Published:Updated:

உங்களைச் சுற்றி நடக்கும் கொலை, வெறும் கொலையல்ல! “ராமன் ராகவ் 2.0” படம் எப்படி?

உங்களைச் சுற்றி நடக்கும் கொலை, வெறும் கொலையல்ல! “ராமன் ராகவ் 2.0” படம் எப்படி?
உங்களைச் சுற்றி நடக்கும் கொலை, வெறும் கொலையல்ல! “ராமன் ராகவ் 2.0” படம் எப்படி?

உங்களைச் சுற்றி நடக்கும் கொலை, வெறும் கொலையல்ல! “ராமன் ராகவ் 2.0” படம் எப்படி?

வழக்கமான காதல் - கலாய் மசாலா  திரைப்படங்களுக்கு மத்தியில்  வித்தியாசமான படைப்புகளையும், மனிதர்களின் கருப்பு பக்கங்களையும், அவர்தம் உணர்வுகளையும் பளிச் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தேர்ந்த இயக்குநர் அனுராக் காஷ்யப். பிளாக் ஃபிரைடே,  நோ ஸ்மோக்கிங், கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர், அக்லி  என இந்திய சினிமா பெருமிதப்படும் படங்களை இயக்கியவர் அனுராக். இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநரான அனுராக் இயக்கி கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்திருக்கும் படம் “ராமன் ராகவ் 2.0”.

1960களில் பாம்பேவை கலக்கிய சைக்கோ கொலைகாரன் சைக்கோ ராமன். கடவுள் மெசேஜ் அனுப்பியிருக்கிறார் அதனால் கொலை செய்தேன் என அசால்ட்டாக சொல்லும் இவன் சைக்கோத்தனமாக 41 பேரை கொன்றவன். 'சைக்கோ ராமனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதை இது ஆனால் இது சைக்கோ ராமனை பற்றியது கிடையாது' என டைட்டிலேயே சொல்லிவிடுகிறார் அனுராக். ஒரு படத்தை எட்டு சிறு சிறு அத்தியாயங்களாக பிரித்து திரில் சேர்த்திருக்கிறார் அனுராக். சைக்கோ கொலைகாரனாக  நாவாசுதீன் சித்திக் நடித்திருக்கிறார். ராமன் (நவாஸுதீன் சித்திக்) செய்யும் கொலைகளை துப்பு துலக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் ராகவாக நடித்திருக்கிறார் விக்கி  கவுஷல்.

ஒரு பக்கம் சைக்கோத்தனமாக  சின்னச்சின்ன காரணங்களுக்காகவும், தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதற்காகவும், வரிசையாக மனித  உயிர்களை ஈவு இரக்கமின்றி வேட்டையாடுகிறார் நவாஸுதீன்.

ஒரு காட்சியில் "இது  எனக்கு பிடித்திருக்கிறது, சாப்பிடுவது, தூங்குவது போலவே கொலை செய்வதையும் கருதுகிறேன். கொலை செய்வது என்று வந்துவிட்டால் அதில் பெண், குழந்தைகளுக்கு  என எதற்கும்  விலக்களிக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறார் ராமன்.

இன்னொரு பக்கம்  ராமனை தேடுவதை காட்டிலும்  போதை மருந்து பயன்படுத்துவதிலும்,  உடலுறவு வைத்துக்கொள்வதையுமே வேலையாக வைத்திருப்பவர் போலீஸ் ராகவ்.  உடலுறவு வைத்துக்கொள்வதற்காகவே கேர்ள்பிரண்ட் வைத்திருக்கும் ராகவ் அதற்கும் ஒரு காரணமும் சொல்கிறார்.

போலீஸ் ராகவ் சைக்கோ கொலைகாரனை  தேடுகிறான். அதே சமயம் ராமனும் ராகவை அடைய விரும்புகிறான். இந்த இருவரும் சந்திக்கும்  ரேஸில்  ராமன் ஏன்  ராகவை அடைகிறான்? என்பது திக் திக்  கிளைமாக்ஸ். நவாஸுதீன் சித்திக்கும், விக்கி கவுஷாலும் போட்டி போட்டுக் கொண்டு  கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.  ஒரு போலீஸ் - கொலையாளி கதையில் அவர்களின் மனவோட்டங்களை வைத்து திரைக்கதையை செதுக்கியிருக்கிறார் அனுராக். எனினும் ராமன் ஏன் இப்படி கொலை செய்கிறான், அவனது பின்னணி என்ன, அவனுக்கும் அவனது சகோதரிக்கும் என்ன பிரச்னை என்பது பற்றிய  டீட்டெய்லிங் இல்லை என தியேட்டரில் பலர் குமுறியதை பார்க்க முடிந்தது.எந்த காரணங்களை சொன்னாலும் கொலை என்பது ஒன்று தான். மதங்களுக்காக சண்டை போட்டுக்கொண்டு செய்யப்படும் கொலைகளை, சாதி, மத வெறி பிடித்து செய்யப்படும் ஆணவக்கொலைகளை மக்கள் எளிதாக கடந்துவிடுகிறார்கள். சிலர் அதற்கு நியாயம் கற்பிக்கவும் செய்கிறார்கள். கொலை செய்யும் நபர் பணக்காரனா, ஏழையா, ஊடக வெளிச்சம் பெற்றவனா, சாதிக்காரானா, தனக்கு வேண்டியவனா, வேண்டாதவனா என்பதையெல்லாம் பொறுத்தே  கொலை செய்யப்பட்டவரின் மீதான  இரக்கம் மக்களுக்கு வருகிறது. 

மது அருந்துவது தவறு என மனைவி கண்டித்தததால் மனைவி, பெண் குழந்தைகள் உட்பட நான்கு பேரை திட்டமிட்டு கொன்ற குடிகார கொலைகாரர்களும், காதலித்தவனை கரம் பிடித்தற்காக  பெற்ற மகளை கொலை செய்யும் வெறி பிடித்த பெற்றோரும், தினம் தினம் மது அருந்திவிட்டு சாலையில் பரிதாபமாக சென்று கொண்டிருக்கும் ஒன்றுமறியா நபர்களை விபத்து ஏற்படுத்தி  கொல்லும் நிகழ்வுகளும் என்று அன்றாடம் ஏதோ ஒரு வகையில் கொலைகள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் நாம் என்னை வினையாற்றி விட்டோம்? மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக சைக்கோவாக மாறிக்கொண்டிருக்கிறான். கொலைகளை எளிதாக கடந்து போகும் ஒரு சமூகம் நாளை கொலைகார கூட்டமாக, சைக்கோவாக மாறும் நாள் வெகு தூரம் இல்லை. வெறும்  ஒரு கொலை -  அதை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது  என்பதை பற்றிய சாதாரண திரில்லர் இல்லை. ராமன் ராகவ் 2.0  அதுக்கும் மேல. வலிமையான இதயம் கொண்டவர்கள் தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு