Published:Updated:

இந்தக் கொரியர் தகவல் ஈர்த்ததா? - 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ விமர்சனம்

Vikatan Correspondent
இந்தக் கொரியர் தகவல் ஈர்த்ததா? - 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ விமர்சனம்
இந்தக் கொரியர் தகவல் ஈர்த்ததா? - 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ விமர்சனம்

சென்றவருடமே டெலிவரி செய்யப்பட்டிருக்கவேண்டிய கொரியர் பாயின் காதலும், பிரச்னைகளும் ஒரு வருடம் தாமதமாக, இந்த வருடம் லேட்டாக டெலிவரி.. ஸாரி.. ரிலீஸாகியிருக்கிற படம்தான் “தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்”.

சரியான வேலை கிடைக்காமல் அக்கா வீட்டில் தங்கி வேலை தேடுகிறார் ஜெய். தனியார் கொரியரில் வேலை பார்க்கும் சந்தானத்திற்கு பதிலாக ஒருநாள் கொரியர் டெலிவரி செல்லும் இடத்தில் யாமிகொளதமை சந்திக்கிறார் ஜெய். வழக்கம்போல பார்த்ததும் காதலால், சந்தானம் வேலைசெய்யும் இடத்திலேயே கொரியர் டெலிவரி வேலையில் சேர்கிறார் ஜெய். தினமும் கொரியர் கொண்டுச்செல்லும் சாக்கில் யாமியுடன் காதலை வளர்க்கிறார் ஜெய். இதே நேரத்தில் மற்றொரு கதையும் திரையில் நகர்கிறது. மருத்துவமனையில் நடக்கும் அட்டூழியங்களை ஆதாரத்துடன் சேகரித்து, அங்குவேலை செய்யும் வார்ட்பாய் தம்பிராமையா, சமுக ஆர்வலர் நாசருக்கு கொரியர் அனுப்புகிறார். இதையறிந்த வில்லன் கேங் கொரியரை தடுத்துநிறுத்த முயல்கின்றனர். அந்த கொரியரில் என்ன இருந்தது, ஜெய் அந்த கொரியரை நாசரிடம் கொண்டுபோய் சேர்த்தாரா என்பதை ஆக்‌ஷனும் காமெடியுமாக சொல்ல முயன்றிருக்கிறது “தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்”

புதிய ஒன்லைனாக, ‘ஸ்டெம்செல்’லை சட்டவிரோதமாகப் பயன்படுத்த முயல்வதை கையிலெடுத்துக் கொண்டதற்கான அறிமுக இயக்குநர் ப்ரேம் சாயைப் பாராட்டலாம். கெளதம் வாசுதேவுடன் இணைந்து மூன்று பேர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் நம்பிக்கைக்கு மகிழ்ச்சி. இருப்பினும் இப்படம் அந்த அளவிற்கு திரைக்கதையில் வலுசேர்க்கவில்லை என்பதே உண்மை.

படத்தின் முதல் பாதி காமெடியிலும் காதலிலும் நிறைகிறது. காதல் ஏனோ தானோ என்று எய்ட்டீஸ் ஸ்டைலில் இருக்க, காமெடிக்கு க்ளாப்ஸ். காரணம்  சந்தானமும், விடிவி கணேஷும்.

இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று வருடத்திற்கு முன்பே நடந்தது. அதனால் சந்தானம் பழைய டைப்பில்,  காமெடி வெர்ஷனில் நடித்திருக்கிறார். இருந்தாலும்  “டி.பி வந்தவன் கூடயும் லவ் பண்ணவம் கூடயும் படுக்கக் கூடாது. அவன் இருமியே சாகடிப்பான், இவன் உளறியே சாகடிப்பான்” என்பது போன்ற கவுண்டர்களை மிஸ்ஸாகாமல் டைமிற்கு டெலிவரி செய்கிறார் சந்தானம்.

யாரையும் பாதிக்காமல் தேமே என்றே வந்துபோகிறார் யாமிகொளதம். காதல் காட்சிகள் செல்ஃப் எடுக்கவே இல்லை. அடுத்து நடப்பதை முதலிலேயே யூகிக்க முடிகிற திரைக்கதை படத்திற்கு பலவீனமாய் இருக்கிறது.

சத்யாவின் ஒளிப்பதிவும், பிரவீணின் படத்தொகுப்புமே படத்திற்கான வேகத்தை கொடுக்கிறது. முதல் பாதியில் இருக்கும் வேகம், இரண்டாம் பாதியில் மிஸ்ஸாகிறது. இயக்குநரின் மெத்தனம் மணிகண்டன் என்ற கேரக்டரை, வில்லன் மாணிக்கம் என்பது உட்பட ஒரு சில இடங்களில் அப்பட்டமாய்த் தெரிகிறது.

இப்படத்தை தமிழில் எடுக்கும் அதே நேரத்தில் தெலுங்கிலும் இயக்கினார் பிரேம்சாய். தெலுங்கில் நிதின், யாமி நடிப்பில் “கொரியர் பாய் கல்யாண்” என்ற பெயரில் சென்றவருடமே ரிலீஸாகி தெலுங்கில் ஹிட். ஆனால் இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யவே திட்டமிட்டார்கள். கொஞ்சம் தாமதமாகி ரிலீஸாகி டெலிவரியில் மிஸ் செய்துவிட்டது இந்த தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்.