Published:Updated:

தென்பாண்டிச் சிங்கத்தை கையில் எடுக்கிறார் கருணாநிதி!

தென்பாண்டிச் சிங்கத்தை கையில் எடுக்கிறார் கருணாநிதி!
தென்பாண்டிச் சிங்கத்தை கையில் எடுக்கிறார் கருணாநிதி!

பிரம்மாண்ட பொருட் செலவு, சங்ககால கதை, கருணாநிதியின் வசனம் -  இதைத் தாண்டியும் ஒரு சீரியலுக்கு சிறப்பு வேண்டுமா என்ன? ரோமாபுரி பாண்டியன். கருணாநிதியின் கைவண்ணத்தில் கலைஞர் டிவியில் 2014ல் துவங்கப்பட்ட சீரியல். இந்த வருடம் 2016 ஏப்ரலில் முடிவுக்கு வந்தது. மொத்தம் 543 எபிசோட்கள். சீரியல் முடிவுற்றதையடுத்து அதில் பணியாற்றிய அனைவருக்கும் கருணாநிதி நினைவுப்பரிசு கொடுத்து கவுரவித்துள்ளார்.

ஜெய்ப்பூர், தமிழகம் என பல லொகேஷன்கள், பிரம்மாண்ட மேக்கப் என குட்டி பத்மினி தயாரித்த இந்தச் சீரியலை தனுஷ் இயக்கினார். நிறைவான சந்தோஷத்தில் அடுத்த சீரியலுக்கு தயாராகிக் கொண்டிருந்த தனுஷுக்கு ஹாய் சொன்னோம்..

சீரியல் இயக்குநர். எப்படி அமைஞ்சது இந்த ப்ரொஃபைல்?

“ தெரியல.. எல்லாமே கடவுள் சித்தம் அதுவா நடந்தது. சென்னை தான் சொந்த ஊரு. வைரம் கிரேடிங் வேலை பார்த்துட்டு இருந்தேன். சின்ன வயசுல இருந்தே சினிமா மோகம். 1917ல வந்த படங்களை எல்லாம் கூட தேடி தேடிப் பார்ப்பேன் அவ்ளோ சினிமா பிரியன். என் மனைவிதான் என்னை ஊக்குவிச்சு , சீரியல் நடிகரா ஆகலாமேன்னு சொன்னாங்க. என்னோட உறவுக்காரர் ஒருத்தர் மூலமா சில சீரியல்கள், படங்கள்னு நடிச்சேன். அப்படியே சமுத்திரகனி, பிரியதர்ஷன், சி.ஜே.பாஸ்கர், பாலசந்தர் சார் இப்படி நிறைய பேர் கூட வேலை செய்திருக்கேன். நடிக்கறதோட அஸிஸ்டெண்ட்டாவும் கத்துக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஒரு வரலாற்று தியேட்டர் ஆரம்பிச்சு நடத்திட்டு இருந்தேன். அப்போ தான் குட்டி பத்மினி மேடம் ஜெயா டிவியில பக்த விஜயம் சீரீஸ் பண்றதுக்காக திரைக்கதை எழுத்தாளரா என்ன கூப்பிட்டாங்க. அப்படி தான் ஆரம்பிச்சேன். அடுத்து 63 நாயன்மார்கள். அதைத் தொடர்ந்து தான் ரோமாபுரிப் பாண்டியன் கைக்கு வந்தது!”

ரோமாபுரிப் பாண்டியன் எப்படி உருவாச்சு?

“ கலைஞர் எழுதின ரோமாபுரிப்பாண்டியன் நாவலைப் கையில குடுத்து படிக்கச் சொன்னாங்க. எனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டுது. பொறுமையா படிச்சேன். எனக்குப் படிக்கும் போதே காட்சிகளா விரிய ஆரம்பிச்சது. இத எப்படி சினிமாவா எடுக்காம விட்டுட்டாங்கன்னு கூட தோணுச்சு,. ஆனால் கொஞ்சம் யோசிச்சா அத 3 மணி நேர படமா எடுக்கறது முடியாத காரியம். அவ்ளோ விரிவாக்கம் தேவை இந்தக் கதைக்கு. அப்போ தான் ஒரு சின்ன டிரெய்லரா போட்டுக் காமிச்சேன், மூணு தடவ கலைஞர் போட்டுப் பார்த்துட்டு அவருக்கு திருப்தியா இருக்கவும் ஓகே சொல்லிட்டாரு. அவருக்கு அவ்வளவு சந்தோஷம்!”

கருணாநிதி என்ன சொன்னார்?

“ ஒரு அறிமுக படைப்பாளி எப்படியெல்லாம் மெனெக்கெட்டு ஒரு படைப்பை உருவாக்குவாரோ அந்த அளவுக்கு கூடவே நிறைய விஷயங்கள் சேர்த்து சேர்த்து ஆர்வமா செய்தார் கலைஞர். “ மக்களைப் பொருத்தவரைக்கும் இது என்னோட படைப்பா தான் பார்ப்பாங்க, எதாவது சொதப்பினா எனக்குத் தான் திட்டு விழும், பார்த்து செய்னு சொன்னாரு. சின்ன சின்ன விஷயங்கள் கூட சொல்லிக்குடுத்து , சாதாரணமா என் கிட்ட பழகி சீரியல் கூடவே அவரும் இருந்தாரு!”

இந்த சீரியல்ல உங்களுக்கு பெரிய சவாலா இருந்தது எது?

“ இந்த சீரியலே முதல்ல சவாலான விஷயம் தான். சங்க காலக் கதை. நிறைய ஃபீல்ட் வொர்க் செய்தோம். தமிழ் நாட்டுல இருந்து ரோமுக்குப் புறப்பட்டுப் போற மன்னன் .  இதுல பாண்டிய மன்னன் மட்டுமில்ல, சோழர், சேரன் மன்னர்களையும் கூட கொண்டு வரணும். எல்லாத்துக்கும் மேல லொகேஷன், செட் . அப்புறம் ஜெய்ப்பூர்ல இருக்கற உண்மையான அரண்மனையே பயன்படுத்தலாம்னு திட்டம் போட்டோம். பாதி தமிழ்நாடு, அரண்மனைக் காட்சிகள் ஜெய்ப்பூர் இப்படி திட்டம் போட்டு படமாக்கினோம். ரோம் போறதுக்கு கப்பல்ல போற மாதிரிக் காட்சி அத உண்மையாவே ஒரு கப்பல் செட்டுப் போட்டு, கொஞ்சம் சிஜி வேலைகளும் சேர்த்து செய்தோம். உண்மைய சொன்னா பாகுபலிக்கு எந்த அளவுக்கு பின்னாடி வேலைகள் நடந்துச்சோ அதே அளவுக்கு இந்த சீரியல்லயும் வேலை இருக்கும். என்ன அங்க பட்ஜெட் கூட.... இங்க கொஞ்சம் குறைவு!”

இவ்வளவு கஷ்டப்பட்டும் பெரும்பாலான மக்கள் வட இந்திய சீரியல்களுக்கு தான ஆதரவு குடுக்குறாங்க?

“ அவங்களோட மார்க்கெட் பெரிசு. இந்தியா முழுக்க அவங்களுக்கு மார்க்கெட் இருக்கு. இத நான் தப்பா பார்க்கல. தமிழ் சீரியல் நடிகர்கள், டெக்னீஷியன்களை விட்டுட்டு வட இந்திய சீரியல ஈஸியா வாங்கிப் போடுறதா நினைக்கிறாங்க. ஆனால் அவங்க புரொடக்‌ஷனோட யோசிச்சுப் பார்த்தா அந்த டப்பிங்ல அவ்வளவு பெரிய பணம் அவங்களுக்குக் கிடைக்கறதில்ல. என்ன, நாடு முழுக்க ஓடும். தமிழ் மக்கள விட இந்தி மக்கள் அதிகம். அதனால ரீச் அதிகம். இவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் அவங்களும் உழைக்கிறாங்க நிறைய செலவு பண்றாங்க!”

