Published:Updated:

’கபாலி’ ரஜினி ஃபீவர் சமயத்துல ’லிங்கா’ ரஜினி மெமரீஸ்! ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் எப்படி?

’கபாலி’ ரஜினி ஃபீவர் சமயத்துல ’லிங்கா’ ரஜினி மெமரீஸ்! ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் எப்படி?
’கபாலி’ ரஜினி ஃபீவர் சமயத்துல ’லிங்கா’ ரஜினி மெமரீஸ்! ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் எப்படி?

“அரிசி அரைச்சா மாவு, பவரு மொறைச்சா சாவு”, “ காலம் கண்டெடுத்த முத்து, நீ தான் கலைத்தாயின் சொத்து” இதெல்லாம் சும்மா சாம்பிள் தான்! இதுமாதிரி பல, நெஞ்சில் இறங்கும் கடப்பாரை பஞ்ச்களுடன் வெளியாகியிருக்கும் படம் தான் “அட்ரா மச்சான் விசிலு”. இந்த பஞ்ச் டயலாக்குகளெல்லாம் , வேற யாருக்கு? நம்ம பவரு.. பவரு.. பவரு.. பவர்ஸ்டார்க்குத்தான்.

மிர்ச்சி சிவா, பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கமுத்து, சென்ராயன், அருண்பாலாஜி, மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடிக்க, இயக்குநர் திரைவண்ணன் இயக்கியிருக்கிறார். ஸ்டார் ஹீரோக்களை கலாய்த்து காமெடியாக எடுத்திருக்கும் படம் தான் “அட்ரா மச்சான் விசிலு”.

படத்தைப் பற்றி அலசுவதற்கு முன்பு, ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்,

கோச்சடையான் படத்தைத்  தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் லிங்கா.  ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, சந்தானம் என்று ஸ்டார் நட்சத்திரங்கள், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க, இராஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது. பெரும் எதிர்பார்ப்புடன், பல கோடிகளுக்கு விற்பனையான லிங்கா, திரைக்கு வந்து தோல்வியைத் தழுவியது. ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் படத்துக்கு நஷ்ட ஈடுகேட்டு விநியோகஸ்தர்கள் போர்க்கொடித் தூக்கினர். குறிப்பாக ஒரு விநியோகஸ்தர் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்றும் அறிக்கையும் வெளியிட்டார். ‘ரஜினி தலையிட்டு எங்கள் நஷ்டத்திற்கு பணம் தரவேண்டும்’ என்று போராட்டத்தில் இறங்கினர் விநியோகஸ்தர்கள். எதற்கு இந்த கதையை சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? இந்தக் கதைக்கும், அட்ரா மச்சான் விசிலு படக்கதைக்கும் சம்பந்தம் இருக்கு பாஸ்!. 

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடுகேட்ட விநியோகஸ்தர்கள் இணைந்து புதுப்படம் தயாரிக்க இருப்பதாக முன்னரே அறிவித்திருந்தார்கள். அந்தப் படம் தான் “அட்ரா மச்சான் விசிலு”. மாஸ் ஹீரோக்களின் படங்களை அதிகத் தொகைக்கு வாங்கி, அந்தப் படம் ஓடவில்லையென்றால் விநியோகஸ்தர்களின் நிலை என்னவாகும் என்பதே கதைக் களம்.
 
இதை பவர்ஸ்டார் சீனிவாசன் ஒரு  பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார். “ லிங்கா விநியோகஸ்தர்கள் எடுக்கும் படத்தில் நான்  நடிப்பது உண்மைதான். இது முழுக்க முழுக்க காமெடி படம். யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் இருக்காது.  இந்தப் படத்தின் கதையானது தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் எனக்கு திடீரென ஒரு படம் தோல்வி அடைகிறது. அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தேனா என்பதுதான்  கதை. காமெடி கதையம்சம் உள்ள படமாகத்தான் இதை எடுக்கிறோம். மேலும் ரஜினியை அவமதிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இல்லை. இதை நிபந்தனையாக வைத்துதான் இந்த படத்திலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறு ஓர் உண்மை சம்பவத்தை படமாக்கி, பிரச்னைகளைக் கடந்து திரைக்கும் வந்துவிட்டது. இப்போ இந்தப் படத்தில் என்னதான் சொல்ல வந்திருக்கிறார்கள் என்பதை ஒரு ரசிகனின் பார்வையில் பார்ப்போம்.

