Published:Updated:

நீங்க உலகத்தை அழிச்சது போதும் பாஸ்! “இண்டிபெண்டென்ஸ் டே” படம் எப்படி?

நீங்க உலகத்தை அழிச்சது போதும் பாஸ்! “இண்டிபெண்டென்ஸ் டே” படம் எப்படி?
நீங்க உலகத்தை அழிச்சது போதும் பாஸ்! “இண்டிபெண்டென்ஸ் டே” படம் எப்படி?

1996-ல் வெளிவந்த இண்டிபெண்டென்ஸ் டே திரைப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. இருபது ஆண்டுகளுக்குப்பின் அதன் இரண்டாம் பாகம் "இண்டிபெண்டென்ஸ் டே: ரிசர்ஜென்ஸ்" என்ற பெயரில் (‘Independence Day: Resurgence’)வெளிவந்திருக்கிறது.

முதல் பாகத்தின் இறுதியில் ஏலியன்களை வென்ற திருப்தியோடு, 20 ஆண்டுகளாக ஏலியனின் அடுத்த தாக்குதலுக்கு தயாரிக்கிகொண்டு இருக்கிறது உலகம். விண்வெளியின் பல இடங்களில், ஆய்வு நிலையங்கள் அமைத்து ஏலியன்களைக் கண்காணித்து வருகிறார்கள். விண்வெளி ஆய்வாளர்கள் வானத்திற்கும், நிலவிற்கும் அசால்டாக பறக்கிறார்கள். முதல் பாகத்தைவிட பெரிய சைஸ் ஸ்பேஸ்-ஷிப், ஏலியன்கள் என இருந்தாலும், கதை மட்டும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லையென்பதே குறை.

உருண்டையா ஒரு ஸ்பேஸ்-ஷிப் நிலாவில் வந்து தரையிறங்க, அவசரப்படும் ஆய்வாளர்கள், அதை சுட்டுவிட ஒருவழியாக ஆரம்பமாகிறது திரைப்படம். "ஏலியன், உங்கள அட்டாக் பண்ண வருதுன்னு சொல்ல வந்த என்னையே சுட்டுட்டீங்களேடா, அடேய் அப்பரசென்ட்டிகளா" என கதறுகிறது வேற்றுகிரக ஸ்பேஸ்-ஷிப்.

பிறகென்ன, பெரிய சைஸ் ஏலியன் ஸ்பேஸ் ஷிப் ஒன்று உலகை அழிக்க ஆரம்பிக்கிறது. ஸ்பேஸ்-ஷிப் செல்லும் இடமெல்லாம், பொருட்கள் மேலெழும்பி சுக்கு நூறாக உடைகிறது. சீனா, அமெரிக்கா என பல நாடுகள் அழித்து ஸ்பேஸ்-ஷிப் வானளாவி நிற்கிறது. படத்தில் இருக்கும் ஹீரோக்கள் எப்படி ஏலியன்களை அழித்தார்கள் என முடிகிறது கதை.

லியம் ஹெம்ஸ்வொர்த், ஜெஸ்ஸி உஷர் , ட்ரேவிஸ் டோப், ஏஞ்சலா பேபி, ஜெஃப் கோல்ட்பிளம், பில் புல்மேன் என அரை டஜன் ஹீரோக்கள் இருந்தும், யாரும் பெரிய அளவில் ஈர்க்க மறுக்கிறார்கள். முதல் பாகத்தில் வரும் பில் புல்மேனும், ஜெஃப் கோல்ட்ப்ளமும், நடித்த அளவிற்குக்கூட மற்ற கதாப்பாத்திரங்கள் நடிக்கவில்லை. அதிரடி நாயகனாக முதல் பாகத்தில் கலக்கிய வில் ஸ்மித்தின் மகனாக வரும் ஜெஸ்ஸி உஷர், " நானும் ஆக்ஷன் ஹீரோ தான்ப்பா" என்ற ரீதியில் எதேதோ செய்கிறார். ம்ஹூம்.
தற்போதைய ஹாலிவுட் மார்க்கெட், சீனாவையும் சார்ந்து இருப்பதால், சீனாவைச் சேர்ந்த நடிகை ஏஞ்சலா பேபியை ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், ஹாலிவுட் பணக்கார தயாரிப்பு நிறுவனங்கள் உலகை அழிக்க கிளம்புவதால், அடப்போங்க பாஸ் என படத்தை ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் இப்போதெல்லாம். "இப்ப ஒரு லேடிய, ஏலியன் போட்டுத் தள்ளுச்சே, அதான் அமெரிக்க அதிபராம். ஓ, அப்படியா " என கேட்டுக்கொண்டே பாப்கார்ன் சாப்பிடும் அளவிற்கு ரசிகர்கள் படத்தை ஜாலியாக பார்க்கிறார்கள்.

“இண்டிபெண்டென்ஸ் டே”,“தி டே ஆஃப்டர் டுமாரோ”,“2012”,“இண்டிபெண்டென்ஸ் டே: ரிசர்ஜென்ஸ்” என்று இவர் இயக்கிய இந்த நான்கு படங்களுமே உலகத்தை பலமுறை அழித்துவிட்டது. (ஏன் பாஸ் இவ்வளவு வன்முறை?)

படத்திற்கு ரிடர்ன்ஸ், ரிடாலியேஷன், ரைசஸ், ரெக்வின் என பல பெயர்களை யோசித்துப் பின் ரிசர்ஜென்ஸ் என பெயர் வைத்தார்களாம். தலைப்பிற்கு இவ்வளவு யோசித்தவர்கள், கதையை சற்றேனும் யோசித்து இருக்கலாம். படத்தின் விளம்பரங்களில், " நாங்கள் தயாராகிக்கொள்ள 20 ஆண்டுகள் இருந்தது. ஏலியன்களுக்கும் " என அதிரடியாய் இருந்தது. ஆனால் படத்தின் இயக்குநருக்கு 20 மாதங்கள் கூட கிடைக்கவில்லை போல. 3டி படம், நல்ல விசுவல் எஃபெக்ட்ஸ் பார்க்க வேண்டும் என்பவர்கள் தாராளமாய் இந்தப்படத்தை தேர்வு செய்யலாம். கதையெல்லாம் எதிர்ப்பார்த்தீர்கள் என்றால், கடந்த வாரம் வெளியாகி இன்னும் ஹிட் அடித்துக்கொண்டு இருக்கும் ஃபைண்டிங் டோரி பக்கம் ஒதுங்கவும்.

டிரெய்லருக்கு: