Published:Updated:

'சிவா நீங்க சூப்பர் ஃபிகர்!' கலாட்டா விஜய்சேதுபதி

Vikatan Correspondent
'சிவா நீங்க சூப்பர் ஃபிகர்!' கலாட்டா விஜய்சேதுபதி
'சிவா நீங்க சூப்பர் ஃபிகர்!' கலாட்டா விஜய்சேதுபதி

ராஜமெளலி இயக்கத்தில் 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்தவர் சுதீப். கன்னடத்தில் ஸ்டார் நடிகரான இவர் தமிழில் நடிக்கும் படம், லிங்கா படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருக்கும் படம், நித்யா மேனன், சதீஷ், சாய் ரவி, நாசர் என்று நட்சத்திரங்கள் நடிக்கும் படம், டி.இமான் இசையமைத்திருக்கும் படம் என்று பல ஸ்பெஷல்கள் கொண்ட படம்தான்  தான் “ முடிஞ்சா இவன புடி”. இப்படத்திற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு இன்று (புதன்) சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட் , தனுஷ் தலைமையில் விஜய்சேதுபதி இசைத்  தட்டை வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டது. ‘இவர்கள் மூவரும் ஒரே மேடையில்’ என்ற  செய்தி வெளியானதும் ஒட்டுமொத்த திரையுலகமே அதற்கு வாய்ப்பே இல்லை என்று மறுக்க, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு இன்று டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டை நிகழ்த்தியே காட்டிவிட்டார் கே.எஸ்.ரவிகுமார்.

நடிகர் தனுஷூடன் 'தங்கமகன்' மற்றும் விஜய்சேதுபதியுடன் 'ரெக்க',  சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ' என்று மூன்று நடிகர்களின் படத்திலும் கே.எஸ்.ரவிக்குமார் நடித்துவிட்டார் என்பதால், மூவரையும் அன்புடன் அழைக்க, படப்பிடிப்பை விட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு நேரத்திற்கு ஆஜரானார்கள் மூவரும். முன்னர் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருவதாக இருந்தது, ஆனால் எதிர்பாராத விபத்தினால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதால், அவரால் கலந்துகொள்ளமுடியாமல் போனது.

கே.எஸ்.ரவிகுமாரின் எந்த நிகழ்ச்சி என்றாலும் தவறாமல் கலந்து கொள்ளும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி, இயக்குனர் பி.வாசு, இயக்குனர் சேரன், பாக்கியராஜ், ரமேஷ்கண்ணா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி சினிமா பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன்

'நான் ஈ' படத்தில், சுதீப்பின் நடிப்பைப் பார்த்து மிரண்டுபோன கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இல்லாத “ஈ” யை கற்பனை செய்து நடிப்பது ரொம்ப கடினமான விஷயம். இந்த நிகழ்ச்சியோட கதாநாயகன் டி.இமான் அண்ணனுக்கு திருமணம் நடந்த இதே அரங்கில்தான் என் திருமண நிகழ்ச்சியும் நடந்தது. மேடையில் அந்த பக்கம் விஜய்சேதுபதி, இந்தப் பக்கம் தனுஷ் சார்னு பார்க்கவே சந்தோசமா இருக்கு. இதுக்கெல்லாம் காரணம் கே.எஸ்.ரவிக்குமார் தான்.  இது நடக்குமா, சாத்தியமா என்று எல்லோரும் யோசிக்கிறாங்க, அப்படியெல்லாம் இல்லை. நாங்க அடிக்கடி பேசிக்கவும், சந்திக்கவும் செய்வோம். இறுதியாக, என்னைவிட வயதில் மூத்தவர் விஜய்சேதுபதி என்பதை இங்கே பதிவுசெய்கிறேன் (சிரித்தவாறு). கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் பக்கம் திரும்பி, “சிவா நீங்க சூப்பர் ஃபிகர் பிரதர்”என்று சொன்னாரு. ரொம்ப நாள் கழித்து பார்க்கும்போது பேச இந்த ஒரு விஷயம் தான் இருக்கா?” என்று கூறினேன். நாங்க மூன்று பேரும் ஒண்ணா இங்க வந்ததே எனக்கு சந்தோசம் தான் என்றார் சென்ட்டிமென்ட்டாக.    

விஜய்சேதுபதி

“கே.எஸ்.ரவிக்குமார் சாரோட நடிக்கும்போது, அவரிடம் இருந்த இயக்குநர் என்ற முகம் வெளிவரவே இல்லை. ஆனா இயக்குநர் என்ற கர்வம் எப்போதும் அவரிடம் இருக்கும். முக்கியமா தனுஷூக்கு அப்பாவா 'தங்கமகன்' படத்துல கலக்கியிருப்பாரு. இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் கூட. நீங்க இன்னும் நிறைய படங்கள் நடிக்கணும் என்று கேட்டுக்குறேன்” என்றார் சென்னை ஸ்லாங்கில்.

தனுஷ்

இப்ப வர்ற படங்கள்ல, சென்சார் அதிகாரி எப்டி எல்லா படத்துக்கும் முக்கியமோ அந்தமாதிரி எல்லா படத்திலும் இமான் இருப்பார். அவரின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது முறையாக நான் கலந்துகொள்கிறேன். இளையராஜா சாரின் மெலடி இப்போ இமானின் இசையில் தான் கேட்டமுடியுது. 'நான் ஈ' படம் வந்த நேரத்தில் பாலுமகேந்திரா சொன்ன ஒரு விஷயம், “இந்தமுறை ஜூரியா நான் இருந்தா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது சுதீப்புக்குத்தான்” என்று சொன்னார். இந்த விஷயத்தை சுதீப்பிடம் சொல்ல சரியான இடம் இந்த மேடை தான். சிவகார்த்திகேயனுடன் நடித்துவிட்டேன், விஜய்சேதுபதியோடயும் நடிச்சிட்டு இருக்கேன், சீக்கிரமே சுதீப்புடனும் நடிக்கணும் என்பதே என் ஆசை. ஆயிரம் பேருக்கு நடிப்பு சொல்லிகொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் என்னோட நடிச்சதே எனக்கு பெருமையா இருக்கு. அவரோட அனுபவம், வெற்றிக்கு முன்னாடி நாங்கலாம் பச்சா.  இருந்தும் எங்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக நன்றியைக்  கூறிக்கொள்கிறேன்’ என்று கலகலத்தார் தனுஷ்.

-நெருடன்-