Published:Updated:

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாக வந்திருக்கிறதா ‘அம்மா கணக்கு?’ - விமர்சனம்

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாக வந்திருக்கிறதா ‘அம்மா கணக்கு?’  - விமர்சனம்
கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாக வந்திருக்கிறதா ‘அம்மா கணக்கு?’ - விமர்சனம்


ணவனை இழந்த அமலாபாலுக்கு, கனவே தன் மகள் யுவஸ்ரீதான். ஆனால் மகளுக்கு கனவென்று எதுவும் இல்லை. பாடங்களைக் கஷ்டமாகவும், கணக்குப் பாடத்தை ரொம்பக் கஷ்டமாகவும் கருதும் மகள், 'வேலைக்காரி பொண்ணு வேலைக்காரிதான் ஆவாள்!' என மக்குப் பிள்ளையாக வளர்கிறார். மகளுடைய இந்தப் போக்கை மாற்ற, மகளுடைய பள்ளியிலேயே மாணவியாகச் சேர்கிறார் அமலாபால். இருவருக்கும் இடையில் நடக்கும் 'படிப்புப் போராட்டம்'தான் இந்த 'அம்மா கணக்கு'!.

மகளுக்காக, மகளுடனே பள்ளிக்குப் போகும் அம்மா என்ற அருமையான ஒருவரியைக் கையில் எடுத்த இயக்குனருக்கு ஸ்பெஷல் பொக்கே! ஆனால், திரைக்கதை?

கணவனை இழந்த அம்மாவும், அவரது மகளும் எவ்வளவு அன்பும், அரவணைப்புமாக இருப்பார்கள்? ஆனால், போஸ்டரில் இருவருமாக சிரித்துக் கொண்டிருக்கும் அளவு கூட இரண்டு மணி நேரப் படத்தில் இருவருக்குமான ஃபீல்குட் காட்சிகள் இல்லை.  அமலாபால் மகளை எழுப்புகிறார். ஒன்றாகச் சாப்பிடுகிறார்கள். திரும்பத் திரும்ப 'நன்றாகப் படி' என அறிவுறுத்தும் அம்மாவிடம், 'இப்படித்தான் இருக்கமுடியும்' என முரண்டு பிடிக்கிறார் மகள். பதினைந்து வருடங்கள் வளர்த்த அம்மா, எங்கு போகிறார், என்ன வேலை செய்கிறார் என்று எதுவுமே குழந்தைக்குத் தெரியவில்லை. பள்ளி முடிந்து இரவு வீட்டிற்குத் திரும்பும் மகள் எங்கே போய்வருகிறாள் என அம்மாவுக்குத் தெரியவில்லை. என்ன மேடம் லாஜிக் இது?

ரேவதி மருத்துவர். விதவிதமான சமையல் செய்யச்சொல்லி சாப்பிடுகிறார். ஒவ்வொரு காட்சிக்கும் அமலாபாலுக்கு அறிவுரை சொல்கிறார். 'பாவக்காய் உடம்புக்கு நல்லது' என பன்ச் பேசுகிறார். கதையின் முக்கியமான புள்ளியான 'நீ ஏன் ஸ்கூலுக்குப் போய் படிக்கக்கூடாது?' என அமலாபாலிடம் அவர் கேட்கும் சூழல், போகிற போக்கில் நடக்கிறது.

அரசு மேல்நிலைப்பள்ளியில் வெளியூர்களில் இருந்தா படிப்பார்கள்? சுற்று வட்டாரத்தில் இருக்கும் பிள்ளைகள்தானே படிப்பார்கள்? ஆனால், யாருக்குமே, தங்களோடு படிக்கும் மாணவியின் தாய்தான் அமலாபால் என யாருக்கும் தெரியவில்லை. அதுவும் முதல்காட்சியிலேயே - பத்தாவது முதல் நாளாகச் செல்லும் அமலாபாலின் மகள் தன் கடைசி பெஞ்ச் ஃப்ரெண்ட் விக்கியைத் தேடுவதன்மூலம் - அவர்கள் அந்த ஸ்கூலிலேயேதான் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் காட்டியாகிவிட்டது. க்ளைமாக்ஸில் 'இவங்க என் அம்மா' என மகள் அபிநயா அழுதுகொண்டே சொல்ல, யாருமே பெரிய ஷாக்கிங் இல்லை. காட்சிப்படுத்துதலைக்கூட 'ஓ அப்படியா, சரி. உட்காருங்க!' ரேஞ்சில் டீல் செய்திருக்கிறார்கள்.

