Published:Updated:

அந்தக் குழந்தையே நான்தான் - ‘ சந்திரமுகி பொம்மி’ - பிரகர்ஷிதா ஜாலி பேட்டி

அந்தக் குழந்தையே நான்தான்  - ‘ சந்திரமுகி பொம்மி’ - பிரகர்ஷிதா ஜாலி பேட்டி
அந்தக் குழந்தையே நான்தான் - ‘ சந்திரமுகி பொம்மி’ - பிரகர்ஷிதா ஜாலி பேட்டி

அந்தக் குழந்தையே நான்தான் - ‘ சந்திரமுகி பொம்மி’ - பிரகர்ஷிதா ஜாலி பேட்டி

''கொக்கரக்கோ சேவல் வந்து என்ன பேரு கூவுது ?
வேல் வேல் வேல்முருகா வேல்..

இந்தப் பாட்டைக் கேட்டதும் ‘வேலன்’ நாடகம் ஞாபகம் வருதா? அந்த வேலன் நாடகத்துல நடிச்ச இந்த வேலாயி-தான் , ‘ஏ பொம்மி... ஏஏ பொம்மி... ’ என்று ரஜினி சந்திரமுகியில் அழைத்த ’குழந்தை’. இப்ப என்ன பண்ணுது அந்தக் ‘குழந்தை’?

சென்னை மயிலாப்பூரில் ஷாப்பிங்ல பிஸியாயிருந்த பொம்மியை மடக்கிப் பிடித்தோம்.  '' அய்யோ அக்கா என் பேர் " பிரகர்ஷிதா " என்றார், சந்திரமுகியில் பார்த்த அதே குழந்தை சிரிப்புடன்.. 

உங்களை இப்போ டி.வில பார்க்கமுடியலையே?

கடைசியா சிம்ரன் மேடம் பொண்ணா  "அனுவும்  நானும்" சீரியல்-ல நடிச்சேன். அப்போ நான் சிக்ஸ்த் படிச்சிட்டு இருந்தேன் .தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தது. ஒரு நாள் அம்மா ''நடிக்கபோறியா இல்ல படிக்கப்போறியா’ன்னு கேட்டாங்க. நான் படிப்பு தான்னு முடிவெடுத்துட்டேன்.

அது சரி.. அதுக்குன்னு இவ்ளோ பெரிய இடைவெளியா ?

ஒரு தடவ நான் கபாலீஸ்வரர் கோயில் போயிருந்தேன். அங்க ஒரு 6 வயசு பாப்பா, அம்மாவைத் தொலைச்சுட்டு அழுதுட்டு இருந்துச்சு. அந்தக் குழந்தைய தூக்கிட்டு அவங்க அப்பா அம்மாவைத் தேடினேன். கடைசியா சிவன் சன்னதியில அவங்க அம்மா சாமி கும்பிட்டுட்டு இருந்தாங்க. குழந்தையை பதறி வாங்கினவங்க, என்னைப் பார்த்து ‘நீதானே சந்திரமுகியில நடிச்ச?’ன்னு கேட்ட கேள்வியை இப்ப வரைக்கும் மறக்க முடில. குழந்தை காணாம போன பதற்றம் கூட அவங்க முகத்துல பார்க்கலை. என்னவோ அந்த நிமிடம், கொஞ்ச நாள் ஃபீல்டுக்கு பிரேக் விடலாம்னு தோணுச்சு அவ்வளவு தான்.

இப்போ என்ன பண்றீங்க ?

எம்.ஓ.பி  வைஷ்ணவ் காலேஜ்ல பிஎஸ்சி எலக்ட்ரானிக் மீடியா செகண்ட் இயர்  படிக்கிறேன். அடுத்து பிஜி படிக்கணும். ஸ்கிரிப்ட் எழுதுறதுக்கான முயற்சிகள் பண்ணிட்டு இருக்கேன் .

காலேஜ்ல உங்களுக்கு ஃபேன்ஸ்  இருக்காங்களா?

நானே போய் யார் கிட்டயும் சொன்னதில்லை. யாரும் அப்படி கண்டுபிடிச்சாலும் சிரிச்சிட்டே போய்டுவேன்.

சரி, உங்க எதிர்கால திட்டம் தான் என்ன?

சின்ன வயசுல டாக்டர் ஆகணும்னு நினைச்சேன். இப்போ சினிமா தான் கனவே. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மாதிரி பெரிய இயக்குநர் ஆகணும். என் படத்துல மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கணும். ஹாலிவுட் “ரூம்” மாதிரி ஒரு படம் பண்ணனும்.

நீங்க நடிச்சதுலயே பிடிச்ச படம் அல்லது சீரியல் ?

கண்டிப்பா சந்திரமுகி படத்துல நடிச்ச பொம்மி கேரக்டர் தான்.  கொஞ்ச நேரம் வந்தாலும் நல்ல ரீச். எல்லாரும் பொம்மிதான் என் பேருன்னு நினைச்சி பொம்மி பொம்மின்னு கூப்பிட்டாங்க .

உங்க ட்ரீம் பாய், கேர்ள்?

''கங்கனா ரனாவத், ட்ரீம் பாய்னா ஃபவாத் கான், மேடி

உங்க குடும்பம் பத்தி?

என் பாட்டிதான் டானிக், டேப்லட்  எல்லாம். என் கனவுக்கு அவங்க தான் வழிகாட்டி.

ராஜராஜேஸ்வரி சீரியலில் முருகனா வந்து உபதேசம் கொடுப்பீங்கல்ல, அப்படி ஒரு மெசேஜ் சொல்லுங்க?

யாருக்காகவும் உங்க கனவை விட்டு கொடுக்காதிங்க. கனவை நோக்கி ஓடுங்க.  

சிறந்த இயக்குநராக வாழ்த்துகள் பொம்மி...

ஸாரி.. ஸாரி.. பிரகர்ஷிதா!

- க.சிந்தூரி, படங்கள்: பா.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு