இன்னைக்கு ரஜினி... நாளைக்கு கமல், அஜித், விஜய்..!? - #BoycottFever

ரெல்லாம் கபாலி ஃபீவரில் தகித்துக் கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு 'ஃபர்ஸ்ட் ஷோ வித் பாப்கார்ன், செகண்ட் ஷோ வித் சமோசா' என பீத்தல் ஸ்டேட்டஸ்கள் போட்டு தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம், எல்லாவற்றுக்கும் கொதித்தெழுந்து பொங்கல் வைத்து களமாடும் கும்பல் கபாலியையும் விட்டுவைக்கவில்லை. #Boycottkabali என ஹேஷ்டேக் உருவாக்கி ஹை ஃபிட்சில் அலறிக்கொண்டிருக்கிறார்கள். காரணம், தன் படங்களில் மக்களுக்கு பணத்தை வாரி வழங்கும் ரஜினி நிஜத்தில் அப்படி செய்வதில்லையாம். தெலுங்குப் படங்களோடு போட்டி போடும் அளவிற்கு இந்த லாஜிக் நிச்சயம் உங்களை ஷாக் ஆக்கியிருக்கும். இது இப்படியே போனால், தமிழ் சினிமாவின் மற்ற ஹீரோ படங்களை என்னென்ன காரணம் சொல்லி Boycott பண்ணுவார்கள்..!? சும்மா ஒரு கற்பனையைத் தட்டிவிட்டேன்...

* 'வீழ்வது யாராகினும் வாழ்வது நாடாகட்டும்' என தொண்டையில் இருக்கும் கட்டியை பொருட்படுத்தாது நரம்பு புடைக்கப் பாடுவார் தசாவதாரம் படத்தில் வரும் அவதார் சிங். ஆனால், ஆங்காங்கே கெட்ட வார்த்தைகள், பெண்களை இழிவுபடுத்தும் வரிகள் என பாலிவுட் பீப் சாங்குகள் எழுதி சதா சர்வகாலமும் சர்ச்சையில் சிக்கி சுழலும் யோயோ ஹனிசிங்கை அவர் கண்டிக்காததால் கமலின் அடுத்த படத்தை எதிர்த்து போராடலாம். #boycottsabaashnaidu

* கல்விமுறையில் இருக்கும் குறைபாடுகளை பொட்டில் அடித்தது போல சொல்லிய 'நண்பன்' படத்தின் கொஸாக்ஸி பசப்புகழ் நிஜத்தில் கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகளை கேள்வி கேட்காததால் தளபதியின் அடுத்த படத்தை கடுமையாக எதிர்க்கலாம். (எப்படியும் கடைசி நேரத்துல ஏதாவது ஒரு க்ரூப் நிஜமாவே கிளம்பதான் போகுது). #Boycottvijay60

* 'நான் தனியாளில்ல, இது ஒரு கருப்புச் சரித்திரம்' என சர்வதேச மீடியாவையே அத்திப்பட்டி பக்கம் திருப்பிய சிட்டிசன் சுப்ரமணி நிஜ வாழ்வில் மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படும் சம்பவங்களுக்கு குரல் கொடுக்கவில்லை என்பதால் தலயின் அடுத்த படத்தை எதிர்த்து அவர் ஸ்டைலிலேயே அமைதியாகப் போராடலாம். #boycottthala57

* ஜெய்ஹிந்த், குருதிப்புனல், செங்கோட்டை, மங்காத்தா என நிஜ போலீஸை விட அதிக தடவைகள் காக்கிச்சட்டை மாட்டிய ஆக்‌ஷன் கிங், அடிக்கடி அத்துமீறும் காவல்துறையை கண்டித்து ஒரு சின்ன அறிக்கை கூட விடவில்லை. இதனால் அவரின் அடுத்த படத்தை எதிர்த்து சல்யூட் அடித்து கிளம்பலாம். #boycottarjun'snext #அடுத்தபடம்என்னனேதெரியலயே!

* 'இனியொரு இனியொரு விதி செய்வோம்' என அமெரிக்க ஸ்காலர்ஷிப்பை அசால்ட்டாக தூக்கி எறிந்து எலக்‌ஷனில் போட்டியிட்டு ஜெயித்த 'ஆயுத எழுத்து' மைக்கேல் நிஜத்தில் ஓட்டு கூட போட வராததால் அவரின் அடுத்த படத்தை கருப்பு மை கொண்டு எதிர்க்கலாம். #boycottsingam3

* 'முத்துமணி ரத்தினங்களும்' எஸ்.பி.பிக்கு போட்டியாக கேப் விடாமல் பஞ்ச் பேசிய வி.ஐ.பி தனுஷ் ரியல் லைஃப்பில் வேலை இல்லாமல் வாடும் இன்ஜினியர்கள் சமூகத்திற்கு ஆதரவாக துண்டு டயலாக் கூட பேசாததால் அவரின் அடுத்த படத்தை எதிர்க்க இப்போதே துண்டு போட்டு வைத்துக் கொள்ளலாம். #boycottthodari

* கொரியன், ரஷ்யன், க்ரீக், செக் என உலக மொழிகளில் எல்லாம் லவ் ஆன்தம் பாடிய சிம்பு காதலை மையமாக வைத்து நடக்கும் ஆணவக் கொலைகளை கண்டிக்காததால் அவரின் அடுத்த படத்தை... சரி விடுங்க.. அவர் படத்தை அவரே பாய்காட் பண்ணுவாரு. ஸோ, போராளிகளுக்கு வேலை மிச்சம். #boycottaym

* மான் கராத்தே படத்தில் பாக்ஸராக உயிரும் உணர்வுமாய் 'வாழ்ந்த' பீட்டர், மேரிகோம் ஒலிம்பிக்ஸ் போகாததற்கு வருத்தம் தெரிவிக்கவுமில்லை. விஜயேந்தர் சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டவும் இல்லை. இதனால் அவரின் அடுத்த படத்தை ஆவேசமாய் எதிர்க்கலாம். #boycottremo

* 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் நிஜ குடிமகனுக்கே சவால் விட்ட சுமார் மூஞ்சி குமார் அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடியதை கண்டுகொள்ளாமல் இருப்பதால், ‘குடிமகன்’கள் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை எதிர்த்துக் கொடி பிடித்துக் கிளம்பலாம். #boycottdharmadurai

* ஒரு படம் விடாமல் எல்லாவற்றிலும் பஸ் ஏறி ஊரு விட்டு ஊரு வந்து ரெளடிகளை போட்டுப் பிளக்கும் விஷால், நிஜத்தில் ரவுடியிசத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவரின் அடுத்த படத்தை முரட்டுத்தனமாக எதிர்க்கலாம். #boycottkaththisandai

* படிக்க சிரமப்படும் மாணவர்களை முன்னேற்றும் உயர்ந்த லட்சியத்தோடு வாழ்ந்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' நிஜ வாழ்க்கையில் டுட்டோரியல் காலேஜ் எதுவும் நடத்தாததால் ஆர்யாவின் அடுத்த படத்தை எதிர்க்கலாம். #boycottkadamban

* 'வாழ்க்கை, வசதி, சந்தோஷம் இதெல்லாம் தமிழ் படிச்சவங்களுக்கு இல்லையா சார்?' - இப்படி தமிழ் தமிழ் என வாழ்ந்த 'கற்றது தமிழ்' பிரபாகர் நிஜத்தில் அழிந்து வரும் மொழியறிவை, படிக்கும் பழக்கத்தை கண்டித்து போராடாததால் ஜீவாவின் அடுத்த படத்தை அதே தமிழ் கொண்டு எதிர்க்கலாம். #boycottthirunaal

இப்ப இது ரொம்பத் தேவையா? என்னத்தையாவது எழுதிகிட்டு... என கொந்தளிக்கும் புரட்சிப் போராளிகள் ப்ளீஸ் #boycottthisarticle

- நித்திஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!