Published:Updated:

ஜீவா பாவம்... நயன்தாரா ரொம்பப் பாவம்!: ’திருநாள்’ விமர்சனம்

ஜீவா பாவம்... நயன்தாரா ரொம்பப் பாவம்!: ’திருநாள்’ விமர்சனம்
ஜீவா பாவம்... நயன்தாரா ரொம்பப் பாவம்!: ’திருநாள்’ விமர்சனம்

ஜீவா பாவம்... நயன்தாரா ரொம்பப் பாவம்!: ’திருநாள்’ விமர்சனம்

ஜீவா பாவம்... நயன்தாரா ரொம்பப் பாவம்!: ’திருநாள்’ விமர்சனம்

கடைசியாக ஜீவா நடிப்பில் வெளிவந்து ஹிட்டான படம் 'என்றென்றும் புன்னகைதான்'. மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. 'சரி, ப்ரோ பழைய ஃபார்முக்கு திரும்ப வந்துருப்பாரு' என நம்பி திருநாள் படத்திற்கு சென்று உட்கார்ந்தால்... ப்ச்!

கும்பகோணம், தஞ்சை வட்டாரத்தையே கலக்கும் ரவுடியாக சரத் லோகிதஷ்வா. அவர் 'அடிடா' எனக் கண்ணைக் காட்டினால் யோசிக்காமல் எதிராளியை அடித்து வெளுக்கும் நம்பிக்கைக்குரிய வலதுகையாக ஜீவா. சரத்தோடு சாக்கு மண்டி தொழிலில் பார்ட்னராக இருக்கும் ஜோ மல்லூரியின் மகளாக நயன்தாரா. தாதா தொழிலில் ஏற்படும் சின்னச் சின்ன தடங்கல்களை எல்லாம் ஜீவாவைக் கொண்டு முறியடிக்கிறார் சரத். ஒரு கட்டத்தில் யாரோ தர வேண்டிய பணத்திற்காக ஒரு கும்பல் நயன்தாராவைக் கடத்த, அவர்களோடு மல்லுகட்டி நாயகியை மீட்கிறார் ஜீவா. அப்புறமென்ன? வயக்காடுகளில், கோயில் குளக்கரைகளில் டூயட் பாடித் திரிகிறார்கள். இதற்கிடையே சரத்தை 'போட்டுவிடும்' முனைப்போடு மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு சுற்றுகிறார் கோபக்கார போலீஸான கோபிநாத்.

ஒரு பிரச்னையில் சரத்திற்கும் ஜோ மல்லூரிக்கும் இடையே விரிசல் விழ, சரத்திடமிருந்து விலகி மல்லூரியிடம் தஞ்சமடைகிறார் ஜீவா. இவர்களை அழித்துவிடும் ஆவேசத்தோடு சரத் சுற்றிவர, ''ரவுடியிசம் போதும்டா சாமி'' என நயன்தாராவோடு அமைதியாய் செட்டில் ஆக ஆசைப்படுகிறார் ஜீவா. 'அடிச்சது ஜாக்பாட்' என குழப்பக் குட்டையில் மீன் பிடிக்க கோபிநாத் அண்ட் கோ முயற்சி செய்கிறது. இந்த மும்முனைப் போட்டியின் இறுதியில் யார் வென்றார்கள் என்பதுதான் கதை.

பரட்டைத் தலை, 'மார்க்' விழுந்த முகம், அழுக்குக் கைலி என ரவுடி கெட்டப் ஜீவா. முதல்பாதியில் முறைப்பும், மிடுக்குமாய் திரிவது தொடங்கி பிற்பாதியில், ''எனக்கு எதுவும் வேணாம். விட்டுடுங்க' என பம்முவது வரை எல்லாமே செம ஜி. ஆனா, இதெல்லாம் தமிழ் சினிமா தோன்றிய காலம் முதலே எல்லா ஹீரோக்களும் செய்துச் சலித்த 'ஜஸ்ட் லைக் தட்' சம்பவங்கள்தானே..!

