Published:Updated:

‘இறைவி’கள் புகழ் பாடும் இன்னுமொரு சினிமா! - ‘ஒருநாள் கூத்து’ விமர்சனம்

‘இறைவி’கள் புகழ் பாடும் இன்னுமொரு சினிமா! - ‘ஒருநாள் கூத்து’ விமர்சனம்
‘இறைவி’கள் புகழ் பாடும் இன்னுமொரு சினிமா! - ‘ஒருநாள் கூத்து’ விமர்சனம்


காதலித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண், நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு பெண், திருமணத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு பெண்... இந்த மூன்று பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் படுத்தும்பாடுதான் இந்த 'ஒருநாள் கூத்து'.

புள்ளி வைத்துக் கோலம் போடுவது மாதிரி... எங்கோ ஆரம்பித்து, எங்கோ பயணித்து, எங்கோ முடியும் கதை! திருமணம்தான் கதைக்களம் என்பதால், சில 'ட்விஸ்ட்' முடிச்சுகளைப் போட்டு கதையைத் தொடங்கும் இயக்குனர், 'திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்' என்ற பழமொழியைப் பிடித்து உலுக்குகிறார். காதலியைக் கரம்பிடிக்க 'செட்டில் ஆகவேண்டும்' என்ற காரணம் வைத்திருக்கும் ஹீரோ. மகளுக்கு, மூத்த பெண்களை விட நல்ல வரன் கிடைக்க அரைசத மாப்பிள்ளைகளைப் பார்த்தும் திருப்தியடையாத அப்பா. நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு 'அவசரப்பட்டுட்டோமோ?' என யோசிக்கும் ஒரு இளைஞன். இறுதியில் யார், யாருக்கு என்பது ‘ஆஆஆவ்...’ க்ளைமாக்ஸ்!

மூன்று விதமான பெண்களுக்கு, மூன்றுவிதமான ஆண்களால் பிரச்னைகள், குழப்பம், மனஉளைச்சல் என பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது, பாராட்டப்படவேண்டிய விஷயம். கிட்டத்தட்ட 'இறைவி' சாயலில் இருக்கும் களம். ஆனால், சொல்லவந்த விஷயத்தைக் குழப்பியடிக்காமல் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் எல்லாரையும் விட நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள் மூன்று நாயகிகளும். நிவேதா பெத்துராஜிற்கு இது முதல்படம் என்று டைட்டில் சொல்கிறது. அவர் நடிப்பு நிச்சயம் அப்படி இல்லை. ஐடி கம்பெனியில் வேலைபார்க்கும் பெண் கேரக்டருக்கு நச்செனப் பொருந்தியிருக்கிறார். ஹீரோ தினேஷூடன் காதல், முத்த ரொமான்ஸ், கொஞ்சம் கோபம்... என கலந்துகட்டி அடிக்கிறார். 

ரித்விகா நடிப்பு ஆஸம். குண்டுக் கண்களில் பரிதவிப்பை ஒளித்துவைத்துக்கொண்டு, ரேடியோ ஜாக்கியாக மைக் முன் சிரிப்பதாகட்டும், 'மாப்பிள்ளைகிட்ட கோபமா பேசாதீங்க!' என அண்ணனை அறிவுறுத்துவதாகட்டும்... இயல்பான நடிப்பால் அப்ளாஸ் அள்ளுகிறார். அவருக்கும் ரமேஷ் திலக்கிற்குமான ஆஃபீஸ் மோதல் கெமிஸ்ட்ரி எபிசோட்கள், ஜில்ஜில் கூல். அந்த பெங்களூர் லாட்ஜ் காட்சியும், அப்போது ரித்விகா அடிக்கும் பஞ்ச் டயலாக்கும் ரமேஷ் திலக்கிற்கு மட்டுமல்ல நமக்கும் திடுக்! படத்தில் இவர்கள் இருக்குமான காட்சிகள் எல்லாமே படத்தை லைவ்லியாகவே வைத்திருக்கின்றன. எஃப்.எம். அலுவலக காட்சியமைப்புகளும் கச்சிதம். இப்படி படத்தில் முக்கிய ஜோடிகளான இவர்களுக்கு போஸ்டர்களில் முக்கியத்துவம் இல்லையே.. ஏன் ப்ரோ?

 இன்னும் பல ஊர்களில் மியா ஜார்ஜ் மாதிரியான பெண்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருமுறை பெண்பார்க்கும் படலம் நடக்கும்போதும், வணக்கம் வைப்பதும், கையெடுத்துக் கும்பிடுவதுமாய் காலம் கழிக்கிறார். அப்பாவை எதிர்த்து எடுக்கும் ஒரு முடிவும் கைவிட்டுப் போக, மீண்டும் 'ரெடி டேக் ஆக்‌ஷன்' மாதிரி மாப்பிள்ளை பார்ப்பது, வணக்கம் வைப்பது, டீ கொடுப்பது... என வீட்டைச் சுற்றிவருகிறார் மியா. அக்மார்க் குடும்பப் பொண்ணாக இவர் காட்டும் ரியாக்‌ஷன் செம! 

தினேஷ், வழக்கமான பயந்த சுபாவ நாயகன். காதலியின் திருமணத்திற்கு ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டில், அவரோடு நடக்கும் உரையாடலில் ஸ்கோர் செய்திருக்கிறார். காமெடிக்கு பாலசரவணனைப் பயன்படுத்தி, காமெடி செய்துகொண்டிருந்த ரமேஷ் திலக், கருணாகரனுக்குக் கொஞ்சம் நடிப்பில் ஸ்கோர் செய்யும் கேரக்டர்களைக் கொடுத்திருக்கிறார்கள். சினிமாவுக்கு வரும்முன் பார்த்த வேலைதான் என்பதால், ஆர்.ஜே.வாக அசால்ட் செய்கிறார் ரமேஷ் திலக். அவருக்கு அட்டகாசமாகப் பொருந்துகிறது இந்த ஹை ஃபை லுக். ஆனால், காதலித்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு சொல்லாமல், எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், சட்டென அவர் எடுக்கும் முடிவு.. ம்ஹும்.. ஒட்டவில்லை டைரக்டரே! ஒரு கட்டத்தில் ட்விஸ்ட்கள் ஆச்சர்யத்திற்கு பதில் அயர்ச்சியையே ஏற்படுத்துகிறது. 

‘பசங்க  உயிரையே குடுப்பானுக’ - ‘ வயத்துலயா?’ உட்பட சில வசனங்கள் ஈர்க்கின்றன. நிவேதாவின் அப்பா, மியா ஜார்ஜ் பக்கத்து வீட்டுப் பெண், மியா ஜார்ஜ் மணமுடிக்க இருக்கும் பையனின் அம்மா, ‘எவ்வளவு ஏமாற்றங்கள்’ என்று நண்பன் மனசைக் கலைக்கும் ரித்விகா பார்த்த மாப்பிள்ளையின் நண்பர் என்று சின்னச் சின்ன காஸ்டிங்கிலும் கவனம் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஜஸ்டின் பிரபாகர் இசையில் ‘எப்ப வருவாரோ’  பொருத்தமான இடத்தில் அழகாக ஒலிக்கிறது. அடியே அழகே - இனி அடிக்கடி எஃப் எம்மில் கேட்கலாம்.பின்னணி இசையில் அனுபவம் தேவைப்படுகிறது.

ஒருவருடம் கழித்து தினேஷைக் காட்டும்போது 'விக்' வெச்சுதான் வித்தியாசம் காட்டணுமா? முடியல. அப்பாவின் தவறான முடிவால், தான் தவறவிட்ட காதல் மீண்டும் அப்பாவாலேயே கைகூடும் சூழல் வரும்போது, மணப்பெண் எடுக்கும் முடிவு அபத்தம். ’என் லவ்வர் ஒண்ணும் ஸ்டாண்ட் பை அல்ல’ என்கிற ஒரே ஒரு பன்ச் டயலாக் பேசுவதற்காக, வாழ்க்கையையா அடகுவைப்பீர்கள்? காதலை காவியமாக்குவோம் என்று இயக்குநர் முடிவெடுத்துவிட்டார் என்பது துருத்திக் கொண்டு தெரிகிறது. எல்லோருக்கும் ஒரு முடிவைக் கொடுக்கும் இயக்குனர், ரித்விகாவை மட்டும் அனாமத்தாக விட்டுவிட்டது கொஞ்சம் உறுத்தல். அவ்வளவு காதலிக்கும் மியா ஜார்ஜிடம் ‘இந்தா வர்றேன்’ என்று இவர் கிளம்பாமல், அவரையா சென்னைக்கு வரச்சொல்லுவார் இந்தக் கால இளைஞன்? இப்படிப் பல கேள்விகள்.

படம் முடிந்ததும், 'கல்யாணம்' குறித்த கேள்விகளை மக்களிம் மைக் நீட்டிக் கேட்டிருக்கிறது படக்குழு. ஆளாளுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்ல, 'நல்லாயிருக்கு, அவ்ளோதான்!' என்று ஒருவர் சொல்வதோடு முடிகிறது. படமும் அப்படித்தான்.

பின் செல்ல