ஆமை வேகத்தில் நகர்ந்தாலும், ஒரே சீராக.. செல்லும் திரைக்கதையில் திடீர் ட்விஸ்ட்டாக, அம்மா சேர்த்துவைத்த அத்தனை பணத்தையும் கூடப்படிக்கும் குழந்தைகளோடு ஹோட்டலில் சாப்பிடுவது, பிடித்த துணியை வாங்குவது என செலவழித்து முடிக்கிறார் மகள். இயக்குனர் மேடம்... 'அம்மா தப்பான வழியில் பணம் சம்பாதிச்சிருக்காங்க!' எனச் சந்தேகப்படும் மகளுக்கு, அம்மா படும் கஷ்டங்கள் எதுவுமே தெரியாதா? அம்மா இந்தந்த இடங்களில் வேலை செய்கிறார் என்பதுகூட தெரியாதா? தவிர, அம்மா சம்பாதித்த பணத்தைத் திருடிச் செலவழித்துவிட்டால், கணக்கு சரியாகிவிடுமா? என்னமோ போங்க!

சாலையில் நடந்துபோகும் அமலாபாலை, மாவட்ட கலெக்டரின் கார் மோதவர, டக்கென ஐடியா ஸ்பார்க் ஆகிறது அமலாபாலுக்கு. விறுவிறுவென கலெக்டர் வீட்டுக்கு  நடக்கிறார் அமலா பால். வாட்ச்மேன் விரட்ட, பலநாட்கள் முயற்சித்து அவரைச் சந்தித்து, ‘ஆஹா.. என்னமோ கேட்கப்போறார்’ என் நாம் நிமிர்ந்து உட்கார   'கலெக்டர் ஆகணும்னா, என்ன படிக்கணும்?' என்கிறார் அப்பாவியாய். இதை, தன் வெல்விஷரான ரேவதியிடமே கேட்டிருக்கலாமே?

சீனியர்களுக்கு நடுவே அறிமுக மேட்சில் செஞ்சுரி அடித்தது போல தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அமலாபாலின் மகளாக வரும் யுவஸ்ரீ. ஒரு காட்சியிலும் குறை சொல்ல முடியாத அளவு, அந்தக் கதாபாத்திரத்துக்கு தன் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

சமுத்திரக்கனி இருக்கிறார் என்றால், ஒரு கம்பீரம் இருக்கும், பொளேரென அறையும் வசனங்கள் இருக்கும்... என்றெல்லாம் நினைத்தால், அது இங்கே நிச்சயம் இல்லை. 'நீங்க நடிக்கிறது ஆடியன்ஸுக்குத் தெரியணும்' என டிரெய்னிங் கொடுத்து நடிக்கவைத்ததுபோல, அத்தனை அமெச்சூராக நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. நல்லா படிக்கும் பையன் என்றால் சோடாப்புட்டி கண்ணாடி, வால்தனம் செய்யும் பண்ணும் பையன் என்றால் கழுத்தில் ப்ளேடு டாலர் என்று க்ளிஷேக்களுக்கும் குறைவில்லை. அந்தப் பையன் விக்கியைக் கொஞ்சம் காமெடிக்காவது பயன்படுத்தியிருக்கலாம்!

இசை இளையராஜா என்று டைட்டிலில் போடுகிறார்கள். வசனங்களும் நாடக பாணியில்  இருக்கிறது.

க்ளைமாக்ஸ் காட்சியில் அந்தப் பிஞ்சு முகத்துக்குக் கண்ணாடி போட்டுவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று நேர்காணலில் அமர்ந்திருக்கும் மாணவி என்று சொன்னதற்கும், கலெக்டரே தன்னுடைய காரில் அமலாபாலை வீட்டுக்குச் சென்று விட்டுவிடச் சொன்னதற்கும் தியேட்டரில் நெஞ்சு விம்ம எமோஷனலாக வேண்டும்.. ஆனால் வெடிச்சிரிப்புதான் கேட்கிறது. குறைந்த கதாபாத்திரங்கள் என்றால் வெய்ட்டிங் மாதிரி, எமோஷனலில் இறங்கி அடித்திருக்கலாமே மேடம்!

கணக்குப் பாடத்தில் மகளைவிட அம்மா அதிக மதிப்பெண் பெறுவதும், அடுத்த தேர்வில் அம்மாவைவிட மகள் அதிக மதிப்பெண் பெறுவதுமாய் நகரும் காட்சிகள் கொஞ்சம் சுவாரஸ்யம். ஆனால், அதே சுவாரஸ்யம் படம் முழுக்க இருந்திருந்தால், 'அம்மா கணக்கு' கவனிக்கப்பட்டிருக்கும்.  நேர்த்தியான திரைக்கதை இல்லாத, எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத காட்சிகளுடன் அடுக்கப்பட்டிருக்கும் ஒரு அழகான கதையாக மட்டுமே போய்விட்டது.

மொத்தத்தில் விடை ஒகே.. ஆனா ஸ்டெப்ஸ்ல கோட்டை விட்டுட்டீங்களே!

பின் செல்ல