Published:Updated:

இது யாருக்கும் அடங்காத டெரர் பேய்! “தி காஞ்சூரிங் 2” படம் எப்படி?

இது யாருக்கும் அடங்காத டெரர் பேய்! “தி காஞ்சூரிங் 2” படம் எப்படி?
இது யாருக்கும் அடங்காத டெரர் பேய்! “தி காஞ்சூரிங் 2” படம் எப்படி?

மாடர்ன் எக்ஸார்ஸிச வகை படங்கள் எல்லாமே அதீத சப்தம், கொடூர முகங்கள்,அதிக  ரத்தம் என்ற கலவையில் தான் வெளிவந்து கொண்டு இருந்தது. அதை சற்று மாற்றி அமைத்த படம் தான் தி காஞ்சூரிங்.

2013-ம் ஆண்டு வெளியான தி காஞ்சூரிங் திரைப்படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. வெறும், 20 மில்லியன் டாலர் பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டு, 320 மில்லியன் டாலர் ஜாக்பாட் அள்ளியது முதல் பாகம். இன்று உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கிறது, அதன் இரண்டாவது பாகம்.

லண்டனில் வசிக்கும் பெக்கி ஹாட்சன் என்பவரது வீட்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. பெக்கியின் 11 வயது இளைய மகளுக்கு  ஜானெட்  (மாடிசன் வொல்ஃப்) பேய்ப்பிடித்து விடுகிறது.அந்த வீட்டில் நடக்கும் விஷயங்களும், சிறுமிக்கு இருக்கும் பிரச்னைகளும் பேய்த்தனமாக மீடியா உபயத்தால் ஊருக்குள் பரவுகிறது. வீட்டைக் காலி செய்து எதிர்வீட்டில் வசித்தாலும், பேய் டபுள் கிராஸிங் போட்டு, அங்கேயும் வருகிறது.

சிறுமிக்கு உண்மையிலேயே பேயால் பிரச்னை நிகழ்கிறதா, இல்லை நடிக்கிறாளா என்பதைக் கண்டறிய சர்ச் நிர்வாகம் பேய் ஓட்டும் ஸ்பெஷலிஸ்ட்டான   வாரென் தம்பதிகளுக்கு (எட், லொரைய்ன்)  அழைப்பு விடுகிறார்கள்.கணவர் எட்டை ஒரு பேய் கொல்லப்போகிறது என்பதை கணிக்கும் லொரைய்ன் முதலில் தயங்குகிறார். பின்னர் இருவரும் லண்டனுக்கு விரைகிறார்கள். சிறுமி சொல்வது உண்மையா, பேயைக் கண்டுபிடித்து, சிறுமியைக் காப்பாற்றினார்களா? என்பதோடு முடிகிறது திரைப்படம்.

ஆரம்பக் காட்சியில் இருந்தே திக் திக் நிமிடங்களை சிறப்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வான். பார்வையாளனின் பார்வையிலேயே, கேமராவை நகர்த்தியிருக்கும் டான் பர்கெஸ் தான் படத்தின் பெரிய பிளஸ். பேய் படம் என்பதால், அலறும் இசை என டார்ச்சர் செய்யாமல், திகிலிசையில் மிரள வைக்கிறார் ஜோசப்ஃ பிஷாரா. பேய் சொல்லும் வார்த்தை விளையாட்டுக்கள், 'தி க்ரூக்கட் மேன்' விளையாட்டு பொம்மையின் ரைம்ஸ், ரிமோட்டை வைத்து செய்யும் அலப்பறை, சிலுவைகளை வைத்து வரும் காட்சி என பேய்த்தனங்களின் மூலம் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறார்கள்.

 எட், லொரைய்ன் வாரெனின் , வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து, தொடர்ந்து திரைப்படங்கள் (அன்னபெல்லி, தி காஞ்சூரிங், அமிட்டிவில்லி ஹாரர்) எடுக்கப்பட்டு வருகின்றன. 1977-ம் ஆண்டு அவர்கள் சந்தித்த என்ஃபீல்டு பொல்டெர்ஜிஸ்டை  நிகழ்வை மையமாக வைத்து, இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார்.

கோலிவுட் கவர்ச்சி, சென்ட்டிமென்ட்  பேய்களைப் பார்த்து பழகிப்போன ரசிகர்கள், , "பேய் வருதுப்பா" என்பது போல் ஜாலியாக சில காட்சிகளை சிரித்துக்கொண்டே கையாண்டாலும், பல காட்சிகளில் டர் ஆகிறார்கள் என்பதே உண்மை.

நல்ல ஹாரர் படம், பேய் நம்பிக்கை உள்ளவர்கள் தாராளமாய் படத்தைப் பார்க்கலாம். பேய் நம்பிக்கை இல்லாதவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். (படம் முடிந்ததும், எண்டு கிரெடிட்ஸில், படத்தின் காட்சிகளையும், உண்மைச் சம்பவங்களையும் ஒப்பிட்டு விளக்கி இருப்பார்கள். அவற்றைப் பார்த்ததும் லைட்டாக ஜெர்க் வரத்தான் செய்கிறது).

 படத்தின் ட்ரெயிலரைக் காண..