Published:Updated:

இருட்டறையில் டயானா..! லைட்ஸ் அவுட் படம் எப்படி?

இருட்டறையில் டயானா..! லைட்ஸ் அவுட் படம் எப்படி?
இருட்டறையில் டயானா..! லைட்ஸ் அவுட் படம் எப்படி?

இருட்டறையில் டயானா..! லைட்ஸ் அவுட் படம் எப்படி?

இருட்டறையில் டயானா..! லைட்ஸ் அவுட் படம் எப்படி?

நிஜமாகவே 'பேய்' என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பதில்கள் வரும். இருப்பினும் விதவிதமான பேய்களை  படங்களில் மட்டும் உலாவவிட்டு பயத்துடன் ரசித்துக்கொண்டிருக்கிறோம். இதில் ஹாலிவுட் இயக்குநர்கள் கொஞ்சம் ஸ்பெஷல்! நடுநடுங்கவைக்கும் ஹாலிவுட் பேய் படங்களின் வரிசையில் இந்த வார வரவு “லைட்ஸ் அவுட்”.  

கொலைகாரப் பேய்களால் கொலைநடுங்க வைத்த “காஞ்சூரிங்” படத்தின் இரண்டுப் பாகங்களையும் இயக்கிய ஜேம்ஸ் வான் தயாரிப்பில், டேவிட் சான்ட்ஃபர்க் இயக்கியிருக்கும் லைட்ஸ் அவுட், பேய் கதைகளிலேயே வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. எவ்வளவுதான் நாம் நம்மை கெத்தாக காட்டிக்கொண்டாலும், மின்சாரம் இல்லாத இரவு நேரம் நம்மை ஜெர்க் ஆக்கவே செய்யும். அதுவும், நம் நாட்டில் அது பழகிப்போன ஒன்று என்றாலும், தனியாக இருட்டில் மாட்டிக்கொள்ளும்போது, கதவு திறந்து மூடினாலே  ஹார்ட் பீட், உசேன் போல்ட் அளவுக்கு எகிறும். விளக்கை அணைத்தால் பேய் வரும் என்பதுதான் அந்த கான்செப்ட். 2014-ம் ஆண்டு குறும்படமாக வெளியானபோதே, 32 லட்சம் ஹிட்ஸ்களை அள்ளியது. அதை அப்படியே, மானே தேனே.. பொன்மானே போட்டு, 81 நிமிடங்களுக்கு எடுத்து இருக்கிறார்கள்.

அந்த இரண்டு நிமிட குறும்படத்தை பாருங்களேன்...

மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஷோபி, தனது மகனுடன் தனி வீட்டில் தங்கியிருக்கிறார். இருட்டில் மட்டும் எல்லோரது கண்ணிற்கும் தெரியும் அமானுஷ்ய பேயால், ஷோபியின் கணவர் இறந்துவிடுகிறார். ஷோபியின் வீட்டில் இரவு நேர இருட்டில் மட்டும் அந்த பேய் வெளியே வந்து எல்லோரையும் மிரட்டி எடுக்கிறது. இதனால் ஷோபியின் மகன், தன் சகோதரியை வீட்டிற்கு அழைத்துவருகிறான். யார் அந்த இருட்டுப்பேய், அந்த பேய்க்கும் ஷோபிக்குமான தொடர்பு என்ன, ஷோபியின் கணவனை அந்த பேய் ஏன் கொன்றது, வீட்டில் அந்த மூவரின் நிலை என்னவானது என்பதை வழக்கமான நடுங்கவைக்கும் அதிர்வுகளுடன், காட்சிகளாக்கப்பட்டிருக்கும் படமே “லைட்ஸ் அவுட்”.

'விளக்கை அணைத்தால் மட்டும் கண்ணுக்குத்தெரியும்' என்ற சின்ன கான்செப்ட்டில் படம் முழுவதும், பார்ப்பவர்களை அச்சத்திலேயே உறைய வைத்துவிட்டுச் செல்கிறது இந்த இருட்டுப்பேய். பொதுவாக எல்லாப் படங்களிலும் பேய் வந்துவிட்டதென்றால், பாதிரியாரையோ, பேய் ஓட்டுபவர்களையோ கூட்டிவந்து பேய் ஓட்டுவதே உலக வழக்கம். ஆனால் அது இந்தப் படத்தில் இல்லாமல், எமோஷனலாக க்ளைமேக்ஸை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர் டயானா. டயானாவின் அந்த இருட்டு வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள், ஏன் வெளிச்சத்தை வெறுக்கிறாள் என்பதற்கான காரணங்கள் என்று ப்ளாஷ்பேக் காட்சியில் கூட பயத்தில் அதிரவைக்கிறது லைட்ஸ் அவுட்.

படத்திற்கு பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு. ஏனென்றால் படத்தின் பாதிக் காட்சிகள் இருட்டிலேயேதான் நடக்கின்றன. இருட்டில் அந்தப் பேயையும் காட்டி மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மார்க் ஸ்பைஸர். மற்றுமொரு ப்ளஸ், சவுண்ட் எஃபெக்ட்ஸ். விளக்கு அணைந்துவிட்டாலே திரைக்குப்பின்னால் ஓடும் மெல்லிய இசை, நிச்சயம் நம்மையும் பயமூட்டும்.

படம் வேகமாக நகர்ந்தாலும், க்ளைமேக்ஸ் காட்சியில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கலந்திருந்தால் நன்றாக இருக்கும். பேயை கொல்வதற்காக ஷோபி எடுக்கும் முடிவு எமோஷனல் சீன் என்றாலும், 'வாம்மா மின்னல்... ' போல பேயை காலி செய்வது, செல்ஃப் எடுக்கவில்லை.

இடைவேளை முடிந்து, இருக்கையில் அமர்ந்து இருக்கும் போதே, வழக்கம் போல்  10 நிமிடம் லேட்டாக வரும் ஆசாமிகள், பேய் பயத்தை கொடுக்க மறக்கவில்லை. இருட்டில்தான் வழக்கமாக பேய்வரும் என்றாலும், வெளிச்சத்தைப் பார்த்து பயப்படுவது, அதற்கான விளக்குகளை அணைத்து அலறடிப்பது என்று இனி இருட்டில் நாம் சென்றால், இருட்டுப் பேய் நிச்சயம் நம்மை பின்தொடரும் என்ற அனுபவத்தை திரையிலிருந்து வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச்செல்கிறது லைட்ஸ் அவுட். ஷோபியுடனான பேய் கதை உங்களுக்கு செட்டாகவில்லை என்றால், இந்த வார அனிமேஷன் ஹிட்டான ஸ்பீல்பெர்க்கின் BFG சோஃபியைக் காணுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு