Published:Updated:

''அஜித், விஜய்க்கு தெரியாதா அதெல்லாம் நல்ல பாட்டு இல்லைனு!’’- கொந்தளிக்கும் கங்கை அமரன்

''அஜித், விஜய்க்கு தெரியாதா அதெல்லாம் நல்ல பாட்டு இல்லைனு!’’- கொந்தளிக்கும் கங்கை அமரன்
''அஜித், விஜய்க்கு தெரியாதா அதெல்லாம் நல்ல பாட்டு இல்லைனு!’’- கொந்தளிக்கும் கங்கை அமரன்

''அஜித், விஜய்க்கு தெரியாதா அதெல்லாம் நல்ல பாட்டு இல்லைனு!’’- கொந்தளிக்கும் கங்கை அமரன்

''நான் சொல்றது எல்லாமே உண்மை. அதை அவங்களால ஏத்துக்க முடிஞ்சாலும், முடியாட்டாலும் நான் வெளிப்படையாகத்தான் பேசுவேன்'' என்று ஆரம்பிக்கிறார் கங்கை அமரன்.

உங்க முதல் பட அனுபவம், இப்போ உங்களோட பயணமும்?

''கோழி கூவுது' படத்த இயக்கினப்போ, படத்த நல்லபடியா கொடுக்கணும்ங்ற பயம் கொஞ்சம் இருந்தது. மத்த டைரக்டர்கள் எல்லாம் சில சீன்ஸ வேகமா ஓட்டிட்டுப் போயிடுவாங்க.. நான் ஒவ்வொரு ஷார்ட்டா ரொம்ப ஷார்ப்பா பண்ணேன். என்னோட வேலையை ரொம்ப  நியாயமா பார்த்தேன். அதனாலதான் என்னோட ஒவ்வொரு படமும் இயல்பா இருந்தது. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'கரகாட்டக்காரன்', 'வெள்ளைப் புறா ஒன்று' என பல படங்கள்ள ஒவ்வொரு கேரக்டரும் ரொம்பவே கேஷூவலா இருக்கும். என்னோட படங்கள்ள சினிமாத்தனம் இருக்காது. இயல்பா இருக்கும். பல படங்கள்ள ஹீரோவ அடிக்கிறதுக்கு ஒவ்வொரு ஆளா வருவாங்க... ஒருத்தர அடிக்க வரும்போது ஒவ்வொருத்தரா அடிக்கமாட்டாங்க. இது போன்ற சீன்கள எல்லாம் நான் இயல்பாகவே வச்சிருப்பேன்''.

கவிதைகளும், பாடல்களும் எழுதிட்டு இருந்த நீங்க இசையமைக்க ஆரம்பிச்சது எப்போ? எப்படி?

''இளையராஜா மியூசிக் படிச்சாரு. நான் வாழ்க்கைப் போராட்டத்துக்காக கிடார் வாசிச்சேன். எனக்கு இசையமைக்கிறதவிட, நல்லா பாடல்கள் எழுத வரும். அவருக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். ஜவர்ஹலால் நேரு அவர்கள் இறந்தப்போ,  அவருடைய இறப்புக்காக சோகப்பாட்டுக்கு இசை அமைச்சார் இளையராஜா. அதுக்கப்புறம்தான் ஃபேமஸ் ஆக ஆரம்பிச்சார். என்னுடைய பாடல்களுக்கு இசை அமைத்துதான் அவர் பெரிய ஆளா ஆனார்ங்கறத அவரால மறுக்க முடியாது.. எப்படியோ, என்னோட பாடல்கள் மூலமா ஒரு ஆளை மிகப்பெரிய் இசையமைப்பாளராக ஆக்கியது ரொம்பவே சந்தோஷம்.

நான் மற்றும் என்னுடைய நண்பர்கள் இணைந்து 'மலர்களிலே அவள் மல்லிக்கை'  படத்தை இயக்கினோம். என்னுடைய மனைவி தாய்மாமா தான் தயாரித்தார். என்னுடைய நண்பர்கள் என்னை அந்த படத்திற்கு இசையமைக்க சொன்னார்கள். அதன்படி, அந்த படத்துக்கு இசையமைத்தேன். இல்லை என்றால் அந்த வாய்ப்பு சங்கர் கணேஷூக்கோ, குமாருக்கோ போயிருக்கும். அந்தப் படத்திற்குப் பிறகு, இளையராஜா என்னுடன் சேர்ந்து இசையமைப்பதுல இருந்து விலகிட்டார். அதற்குப் பிறகு வந்த படம் எல்லாம் இரண்டாம் இடத்தில் இருக்கும் நடிகர்களை வைத்து தான் படம் பண்ணவேண்டியிருந்தது. முதல் இடத்தில் இருக்கு கமல், ரஜினி படங்கள் எல்லாம் அவருக்குப் போகும். மற்றவங்களுக்கு எனக்கு செக்ன்ட்ரியா வந்தது. அதுக்குப் பிறகு, என்னோட மியூசிக்ல பாட்டு எழுது ஆரம்பிச்சேன். மலர்களில் அவள் மல்லிகை படம் வெளிவருவதற்கு முன்னாடியே 7 படங்கள் புக் ஆகிடுச்சு.இளையராஜா பாட்டுக்கு எழுதினதோட, பக்தி இல்லாமல் மட்டும்,  1300 பாடல்கள் எழுதியிருக்கேன்''.  அப்புறம் அவர் உழைப்புக்கேத்த இடத்துக்கு அவர் போயிட்டார். என் உழைப்புக்கேத்த இடத்துல நான் இருக்கேன். அவங்கவங்க உழைப்பு அங்கீகாரத்த தந்திட்டு இருக்கு!

இப்போ நான் பேரன் பேத்திகளோட ரொம்ப சந்தோஷமா  இருக்கேன். மனசுல எந்த கவலையும் இல்ல.. ஏதோ ஒரு ரசிகர் போல இளையராஜாவோட இசையை ரசிக்கிறேன்.  நான் என்னோட உழைப்பை எவ்வளவு கொட்டினேனோ.. அந்த அளவுக்கு பாப்புலர் ஆகியிருக்கேன்!’’

’’இன்றைக்கு படங்கள்ல வர்ற பாடல்களை எப்படி பார்க்கிறீங்க?’’


''என்ன மியூசிக் போடறாங்க..? என்ன பாட்டு எழுதுறாங்க? 'ஆளுமா, டோலுமா' பாட்டுக்கு ஆடின அஜீத்துக்குத் தெரியாதா, அது நல்ல பாட்டா இல்லையானு தெரியாதா..? அவருக்கான பாட்டா அது...? விஜய்க்குத் தெரியாதா ’ஜித்து ஜில்லாடி... மிட்டா கில்லாடி’ பாட்டு என்ன தரத்துல இருக்குனு! எந்தப் பாடலாசிரியரையும் சிந்திக்க விடாம, புரியாத பாஷையாப் போட்டு தமிழ் மொழியை ஒழிக்கிறாங்க. அதை ஹீரோக்களும் அனுமதிக்கிறாங்க! 'அநேகன்' படத்துல ’டங்காமாரி ஊதாரி...; பாட்டு,  'ஐ' படத்துல ’லேடியோ செக்ஸி லேடியோ'னு ஏதேதோ பாஷைல எழுதி, பாடுறாங்க!’’

’’ஆனா, ரசிகர்கள் அந்தப் பாடல்களை விரும்பி ரசிக்கிறாங்களே... அதனாலதானே தொடர்ந்து அப்படியான பாடல்களை உருவாக்குறாங்க?’’

''இது யார் மேலங்க தப்பு. ரசிகர்கள் மேலயா..? இல்ல.. யார் தயாரிக்கிறாங்களோ அவங்கதான். அவர்கள் எழுதுற பாடல்களும் பாப்புலர் ஆகிடுது. நீங்க ரஜினி, கமல் படத்துல இடம்பெற்றிருக்க பல்லவி, சரணம் எல்லாம் கேட்டுப் பாருங்க அவ்வளவு அழகா இருக்கும். கேட்க ரசனையா இருக்கும். இப்படி அழகாப் போயிட்டு இருந்தப்போ ஏன் இப்படி ஆகிட்டாங்கனு வேதனையா இருக்கு. இப்போ வளர்ற புள்ளைங்கலாம் 'ஆலுமா டோலுமா' மாதிரியான பாடல்களைத்தான் கேட்பாங்க... பாடுவாங்கனா தமிழ் எப்படி வாழும்? ரசிகனா வந்து கேட்டான்.. இப்படி பாட்டுப் பாடுங்கனு? நீங்கதானே போட்டுத் திணீச்சீங்க...? இப்போ வர்ற காய்கறிகள்ல கொஞ்சம் கொஞ்சமா விஷ மருந்து கலந்த மாதிரி... கொஞ்சம் கொஞ்சமா வரப்போற சந்ததிகளுக்கு இசைய ஊட்டாம புரியாத பாஷைகளை திணிச்சுட்டு இருக்கீங்க.'' என்றவர்,

''எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் அமைத்த பாடல்கள் மாதிரி மீண்டும் பாடல்கள் வர முடியுதா ..?. பாட்டும் நானே பாவமும் நானே, மாதவி பொன் மயிலாள்.. நம்ம கலாசாரத்தை தொலைச்சுட்டாங்க. இதுல இசையமைப்பாளர்கள், ஹீரோக்கள், இயக்குனர்கள் எல்லாருக்கும் பங்கு இருக்கு. அதே சமயம் நான் எல்லாரையும் குறை சொல்லலை. மதன் கார்க்கி நல்லா எழுதறாரு. ஆனா, அவரையும் சமயங்கள்ல அப்படியான பாடல்கள் எழுத வைச்சிடுறாங்க.   கஷ்டமா இருக்கு..திருடனாய் பார்த்து திருந்தால் விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கற மாதிரி.. படம் எடுக்கறவங்க, நடிக்கிறவங்க அவங்களே பார்த்து திருந்தினால்தான் உண்டு''.

’’கடைசியா ஒரு கேள்வி? இப்படி வெளிப்படையா எல்லா இடத்துலயும் பேசுறீங்களே பிரச்சனை வருமோனு யோசிச்சிருக்கீங்களா..?’’


“நான் இப்படி பேசறதால போலீஸ் பிடிச்சிட்டுப் போயிடுமா என்ன...? வெளிப்படையா பேசுறேன். உண்மையப்பேசுறேன். தப்பாத் தெரியுதா சொல்லுங்க”.

-வே.கிருஷ்ணவேணி-

அடுத்த கட்டுரைக்கு