வட இந்திய சீரியல்கள், நிகழ்ச்சிகள்ல சினிமா பிரபலங்களே கூட சில நேரங்கள்ல திடீர் என்ட்ரி குடுக்கறது, ஜாலி மீட்ன்னு பலதும் நடக்குதே. இங்க ஏன் அப்படி இல்ல?

“ ஏன்னா தமிழ் சினிமாக்காரங்களே பெரும்பாலும் சேனல்கள கொஞ்சம் கீழ தான் பார்க்குறாங்க. உண்மைய சொன்னா சினிமா தனியா டிவி தனியா பிரிக்கவே முடியாது.  ஒரு படப் புரமோஷனுக்கு டிவி வேணும், படத்தோட பாட்ட ரீச் பண்ண டிவி வேணும். படம் வந்து போனதுக்கு அப்புறம் டிவி ரைட்ஸ், விளம்பரம் இப்படி சினிமாவுக்கு டிவி நிறைய உதவியா இருக்கு. அத புரிஞ்சிக்கிட்டா இன்னும் நிறைய மேஜிக் பண்ணலாம்!”

ரோமாபுரிப் பாண்டியன் பாராட்டு விழாவில் தனுஷ்

543 எபிசோட்,  கருணாநிதி கையால ஷீல்ட் எப்படி இருக்கு அந்த உணர்வு?

“ நான் முதல் சீரியல் இயக்குநரா வருவேன்னு கூட நினைச்சுப் பார்க்கல. அதுல கலைஞர் எழுதின காவியத்த சீரியலா பண்றதும், அதுல வெற்றியடைஞ்சு இப்போ அவர் கிட்ட பாராட்டும், நினைவுச் சின்னமும் வாங்குறதும் எவ்வளவு பெரிய விஷயம். வார்த்தைகளே இல்ல!”

ஒருவேளை ரோமாபுரிப் பாண்டியன் சினிமாவா எடுக்கணும்னா யார் நடிகர்கள்?

“ நான் சீரியல்ல யார வெச்சு எடுத்தேனோ கண்டிப்பா அவங்கள வெச்சுத்தான் பண்ணுவேன். சும்மா பேட்டிக்காக சொல்லல. உண்மை அதுதான். டீம் வொர்க் அப்படி இருந்துச்சு. ஒரு சில இடங்கள் தவிர்த்து பெரிசா மெனெக்கெடல. அவங்களே காட்சிகள உள்ள வாங்கிட்டு நடிப்பக் குடுத்தாங்க!”

வரலாறு, ஆன்மீகம் சார்ந்த சீரியல்களா செய்யறிங்களே?

“ ஆமா கலைஞர் டிவி இராமானுஜர் சீரியல், அடுத்து ரோமாபுரிப்பாண்டியர், தெரியலை எனக்கு அதிர்ஷ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். அடுத்த சீரியல் கூட வரலாற்றுச் சீரியல் தான்!

அடுத்ததும் வரலாற்று சீரியலா? அதப்பத்தி சொல்லுங்களேன்

“ ஆமா கலைஞரோட தென்பாண்டிச் சிங்கம் நாவல் தான் அடுத்த சீரியல். லோகேஷன், திரைக்கதை, நடிகர்கள் தேர்வு நடந்துக்கிட்டு இருக்கு. விரைவில் கலைஞர் டிவியில் ’தென்பாண்டிச் சிங்கம்’ புரமோ வரும் பாருங்க!”

“யார் யார் நடிக்கிறாங்க?”

அதுக்கு மேல ரகசியம் உடைச்சா கலைஞர் ஐயா தலைல குட்டிடுவார்...புன்னகையுடன் விடைபெற்றார் தனுஷ்.

வாழ்த்துகள் பாஸ்!

- ஷாலினி நியூட்டன் -

பின் செல்ல