Published:Updated:

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலை என தெரியவில்லை!

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலை என தெரியவில்லை!
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலை என தெரியவில்லை!

எத்தனையோ நல்ல திரைப்படங்கள் வெளியாகிய சமயம் சரியாக கவனிக்க படாமல் பின்பு வெகு நாட்கள் கழித்து மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டுள்ளது. உலக நாயகனின் 'மாஸ்டர் பீஸ்' என சொல்லப்படும் 'அன்பே சிவம்' தொடங்கி 'புதுப்பேட்டை, ஒநாயும் ஆட்டுகுட்டியும்' என எத்தனையோ படங்களை இதற்கு உதாரணமாக சொல்லாம். ஆனால் சமீபத்தில் வெளியான 'உறியடி' படத்தின் நிலை வேறு.

வெளியான முதல் நாளே சமூக வலைதளங்களில் மக்களால் வெகுவாக பாரட்டப்பட்டது. அதேபோல் விமர்சனங்களும் படத்துக்கு ஆதரவாகவே அமைந்தன. இருப்பினும் இன்னும் படத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைத்ததாக தெரியவில்லை. எத்தனையோ இடங்களில் இன்றைய தேதியிலும் படம் வெளியாகவில்லை. திரையிடப்பட்ட தியேட்டர்களிலும் நீக்கப்பட்டு தற்போது ஒரே ஒரு காட்சி மட்டும் ஒட்டப்படுகிறது. இது குறித்து 'உறியடி' படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் விஜய்குமாரிடம் பேசினோம்.
 

"  சுமார் ஒன்றரை வருடமாக  நிறைய போராட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் இந்தப் படம் வெளியாகியுள்ளது. பொதுவாக இது போன்ற ஸ்டார் வேல்யூ இல்லாத படங்கள் எல்லாம் இரண்டாம் வாரத்தில் தான் பிக் அப் ஆகும், காட்சிகள் அதிகரிக்கப்படும். அதே நம்பிக்கையில் தான் நாங்களும் களம் இறங்கினோம். அதற்கு ஏற்ப பிரமோஷன்களும் இரண்டாம் வாரம் முதல் அதிகப்படியாக இருக்கும்படி பார்த்து கொண்டோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முதல் வாரத்தில் கொடுக்கப்பட்ட காட்சிகள் கூட இப்போது குறைக்கப் பட்டுவிட்டன. இத்தனைக்கும் மக்களிடமும் ஊடகத்திடமும் பாராட்டுகளைப் பெற்றும் இந்த நிலை எற்பட்டுள்ளது. நிறைய ரசிகர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து படம் பார்க்க வேண்டும்/ ஆனால் எந்த தியேட்டரிலும் திரையிடப் படவில்லை என எனக்கு முகநூலில் சொல்கிறார்கள். அதனால் நானே படத்தின் காட்சியை அதிகரிக்க என் சக்திக்கும் அதிகமாக செலவு செய்து பார்த்தேன்.அதிலும் எமாற்றம் தான்.

உறியடி திரைப்படத்திற்கு குறைந்தது 40 திரையரங்காவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஆறே திரையரங்குகள் தான் கிடைத்துள்ளது. ஆழமான கருத்தை பொழுதுபோக்கு அம்சத்துடன் விறுவிறுப்பாக கொடுத்தும், அதை மக்கள் வரவேற்கத் தயாரக இருந்தும் படத்துக்கான அங்கீகாரம் கிடைக்க வில்லை.இன்னும் எத்தனை நாட்களுக்கு இதே போல் நல்ல படம் அங்கீகாரமற்றுப் போகும் நிலை தொடரப்போகிறது என்று தெரியவில்லை'

படத்தில் அதிகமாக மது அருந்தும் காட்சிகளை வைத்து உள்ளீர்களே ஏன்?

மது போதை போன்ற தீய பழங்களில் அடிமைபட்டு இருக்கும் இளைஞர்களை மிக எளிதாக சமூக விரோதமான செயல்களில் ஈடுபட வைக்க முடியும். எனவே தான் முக்கிய கதாபாத்திரங்கள் மது அருந்தும் படி வைத்துள்ளேன்.

உங்களின் அடுத்த படங்கள்?

பேச்சு வார்த்தையில் உள்ளது இன்னும் எதுவும் உறுதி செய்யபடவில்லை.   அதற்கு முன் இந்தப் படத்தை சின்னத்திரையிலாவது மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

சாதிச் சண்டையை பிரதானமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதே, ஏதாச்சும் சாதி அமைப்பினரிடம் இருந்து மிரட்டல் வந்ததா?

இல்லவே இல்லை. எந்தக் குறிப்பிட்ட சாதியையும் குறிக்காததால் அது போல் ஏற்படவில்லை. திரைக்கதை அமைக்கும் போதே யாரையும் எந்த வகையிலும் புண்படுத்தாமல் என் கருத்தை கூற வேண்டும் என பார்த்துப் பார்த்து படமாக்கினேன். எத்தனையோ இடங்களில் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்ட இது தான் காரணம். இன்னும் பலர் படத்தை ரசிக்க காத்திருந்தும் அவர்களிடம் படத்தை கொண்டு சேர்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.

-நிர்மல் குமார்

மாணவப் பத்திரிகையாளர்

பின் செல்ல