Published:Updated:

குழந்தை வளர்ப்பு பற்றி என்ன சொல்கிறார் ராதிகா சரத்குமார்!

குழந்தை வளர்ப்பு பற்றி என்ன சொல்கிறார் ராதிகா சரத்குமார்!
குழந்தை வளர்ப்பு பற்றி என்ன சொல்கிறார் ராதிகா சரத்குமார்!

சின்னத்திரை, இரண்டு குழந்தைகள், புரொடக்‌ஷன் கம்பெனி என்று 24 மணி நேரமும் பத்தாமல் ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார், நமக்காக குழந்தை வளர்ப்பை பற்றி பேசினார்..

''நான் வேலைக்குப் போறேன்; என்னால என் குழந்தைய பாத்துக்கவே முடியலன்னு பெத்தவங்க சொல்லவே கூடாது. ஒரு தாய்க்கு எந்த விஷயத்துக்கு முதல்ல முக்கியத்துவம் தரணும்னு தெரியணும். என்னை பொறுத்தவரை, பெத்தவங்க குழந்தைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரணும்.

ஆணோ, பெண்ணோ குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை நாம்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.  'குட் டச்', 'பேட் டச்'னா என்னனு நாமதான் அவசியம் சொல்லித் தரனும். இன்றைய சமுதாயத்துக்கு இது ரொம்ப முக்கியம். அதுமட்டுமில்லாம கொஞ்சமாவது நம்ம குழந்தைகளுக்குன்னு நேரம் செலவழிக்கணும்.

தினமும் காலையில ஸ்கூலுக்கு போனதுல ஆரம்பிச்சு ஈவனிங் வீட்டுக்கு வர்ற வரைக்கும் என்ன நடந்துச்சுனு கிளாஸ் டீச்சர் மாதிரி கேக்காம, கேஷுவலா கேக்கணும். அப்பதான் நம்ம பசங்க வாழ்க்கையில புதுசா யார் அறிமுகம் ஆகியிருக்காங்க, எந்த நேரத்துல அவங்க  வீட்டுக்கு வந்தாங்க, எப்படி நடந்துகிட்டாங்கனு தெரியும். குழந்தைகளை இதை செய், அதை செய்னு கட்டளையிட்டு எந்த விஷயத்தையும் அவங்க மேல திணிக்கக்கூடாது. ஏன் நீ இந்த மாதிரி செய்யக்கூடாது? செஞ்சா நல்லா இருக்கும். நீயே யோசின்னு சொல்லலாம். இல்ல அவங்க செய்ய நினைக்கிறது சரியாக இருந்தா அதற்கு வழிகாட்டியாக இருக்கலாம்.

என் மகன் ராகுல் சரத், அவனுடைய கனவுகளை அடிக்கடி என்கிட்டே சொல்லிட்டே இருப்பாரு . அவருக்கு நான் நல்ல வழிகாட்டியாக இருக்க நினைக்கிறேன் . இந்தக் காலத்து குழந்தைகள் கெட்டு போய்ட்டாங்கன்னு பல பேரு சொல்லுறதுல எனக்கு உடன்பாடு இல்லை . அவங்க மாறலை. நாமதான் மாறிட்டோம். சின்ன குழந்தைகளுக்கு கூட மினி ஸ்கர்ட், டியூப் டாப் போட்டு விடுறாங்க. அதுக்குப் பதிலா எப்படி டீசன்டா டிரஸ் பண்ணணும்னு நாமதான் நம்ம குழந்தைகளுக்குச் சொல்லி கொடுக்கணும். சின்னவயசுல டியூப் டாப் போட்டு விட்டுட்டு, வளர்ந்த பிறகு இந்த டிரஸ் போடாதனு சொன்னா அவங்களுக்குப் புரியாது.

இந்தக் காலத்துல குழந்தைகளுக்கு தகவல்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே கிடைக்குது. அது மூலமா போய் சேர்ந்த தகவல்கள் எல்லாம் எந்தளவுக்கு உண்மைனு நீங்கதான் உங்க பசங்களுக்குப் புரிய வைக்கணும்.  குழந்தைங்க முன்னாடி யாரை பத்தியும் தப்பா பேசாதீங்க. அவங்க முன்னாடி என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசுங்க" என்று பேசிக்கொண்டிருந்தவர், அப்படியே ரியாலிட்டி ஷோ பற்றி பேச ஆரம்பித்தார்.

''பொதுவா, எனக்கு குழந்தைகளுக்கான  'ரியாலிட்டி ஷோ' மேல அவ்வளவு ஈடுபாடு இல்ல. காரணம், அது குழந்தைத்தனத்தை வெகுவா குறைக்குது. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் என்கிற பேருல பசங்களை டான்ஸ், பாட்டு, ஸ்போர்ட்ஸ்னு எல்லாத்துலயும் வலுக்கட்டாயமா  சேர்த்து விட்டு கஷ்டப்படுத்தக்கூடாது.  என்னுடைய மகன் ராகுலுக்கு வில் வித்தை கத்துக்கணும்னு ஆசை. அதை அவரே என்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் தான் அதுக்கான பயிற்சியை நான் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன். அதே சமயம் குழந்தைங்க கேட்குறதை எல்லாம் வாங்கி கொடுக்கிறதுலேயும் எனக்கு விருப்பமில்லை. என் கணவர் சரத் அடிக்கடி “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"னு சொல்லிட்டே இருப்பார்.

அதிகப்படியான சுதந்திரம், கண்டிப்பு எல்லாமே தப்புதான். என் குழந்தைகளுக்கு ஒரு சில விஷயங்களை நான் எப்பவும் அழுத்தமா சொல்லிக்கிட்டே இருப்பேன்.

விளையாடுறப்ப விளையாடணும், குடும்பத்துக்கான நேரத்தை செலவழிக்கிறப்ப அதை மிஸ் பண்ணக் கூடாது. படிக்கிறப்ப கவனம் முழுசா அதுல இருக்கணும். இந்த தெளிவை பெரியவங்க நாமதான் குழந்தைக்கு கத்துத் தரணும்.இதை என் பசங்களுக்கு சொல்லிச் சொல்லிதான் வளர்க்கிறேன். அதே நேரம் நம்ம குழந்தைகளுக்கு நாமதான் பெஸ்ட் ஃப்ரெண்டா இருக்கணும்" என்று நச்சென சொல்லி முடித்தார் ராதிகா சரத்குமார்.

- கி.சிந்தூரி