Published:Updated:

'அன்னைக்கு காலைல ஆறுமணிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?' - கலகல ரோபோ ஷங்கர்

'அன்னைக்கு காலைல ஆறுமணிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?' - கலகல ரோபோ ஷங்கர்
'அன்னைக்கு காலைல ஆறுமணிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?' - கலகல ரோபோ ஷங்கர்


'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தில் 'ரோபா' ஷங்கர் 'அன்னிக்கு காலைல ஆறு மணி இருக்கும்...’ என்று ஆரம்பிக்கும்போதே திரை அரங்கங்கள் உச்சபட்ச டெசிபலில் அதிர்கின்றன. மனுஷன் செம குஷியில் இருக்கிறார்.  அவருடன் ஒரு ஜாலி பேட்டி..

உங்க பேரச் சொன்னாலே பல பேருக்கு 'கேப்டன்' தான் ஞாபகத்துக்கு வர்றாரு?

மக்களோட கண்ணோட்டத்துல இருந்து அது மாறணும்னுதான் ரொம்ப கஷ்டப்பட்டு உடம்பையும், கெட்டப்பையும் மாத்தினேன். என்னோட பாடி லாங்குவேஜ் அப்படி இருந்ததால பலபேருக்கு நான் பண்ற விஜயகாந்த வாய்ஸ் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அது மட்டுமே நம்மளோட அடையாளம் ஆகிடக்கூடாது என்பதால தான் கமல், சத்யராஜ்ன்னு  பல பேரோட வாய்ஸ் மற்றும் பாடிலாங்குவேஜைப் பண்ண ஆரம்பிச்சேன்.

இந்த படத்துல எம்.எல்.ஏ வா நடிச்சிருக்கீங்க.. உங்களுக்கு அரசியல் நண்பர்கள் இருக்காங்களா?

நிறைய பேர் இருக்காங்க. அப்பப்போ பேசுவோம். மத்தபடி பெரிய அளவுக்கு வச்சுக்கமாட்டேன்.

படத்துல உங்ககூடயே பல காட்சிகள்ல சூரி வர்றார். அவருக்கும் உங்களுக்குமான ரிலேஷன்ஷிப்?

நான் காமெடி ஷோ செய்துட்டு இருக்கும்போதே எனக்கு சூரி அண்ணன் பழக்கம். அப்போ இருந்து நாங்க ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள். அவரும் அப்போ வாய்ப்புக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தார். ரொம்ப நாள் கழிச்சு இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து இந்த படத்துல நடிச்சிருக்கோம். இரண்டு பேருமே 'செல்லம்'னு தான் கூப்பிட்டுக்குவோம். எழில் சார் எங்களுக்கான சீன் சொல்லிட்டா, அதுக்கப்புறம் பக்கத்துல வரமாட்டார். நானும், சூரியும் ஒவ்வொரு ஐடியாவையும் ஷேர் பண்ணிட்டு, பேசிட்டு நடிச்சோம்.


அந்த டயலாக் இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு நினைச்சீங்களா..?

அன்னைக்கு காலைல ஆறுமணிக்கு என்ன நடந்துச்சுன்னா..

அச்சச்சோ சார்... பேட்டிய முடிக்கணும்..

(சிரிக்கிறார்) ஒரு விஷயத்த திரும்பத் திரும்ப சொன்னா யாரா இருந்தாலும் கடுப்பாவாங்க. ஆனா, 'அன்னிக்குக் காலைல ஆறு மணி இருக்கும்'ன்னு ஆரம்பிக்கிற அந்த டயலாக்கை நான் ஒவ்வொரு முறை   சொல்லும்போதும் தியேட்டர்ல விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. அதுதான் இந்த படத்தோட பிளஸ். இந்த டயலாக்க, ஒருநாள் முழுக்க எடுத்தாங்க. 'ஒரே டைமிங் ஒரே ரைமிங்ல இருக்கணும் பார்த்துக்கோ'னு எழில் சார் சொன்னார். ஷூட்டிங் ஸ்பாட்ல ஒவ்வொரு கட் முடிக்கும் போதும் கிளாப்ஸ் அள்ளுச்சு. 18 முதல் 20 நிமிஷம் ஒரே டயலாக்கை வைக்கும் போது எவ்வளவு தூரம் பயிற்சியும் முயற்சியும் வேணும்னு எழில் சாரோட வேலை பார்க்கும்போது தெரிஞ்சுக்கிட்டேன்.

படத்தைப் பார்த்துட்டு வீட்ல என்ன சொன்னாங்க?

இந்த படத்துல என்ன கேரக்டர்ல நடிக்கப்போறேனு என் மனைவி பிரியங்காகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்.  என் பொண்ணு இந்திரஜா 9- ம் வகுப்பு படிக்கிறாங்க. அவங்க ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் என்னோட ரோல் ரொம்பப் பிடிச்சிருக்காம். குழந்தைகளோட பாடல்களான, 'அம்மா இங்கே வா வா...', 'கட கட வண்டி காமாட்சி வண்டி...' ன்னு பாடும்போது, லாலி பாப், பீப்பீ இருந்தா நல்லா இருக்குமேனு சொன்னேன். அதே மாதிரி நிறைய குழந்தைகள் அதை ரசிச்சிருக்காங்க.

குழந்தைப் பாட்டெல்லாம் பாடுறீங்க.. உங்களுக்குப் பாடத் தெரியுமா?

ஓரளவுக்குப் பாடுவேன். ஆடியன்ஸ் கூட்டமா இருக்கிற இடத்துல பாடி, கூட்டத்த கலைக்க.  வேணா ஒரு பாட்டு பாடிக் காட்டவா..?

உங்க வீட்ல உங்க சேட்டைய எப்படிப் பார்க்கிறாங்க?

வீட்டைப் பொருத்தவரைக்கும் நான் சின்னச் சின்ன சேட்டைகள் செஞ்சாலும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க.. நான் கோபப்பட்டு பேசினாக்கூட  அதையும் ஜோக்கா எடுத்துப்பாங்கனா பார்த்துக்கோங்களேன்.

 -வே. கிருஷ்ணவேணி