டாப், க்ளோசப், லாங் என எந்த ஷாட்டில் பார்த்தாலும் அவ்ளோ அழகாய் இருக்கிறார் நயன்தாரா. ஆனால் அவருக்கு, தாவணி மாட்டிக்கொண்டு மாங்காய் திருடுவது, மரத்தைச் சுற்றி ஆடுவது, ஹீரோவை நினைத்து சோக சாங் பாடுவது தவிர படத்தில் பெரிய வேலையே இல்லை. படத்தில் நயனுக்கு கிடைக்கும் பலத்த கைதட்டல், அந்த லிப் கிஸ் சீனுக்கு மட்டும்தான். 'தனி ஒருவன்', 'மாயா', 'நானும் ரவுடிதான்' என பார்த்துப் பார்த்து நடித்துக் கொண்டிருந்த பேபிம்மாவை இப்படி பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றிருப்பதெல்லாம் நியாயமா சாரே?

இதுதவிர கருணாஸ், வ.ஐ.ச ஜெயபாலன், சுஜாதா, மீனாக்‌ஷி, முனிஸ்காந்த் ராமதாஸ் என ஏராளமானோர் இருக்கிறார்கள் படத்தில். ஆனால் ஒருவரின் இருப்பும் கவனம் ஈர்க்க மறுக்கிறது. சோஷியல் மீடியாக்களில் நீயா நானா கோபிநாத்தின் ஸ்டில்கள் எல்லாம் வைரலாகின. ஆனால் படத்தில் அவருக்கு மொத்தமே இரண்டு, மூன்று காட்சிகள்தான்

தமிழ் மக்கள் நிறையப் பழகி எக்கச்சக்க கோர்ஸ்கள் முடித்த அதே 'ரவுடி' கதைதான். ஒரு சேஞ்சுக்காக மதுரைக்கு ரெஸ்ட் விட்டுவிட்டு, தஞ்சைப் பக்கம் டேரா போட்டிருக்கிறார்கள். சரி, திரைக்கதையிலாவது ஏதாவது புதிதாக இருக்கிறதா என்றால்...ம்ஹூம்! முதல்பாதி முழுக்க ஹீரோ - ஹீரோயின் டூயட், சிலபல சண்டைக்காட்சிகள் என ஆமை வேகம். இடைவேளைக்கு பின் கொஞ்சமாய் சூடு பிடிக்கும் திரைக்கதை, கொஞ்ச நேரத்திலேயே ஆறிப் போய் வயதான ஆமையாகிவிடுகிறது. அதுவும் வில்லனை போட்டுத்தள்ள ஜீவா போடும் ஸ்கெட்ச் எல்லாம் ஆவ்வ்வ்வ்வ் ரகம். என்னதான் ரவுடிகள் பற்றிய படமாக இருந்தாலும், " புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் , புகை பிடித்தல் உயிரைக் கொல்லும்" என்ற சைடு ஸ்லைடு படம் நெடுக வருவது சற்றே ஓவர் ப்ரோ. படத்தில் ஒரு சண்டைக்காட்சி அட்டகாஷ் என சொல்ல வைக்கிறது.பிறகு தான்.  அட இது 'தெறி' படத்துலயே வந்த சீன் ஆச்சே என யோசிக்க வைக்கிறது.

படத்தின் பெரிய ஆறுதல் மகேஷ் முத்துஸ்வாமியின் ஒளிப்பதிவுதான். மிஷ்கினின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு வயலும் மலையுமாக லொக்கேஷன் அமைய, நம் கண்களுக்குள் குளிர்ச்சியை நிறைக்கிறார்.

படத்தில் ஜீவாவின் பெயர் பிளேடு. வாயிலிருந்து பிளேடை துப்பி ஆளைக் காலி செய்வதால் இந்த காரணப்பெயராம். ஹ்ம்ம்..!

ஜீவா நடித்த படங்களில் ’யான்’ படம் ‘போக்கிரி ராஜா’ படத்தின் எதிர்பார்ப்பைக் குறைத்தது. ‘திருநாள்’ அதை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறது! 

அடுத்த கட்டுரைக்கு