சிவா, சென்ராயன், அருண்பாலாஜி மூவரும் பவர்ஸ்டாரின் அதி தீவிரமான ரசிகர்கள். மன்னிக்கவும் வெறியர்கள். ஊருக்குள் வெட்டியாக சுற்றிவரும் மூவரும் பவர்ஸ்டாரின் படங்கள் ரீலீஸானால் பாலாபிஷேகம், போஸ்டர் என்று கெத்து காட்டும் அக்மார்க் ரசிகர்கள், தன்னுடைய நடிகருக்கு செய்யும் அதே பணிவிடைகளை சரியாகச்  செய்துவருகின்றனர். யாராவது பவரைப் பற்றிப் பேசினால் வெகுண்டழுந்து ‘ஏ அமெரிக்க ஏகாபத்தியமே’ என்று சண்டைக்கும் செல்கின்றனர். இவ்வாறு பிஸியாக சுற்றிவரும் மூவரும், பொறுப்பாகி பவர் நடித்து ரிலீஸாகும் படத்தின் மதுரை விநியோகஸ்தர் உரிமையை வாங்குகிறார்கள். ஆனால் படமும் தோல்வியில் போக போட்ட பணத்தைக்  கேட்டு பவரின் வீட்டிற்குச் செல்கிறார்கள்.

“லாபம் வந்தா சந்தோஷமா ஏத்துக்குறீங்க, நஷ்டம்னா மட்டும் பணம் கேட்டு வந்துடுவீங்களா ” என்று பவர் உதாசினப்படுத்த, “அவனுக்கு இருக்குற மூணு கோடி ரசிகர்கள்ல மூணு ரசிகர்கள் நினைச்சா, ஒரு நடிகர என்னனாலும் பண்ணலாம்” என்று  வீரவசனத்துடன் களம் இறங்கும் மிர்ச்சி சிவா & டீம் தங்கள் பணத்தைத்  திரும்ப பெற்றார்களா.. பவர்ஸ்டாரின் க்ளைமேக்ஸ் ரியாக்‌ஷன் என்னவென்பதே “அட்ரா மச்சான் விசிலு”.

படத்திற்கு வேகமென்று வைக்கப்பட்டுள்ள படம் முழுவதும் வரும் பஞ்ச் டயலாக்குகள் தான்.. நமக்கு சோதனையாய் வந்திருக்கிறது.

“ மீனா பொண்ணு லட்டு, அவ நடிச்சா படம் ஹிட்டு, கொட்டும் பாரு துட்டு” (ரிலீஸ் டேட் எட்டு!)
“ பாசத்துக்கு முன்னாடி தான் பனி! பகைக்கு முன்னாடி சனி”
“ எதிரி இல்லைனா ஜீரோ; எதிரி வந்துட்டா நாம தான்டா ஹீரோ”
“ கதவ தொறந்தா சுவரு... சுவர சுத்தி நம்ம பவரு”

’என் தெய்வத்தோட ஒவ்வொரு ரோமமும் 5 கோடிக்கு இன்சூரன்ஸ் பண்ணிருக்குடா, அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நடிக்கலாம் முடியாது’ என்று சிங்கமுத்து சொல்வது காமெடி டயலாக்தான் என்றாலும், உண்மையிலேயே ஷூட்டிங் நேரத்தில் நடிகர்கள் செய்யும் அட்ராசிட்டிகளை போகிற போக்கில் படம் சொல்லுகிறது.

“ஏண்டா என் தலைவன் போஸ்டர் மேல, உன் தலைவன் போஸ்டர ஒட்டுன? ”
“என் தலைவன் உன் தலைவனுக்கும் மேலடா அதான், உன் தலைவன் போஸ்டருக்கு மேல ஒட்டுனேன் ” - இப்படியெல்லாம் அட்ராசிட்டி பண்ணி,  ரசிகர்கள் தங்கள் தன் தலைவருக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள்... ஆனால் நடிகன், அவரோட ரசிகன திரும்பி கூட பாக்குறது இல்லை என்பதையும், ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் நடிகன், தன்னுடைய விநியோகஸ்தர்களையோ, தயாரிப்பாளரையோ கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும், படக்குழு என்ன சொல்ல வந்த ஆதங்கத்தை சரியாக சொல்லியிருக்கிறார்கள்.

பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது, இந்தப் படத்தில் சிங்கமுத்துவைபோல நாமும் கோமாவிலேயே இருந்துவிடலாம் என்று தோன்றுமளவு போரடிக்கிறது. சரியாக கத்தரிக்கப்படாத எடிட்டிங், பொருந்தாத ஹீரோயின் என்று படம் இருந்தாலும் ஆங்காங்கே காமெடியிலும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது.

சின்ன வயதிலிருந்தே, ஹீரோவை காதலிக்கும் 'க்ளிஷே' நாயகியாகவே வருகிறார் நைனா. பவர்ஸ்டாருக்கு மேனேஜராக வரும் சிங்கமுத்து, பவரை தெய்வம் என்று அழைப்பது, டாக்டராக வரும் மன்சூரலிகான், முடிந்த அளவிற்கு தனக்கான காமெடியை சைலண்டாக கொடுத்திருக்கும் மிர்ச்சி சிவா, முகபாவனை மன்னன் பவர்ஸ்டாரின் நடிப்பு என்று படம் காமெடி பேக்கேஜ். ஆனால் செல்ஃப் எடுக்கவில்லை என்பதே குறை.  

“அனுஷ்கா, த்ரிஷாவுக்கெல்லாம் நற்பணி மன்றம் வச்சோம். அன்னை தெரஸாவிற்கு வைக்கலாமே” என்பது மிர்ச்சி சிவாவின் ஃபைனல் பஞ்ச். இதற்கு பதிலளிக்கும் விதமாக, “ரசிகர்கள் என்னை நடிகனா மாத்துனாங்க.. ஆனா இந்த ரசிகன் என்ன மனுசனா மாத்திட்டான்” என்று பவர்ஸ்டார் பஞ்ச் வசனத்துடன் படமும் முடிகிறது.

பாலாபிஷேகம் செய்ய 100 அடி கட் அவுட்களில் ஏறி கீழே விழுந்து உயிரிழந்த ரசிகர்களும் நம்மில் உண்டு. அதே நடிகனை முன்மாதிரி கொண்டு வாழ்வில் ஜெயித்தவர்களும் நம்மில்  உண்டு. அவர்களுக்காக நம்முடைய வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்பதை சொல்லியிருப்பது ஆரோக்கியமான ஒன்று.

கூடவே, ஒரு படம் தோல்வியில் முடிந்தால், நடிகர்கள் மட்டும் பணம் சம்பாதித்துக்கொண்டே இருப்பார்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வாழ்க்கையே சீரழிந்துவிடும் என்ற நிலையும் இங்கே நடக்கத்தான் செய்கிறது. இதற்கான தீர்வை கலையுலகமே சிந்தித்து எடுக்கவேண்டிய நேரமும் வந்துவிட்டது.

இந்த நிலை நீடித்தால், எதிர்காலத்தில் படம் எடுக்க தயாரிப்பாளர்களும் இருக்க மாட்டார்கள், விநியோகிக்க விநியோகஸ்தர்களும் இருக்கமாட்டார்கள் என்ற நிலையும் வரலாம். இந்த நிலைக்கான சரியான தீர்வை கலையுலகமே மேற்கொள்ளவேண்டும் என்பதே என்னைப் போன்ற சாதாரண ரசிகர்களின் ஆசை.

ஏனென்றால், எங்களுக்கு எங்க தலைவரோட படம் ரிலீஸாகணும்.. அதே சமயம் அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் நஷ்டமடையாமலும் இருக்க வேண்டும்.. அவ்வளவே!

-இப்படிக்கு ஒரு ரசிகன்.

பின் செல்ல