எவ்வளவு தவறான விஷயம்? இந்த மாதிரி பேச்சு அடிபட்டால் 'ஆயுசு கெட்டி' என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் இங்கு வேலைக்கு ஆகாதுங்க. இந்த மாதிரி தவறான செய்திகளை பரப்புபவர்களை கண்டுபிடித்து, நடுரோட்டில் நிற்க வைத்து  எதைக் கொண்டு வேணாலும் அடிக்கலாம்.

பிரித்வி ராஜ் (பப்லு); சின்னத்திரை நடிகர்

முன்பு செய்தி பரவுவதைவிட, இப்போது கண நேரத்தில் உலகம் முழுவதும் விரைவாகப் பரவுகிறது. என்ன, ஏதுன்னு கூட கேட்க மாட்டீங்கறாங்க. உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துட்டார் என்றுசொல்ல ஒருவருக்கு முதலில் எப்படி மனது வருகிறது. இது முற்றிலும் மனிதாபிமானம் இல்லாத செயல். நமக்கு வரும் தகவல்கள் சரியா, தவறா என தெரிந்துகொள்வது மிக அவசியம். எனக்கு, சாய் பிரசாந்த் தற்கொலை பெரிய அளவுக்கு பாதித்தது. 'மெட்ராஸ் மீட்டர்', 'எதாவது வித்தியாசமான ஒரு குறும்படம் செய்து தர என்னிடம் கேட்டார்கள்.  அதற்காக நான் கையில் எடுத்தது, சாய்பிரசாந்த் தற்கொலை. ஸ்கிரிப்ட்,கேமரா, நடிப்பு என அனைத்தையும் நானே  செய்து இயக்கினேன்.

தலைப்பு என்ன வைக்கலாம் என யோசித்தபோது, 'ஒரு நிமிஷம்' என போடலாம்னு நினைத்தேன். ஆனா, அது பொருத்தமாக இல்லாததால 'தற்கொலை' என வைத்தேன். அதை மற்றவரிடத்தில் கொண்டு செல்ல,'வாட்ஸ் அப்ல டப்பிங்கில்.. 'என்னுடைய திறமையை யாரும் சரியா புரிஞ்சுக்கல.. நான் பிறந்த உடன் அழும்போது எல்லாரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்களாம்.. நான் சிரிச்சிட்டு சாகும்போது எல்லாரும் என்னைச் சுத்தி அழட்டும்' என பேசி நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு ரிலீஸ் செய்யலாம் என்றிருந்தோம். ஆனால் அதற்கு முன்பே, வெளியில் பரவிவிட்டது.

இதில் யாரோ ஒருவர், 'பப்லு சூசைட்' என என்னுடைய படத்தைப் போட்டு செய்தி வெளியிட்டுவிட்டார்.  அந்த செய்தி கேட்டு என்னோட  ஆன்ட்டி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. நான் ஊர்ல வேறு இல்லையா தகவல் றெக்கை கட்டி பறந்திடுச்சி... இந்த செய்தி ஒருநாளில் உலகம் முழுவதும் பரவிவிட்டது. எந்த ஒரு இறப்புச் செய்தியையும்   கிராஸ் செக் செய்யாமல் போனால் கண்டிப்பாக பலரும் பாதிக்கப்படுவார்கள்.

நகைச்சுவை நடிகர் செந்தில்

எனக்கு செய்தி வந்தப்போ என் மனைவிகிட்டத்தான் காண்பிச்சேன். ஆனா, அதுக்குள்ள குடும்பத்துல இருக்கிற பலரும் பதறியடிச்சிட்டு எனக்குப் போன் பண்ணி விசாரிச்சாங்க. என்னை விடுங்க, என் பக்கத்துல இருக்கவங்க மனசு எப்படி இருக்கும். என்னோட இறப்பு செய்தியை பரப்பினவங்க, கட்சிக்காரங்களாதான் இருக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு யாருமே எதிரி இல்லங்க.. எனக்கு நானே தான் எதிரி. இந்த செய்தியை கண்டிப்பா கட்சி நண்பர்கள் செய்திருப்பாங்க. முதல் தடவை மாரடைப்பால் இறந்துவிட்டார் என தேர்தல் பிரசாரம் செய்யும்போது வந்தது. இப்போது இரண்டாவது முறையாவும் வருது. இதை இப்படியே விட்றக்கூடாதுன்னுதான் மதுரை கமிஷனர் ஆபீஸ்ல புகார் கொடுத்தேன். இப்போ கிரைம் பிராஞ்ச்  ஆபீசுக்குப் போயிட்டு இருக்கேன்.  சிரியா போன்ற நாடுகள்ல வாட்ஸ் அப் க்கு தடை வந்திருக்காம். இங்கேயும் அதை தடை பண்ணணும். சின்னப் புள்ளைங்க கெட்டுப் போறதே இதனாலதான். கடைசியா என்னோட மனைவி சொன்னது, 'விடுங்க இவ்வளவு நாள் உங்களுக்கு இருந்த திருஷ்டி  போயிடுச்சு'ன்னாங்க. ஏன் ப்ரதர் இப்படி எல்லாம் பண்றீங்க?” என்று முடித்தார் செந்தில்.

ரொம்ப பெரிய பாதிப்பில்லாத வதந்திகள்னா, தனுஷ் பண்ணின மாதிரி  ட்விட்டர்லபதில் சொல்லிடலாம். இப்படி மனசைப் பாதிக்கற மாதிரி வந்தா... கஷ்டம்தான்.

ஃபார்வேர்ட் செய்யும்முன் ஒரு நிமிடம் யோசியுங்களேன்..!

-வே. கிருஷ்ணவேணி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு