Published:Updated:

என் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், சினிமால உள்ள ஒருத்தருக்காகத்தான்! - ஆர்.பார்த்திபன் ஓபன் டாக்!

என் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், சினிமால உள்ள ஒருத்தருக்காகத்தான்! - ஆர்.பார்த்திபன் ஓபன் டாக்!
என் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், சினிமால உள்ள ஒருத்தருக்காகத்தான்! - ஆர்.பார்த்திபன் ஓபன் டாக்!

என் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், சினிமால உள்ள ஒருத்தருக்காகத்தான்! - ஆர்.பார்த்திபன் ஓபன் டாக்!

சமீபத்தில்தான் தன்னுடைய அம்மாவை சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்கிற வாட்ஸப்பில் சுற்றிய  சர்ச்சையில் சிக்கிய  இயக்குநர் / நடிகர் பார்த்திபன், இப்போது களமாடியிருப்பது ஃபேஸ்புக்கில்!

'என் படத்தில் நாயகனாக நடிக்க ஆர்யா சாயலில் 5 1/2 to 6 1/2 pack வைத்துள்ள
கவர்ச்சியான ஆண்மகனும், ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க 5 அடி உயரமும், 25 வயதும், மாநிறமாக/கருமையாக உள்ள அன்பான முகம் கொண்ட பெண்மணியும் தேவை.'  என்றொரு ஸ்டேட்டஸை முகநூலில் தட்டி விட்டுள்ளார்.

அவ்வளவுதான். வெறும் வாய்க்கு அவல் கிடைத்த சந்தோஷத்தில் பலரும் அவர்களுக்கு க்ளோஸப் செல்ஃபி  வித் ஸ்மைல் முதல் ‘ செல்ஃபி வித் அருவாள் வரை ஃபோட்டோ கமென்டாகப் போட்டுத் தாளிக்க ஆரம்பித்துவிட்டனர். ‘வாய்ப்புக்காக ஃபீல்டுலயே எத்தன பேர் இருக்காங்க’ என்று சிலர் திட்ட, ’நீங்க பந்தா இல்லாம, ரொம்ப ஓபனா இருக்கீங்க சார்1’ என்று சிலர் பாராட்டவும் செய்தனர். கூடவே விஜய்காந்த் எட்டு பேக் வெச்சிருக்காரே.. வேணாமா, பாபா ராம்தேவ் பொருத்தமா இருப்பாரு, எனக்கு ஏழரை பேக் இருக்கு வேணமா என்று  பார்த்திபன் ப்ராண்ட் நக்கல் நையாண்டியை, அவரிடமே காட்டினர் நெட்டிசன்ஸ்.

பார்த்திபனிடம் பேசினோம்,

ஏன் இந்த திடீர் ஃபேஸ்புக் தேடல்..? மாடலுக்கு எதும் பஞ்சமா?

பொதுவாக படத்திற்குத்  தேவையான மாடல்களை மாடல் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாதான் தேடுவோம். அதுல இருக்கிற ஒரு சிக்கல் என்னன்னா, அவங்க ஏற்கெனவே கேமராவுக்கு செட் ஆகிற அளவுக்கு ஃபோட்டோக்களை எடுத்து தயாரா வச்சிருப்பாங்க. நான் அப்படி ஒரு மாடலை தேடவில்லை. கேமராவுக்கு புதிதாக இருக்கிற வித்தியாசமான மாடலை தேடுறேன். அதனாலதான் இணையத்தில் பதிவு செய்தேன்.

இதற்காக எதும் பிளான் பண்ணி வச்சிருக்கீங்களா..? இதற்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்னு எதிர்பார்த்தீங்க?

இதுக்காக பிளானிங் எல்லாம் பண்ணல. ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன். அன்னிக்கு போடணும்னு தோணுச்சு.. போட்டுட்டேன் அவ்வளவுதான். நான் எதிர்பார்க்காத அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. நிறைய பேர் நடிக்க ஆர்வமா இருக்காங்க.. கூடவே தன்னை ஹீரோவா பார்க்க ஆரம்பிச்சிருக்காங்கனு தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட இன்பாக்ஸூக்கும் நிறைய படங்கள் மற்றும் ரிக்வெஸ்ட் வந்துட்டே இருக்கு. ஆனா, என்னாலதான் உடனே பார்க்க முடியல. டைம் இருக்கும் போது பார்த்துட்டே இருக்கேன். பொறுமையா பார்க்க வேண்டியிருக்கு. எனக்கு தேவையான மாடல்களை மிஸ் பண்ணிடுவோமோனு ஒவ்வொண்ணா பார்த்துட்டு இருக்கேன்.பல பேர் இத திட்டியும் கிண்டல் பண்ணியும் கமென்ட் போட்டிருக்கிறார்களே?

மகாத்மா காந்தியையே தவறானவர் என சொல்லும் உலகம் இது. அப்படியிருக்க, யார் என்னவேணாலும் சொல்லிட்டு போகட்டும். நான் ஹீரோதான் ஆர்யா மாதிரி இருக்கணும் என சொல்லியிருக்கேன். ஆனா பெண்மணியைப் பற்றி தவறாக எதும் சொல்லலையே...?

அப்படி எவ்வளவு படங்கள் வந்திருக்கு?

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 1000 க்கும் பக்கமா செலக்‌ஷனுக்கான படங்கள் வந்து விழுந்திருக்கு. ஆனா இதுவரைக்கும் நான் தேடின ஆர்யா மாதிரியான ஆட்கள் கிடைக்கவே இல்லை.

இவ்வளவு பேர்ல ஒருத்தர் கூட ஓ.கே ஆகலையா?

அவங்க அவங்களுக்கு அவங்க எப்பவுமே ஹீரோவாதான் தெரிவாங்க. அவங்களோட லவ்வர், ப்ரண்ட்ஸ் என பல பேர் நீயும் அனுப்புனு சொல்லியிருப்பாங்க. அதனால இவ்வளவு பேர் அனுப்பி இருக்காங்க. ஒரு விஷயம்ங்க.. ஹீரோவுக்கான தனி அருகதைனு எதுவும் இல்ல. என்னோட படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ சப்ஜெக்ட்டுக்கு ஏத்த மாதிரி ஹீரோ ஹேண்ட்சமா இருக்கணும் அவ்வளவுதான். பொண்ணுங்க படத்தை பொது இடத்துல பதிவிட முடியாததால என்னோட உதவியாளர் எண்ணுக்கும் மெயில் ஐடிக்கும் அனுப்பி வச்சிருக்காங்க. அதுல இருந்து இரண்டு, மூன்று பேரை இப்போ வரைக்கும் தேர்வு செய்து வச்சிருக்கேன்.

நீங்க எப்பவுமே எதையாவது வித்தியாசமா செய்திட்டே இருக்கீங்களே..?

ரொம்ப பிஸினு மேம்போக்கா சொல்ல விரும்பல.  உண்மையில் நான்கு படங்களில் ஒரே சமயத்துல நடிச்சிட்டு இருக்கேன். ஒவ்வொரு படத்திலும் முற்றிலும் வித்தியாசமான ரோல். இந்த நான்கு படத்தின் பார்த்திபனையும் பக்கத்து பக்கத்துல நிற்க வச்சா சுத்தமா அடையாளமே தெரியாது. அந்த அளவுக்கு என்னோட ரோலை தனித்துவமா காண்பிக்கிற முயற்சியில இறங்கியிருக்கேன். அடுத்த  ஆறுமாதம் வரைக்கும் தேதியே இல்லை. அவ்வளவு பிஸியா ஓடிட்டு இருக்கேன்.

எப்படி இப்படி திடீர் பிஸி?


கடந்த இரண்டு வருஷமா பேசிட்டு இருந்த படங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்ததால இப்படி பிஸியா நடிக்க வேண்டியதாயிடுச்சு. மத்தபடி பிளானிங் எல்லாம் கிடையாது. இவ்வளவு வேலைக்கு இடையிலயும் முகநூல் பக்கம் வந்து இதிலும் எழுதிட்டு இருக்கேன். குடைக்குள் மழை படத்துல ஒரு சீன் வரும், காதலி,காதலனுக்கு 'ஐ லவ் யூ' ஐ லவ் யூ..'னு நிறைய டெலிகிராம் கொடுத்திருப்பாங்க. அந்த டெலிகிராமுக்குள்ளதான் அம்மா இறந்து போன செய்தியை சுமந்த டெலிகிராமும் இருக்கும். அதை மிஸ் பண்ணிடுவேன். அதுமாதிரி, எக்கச்சக்கமா என் படத்துக்கான மாடல் படங்கள் வந்திட்டு இருக்கு. மிஸ் பண்ணிடக்கூடாது என ஒவ்வொன்றையும் பொறுமையா பார்த்திட்டு இருக்கேன்.

ஒருவேளை உங்களைப் பார்த்து இனி இதுமாதிரியான தேடுதல் வேட்டையில இயக்குனர்கள் இறங்கிடுவாங்களோ...?

எல்லோருக்கும் அந்த பொறுமை இருக்குமானு தெரியல.. இருந்தா ஃபாலோ பண்ணட்டும். நல்ல விஷயம்தானே..?  ஆனா, நான் இந்த போஸ்ட் போட்டது இப்போ ஃபீல்ட்ல உள்ள ஒருத்தருக்காக. அவரே வந்து பேசுவார்னு எதிர்பார்த்தேன். ஆனா, அவருக்கு என்கூட செட் ஆகல போல. இது அவங்களோட ஈகோ பிரச்னையாகக் கூட இருக்கலாம். இன்னும் சொல்லப் போனா, அப்படி தன்னை நிரூபிச்சு பேர் வாங்கின யாரும் இப்படி புது வாய்ப்பை தேடிவரவும் மாட்டாங்க.

திட்டையும், விமர்சனத்தையும் எப்படி எடுத்துக்கிறீங்க?

அறிவு இருக்கானு கூட சில பேர் கேட்டிருக்காங்க. இப்படி வர்றதை எல்லாம் பார்த்து சிரிச்சுக்குவேன். எனக்கு இதெல்லாம் பழகிப்போயிடுச்சு. எனக்கு சினிமாதாங்க வாழ்க்கையே.. இதைவிட சுவாரஸ்யமான லைஃப் எனக்கு வேற எதுவும் இல்ல. தப்பித் தவறி யாராவது நம்மள சொன்னத வச்சி யோசிக்க ஆரம்பிச்சா நம்மளோட வாழ்க்கையை நாம வாழ முடியாது.

முகநூலை அடிக்கடி பயன்படுத்துற ஒரு சில பிரபலங்களில் நீங்களும் ஒருத்தர்..? இவ்வளவு பிஸியான நேரத்திலும் எப்படி இப்படி?

எதையாவது எழுத மாட்டோமான்னுதான்!  எதாவது புதுசா யோசிக்கணும். கூடவே, பாட்டுக்கான இரண்டு வரியாவது எழுதணும். அதற்காகவாவது அடிக்கடி முகநூல் பக்கம் வர்றேன்.

-வே. கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு