Published:Updated:

உண்மையை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிற.. உட்தா பஞ்சாப்! #UdtaPanjab

உண்மையை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிற.. உட்தா பஞ்சாப்! #UdtaPanjab
உண்மையை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிற.. உட்தா பஞ்சாப்! #UdtaPanjab

ரு கலைஞனுக்கு எப்போது சமூகப் பிரச்னைகளைப் பேசும் துணிவு வருகிறதோ அப்போது அவன் முழுமையான கலைஞனாகிறான். சமூகத்தில் நடக்கும் சீரழிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்கால சந்ததியை பாதிக்கும் என்னும்போது அதை எந்த வடிவிலாவது தான் சார்ந்த படைப்பின்மூலம் காட்டவேண்டியது, ஒரு கலைஞனுக்கு இன்றியமையாததாகிறது.

உட்தா பஞ்சாப் படத்தின் மூலம் அதைச் செய்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் சௌபே. இதுபோன்ற சமூக அவலங்களைப் பேசத்துணியும்போது எதிர்ப்புகள், வழக்கத்திற்கும் அதிகமாய் இருக்கும். இதிலும் இருந்தது. சங்கங்களிடமிருந்தோ,  அரசியல்வாதிகளிடமிருந்தோ அல்ல. சென்சார் போர்டிலிருந்து. 89 கட், 13 காட்சிகளை நீக்க வேண்டும் என்பதாய்க் கடுமை காட்டியது பஞ்சாப் தணிக்கைக் குழு. தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் கொதித்தெழுந்தார். ’Art can't have any restrictions or limits’ என்று பிரதம மந்திரி நரேந்திர மோடி ட்வீட் செய்ததை ரி ட்வீட் செய்தார். ‘கலையைக் கொலை செய்யாதீர்கள்’ என்று கவலைப்பட்டார். அவருக்கு ஆதரவாக பலரும் களத்தில் இறங்க, படத்தை மறுபரிசீலனைக்க் குழுவிற்கு அனுப்பினார்கள். அவர்கள் ‘13 கட்’ என்று சொல்ல அதையும் எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்று.. ஒரு வழியாக நேற்று ரிலீஸ்.

இத்தனை பஞ்சாயத்துகளுக்குப் பிறகு வந்த படம் ‘அடப்போடா’ என்று நினைக்க வைக்கிற புஸ்வாணமா என்றால் இல்லை. அழுத்தமாக, நேர்மையாக, சமரசமற்ற ஒரு படைப்பாக வந்திருக்கிறது உட்தா பஞ்சாப்.

’பஞ்சாபே போதையில் மிதக்கிறது’ என்பதே டைட்டில். உண்மையாகவே பஞ்சாப் இளைஞர்கள் போதை அரக்கனின் பிடியில் சிக்கிச் சீரழிகிறார்கள். படம் அதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் விளக்கி, விளைவுகளைச் சொல்லி மிரளவைக்கிறது.

போதை மருந்து கொண்டு செல்லும் வாகனங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, பிடித்தால் லஞ்சம் வாங்கிக் கொண்டு விடுவது என்றிருக்கும் போலிஸ் அதிகாரியான சர்தாஜ் (தில்ஜித்), தன் சொந்தத் தம்பி போதைப்பழக்கத்தில் விழுந்ததை அறிந்ததும் அதன் தீவிரம் உணர்கிறான்.

மருத்துவரான ப்ரீத் (கரீனா கபூர்) போதைக்கெதிராகப் போராடுபவர். சர்தாஜின் தம்பியை போதையிலிருந்து மீட்டு மறுவாழ்வு பெற உதவும் அவர், ‘உன் தம்பிக்காக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பஞ்சாபிற்கும் அல்லவா மறுவாழ்வு வேண்டும்?’ என்று கேட்க, போதை மருந்தின் நெட்வொர்க் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று இருவருமாய் புலனாய்வில் இறங்குகிறார்கள்.

டாமி சிங் (ஷாஹித் கபூர்) பிரபல இசைக்கலைஞன். போதைக்கு அடிமையான அவன் பாடல்களும் போதையைக் கொண்டாடி, இளசுகளைக் கவர்கிறது. ஒரு கட்டத்தில் போலிஸால் கைது செய்யப்பட்டு எல்லாரையும் பகைத்துக் கொண்டு, பாராட்டிய ரசிகர்களாலேயே துரத்தப்படுகிறான்.

பீகாரில் பணி புரியும் கூலித்தொழிலாளி மேரி ஜான் (அலியா பட்), தனக்குக் கிடைத்த கோடிரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பாக்கெட்டை பத்தாயிரத்திற்கு விற்க ஆசைப்பட்டு பஞ்சாப் வந்து போதை மருந்துக் கும்பலிடம் மாட்டிக்கொண்டு அவர்களுக்கு அடிமையாகிறாள். 

இவர்கள் போதை மருந்து கடத்தல் கும்பலின் இடத்தில் சந்தித்துக்கொள்ள என்ன நடக்கிறதென்பது க்ளைமாக்ஸ்.

ஷாஹித் கபூர் நடிப்பதை நிறுத்திவிட்டு, இசைக்கலைஞனாக மாறிவிடலாம். அந்த ‘ஆட்டிட்யூட்’ அட்டகாசம். ’நான்தாண்டா!’ என்று அவர் திரிவதும், புகழை இழந்து ரசிகர்கள் கல்லால் அடித்துத் துரத்த ஒரு பெண்ணால் காப்பாற்றப்பட்டு ‘நானெல்லாம் ஒண்ணுமே இல்லை’ என்பதை உணர்வதுமாய் படம் நெடுகிலும் நடிப்பால் மிரட்டியிருக்கிறார்.

அலியா பட். ப்பா! என்ன மாதிரியான ஒரு காதாபாத்திரம்! கொஞ்சம் ஏமாந்தாலும் குருவி தலைப் பனங்காயாய் அலியாவை கீழே தள்ளியிருக்கும். சளைக்காமல் தன் திறனை வெளிப்படுத்தி தூள் கிளப்பியிருக்கிறார். ஷாஹித்துடனான அவரது நீண்ட உரையாடல் காட்சி ஒன்றே போதும் அவர் நடிப்பிற்கு.

கரீனா கபூருக்கு நிறைவான கதாபாத்திரம். தில்ஜித்துடன் துணிந்து புலனாய்வில் ஈடுபடும்போதும், அவரது தம்பியிடம் பரிவைக் காட்டும்போதும் நிஜ டாக்டரை கண்முன் நிறுத்துகிறார். பஞ்சாப் பாடகரும், டிவி நடிகருமான தில்ஜித் பஞ்சாப் மொழியில் பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு இந்தப் படம், பாலிவுட்டில் கோல்டன் விசிட்டிங் கார்ட்.

படத்தின் பல காட்சிகள் நமக்கு மனரீதியான பயத்தை ஏற்படுத்தி விளைவுகளின் விஸ்வரூபத்தை உணரவைக்கின்றன. தில்ஜித்தின் தம்பி, மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட, போதை மருந்து கிடைக்காமல் சர்வ சாதாரணமாக கையை டேபிளில் உரசி அறுத்துக் கொள்ளும் காட்சியில் நமக்கு நடுங்குகிறது. ஷாஹித் சிறையில் இருக்கும்போது ‘நீங்கதான் எங்க ஆதர்சம்’ என்று இரண்டு இளைஞர்கள் அவரது பாடலைப் பாட, ‘போதை மருந்து வாங்க காசு தர்லன்னு அம்மாவக் கொன்னுட்டு வந்து பாட்டு பாடறீங்களே’ என இன்னொரு கைதி திட்டுவார். அதைக் கேட்டதும் தன்னால், தன் பாடல்களால் எப்பேர்ப்பட்ட சமூக அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று உடல் குறுகுவார் ஷாஹித். இப்படிப் பல காட்சிகளைச் சொல்லலாம். போதை மருந்து கும்பலைச் சார்ந்தவர்கள் படம் நெடுக சர்வ சாதாரணமாக ‘இதெல்லாம் இங்கே சகஜம்’ என்பதாய் உலவிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள அரசியல்வாதிகள் இளைஞர்களின் இந்தப் பலவீனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம். கதைகளை விட, சில உண்மைகள் பயங்கரமானவை.   

‘போதைக்கு எதிரா நாம நடத்தற இந்தப் போரை விட, போதையிலிருந்து மீளணும்னு அதுக்கு அடிமையானவன் தனக்குள்ளயே போராடறது ரொம்ப கஷ்டமானது. அதுல அவங்க ஜெயிச்சாலே பஞ்சாப்பை இந்தச் சீரழிவிலிருந்து காப்பாத்திடலாம்’ என்று கரீனா ஒரு காட்சியில் சொல்வார். இது தமிழகத்திற்கும் பொருந்தும்.

வெய்ட்டிங் மாதிரி உணர்வுகளைச் சொல்லும் படங்கள் ஒரு புறம். உட்தா பஞ்சாப் போன்று உண்மைகளைச் சொல்லி உறைய வைக்கும் படங்கள் மறுபுறம் என்று பாலிவுட் களைகட்டிக் கொண்டிருக்கிறது.

உட்தா பஞ்சாப் - நேர்மையான, அழுத்தமான, இன்றைய தேதிக்குத் தேவையான ஒரு படம்!

பின் செல்ல