Published:Updated:

களத்தில் கலக்கும் சூப்பர் வில்லன்கள்!- சூசைட் ஸ்குவாட் படம் எப்படி?

களத்தில் கலக்கும் சூப்பர் வில்லன்கள்!- சூசைட் ஸ்குவாட் படம் எப்படி?
களத்தில் கலக்கும் சூப்பர் வில்லன்கள்!- சூசைட் ஸ்குவாட் படம் எப்படி?

ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படங்களில், ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனால், ஹீரோக்களைவிட வில்லன்களுக்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பேட்மேன், ஃபிளாஷ் போன்ற ஹீரோக்களைவிட, சூப்பர் வில்லன்களான ஜோக்கர், டெட் ஷாட் போன்றவர்களுக்கே மவுசு ஜாஸ்தி. பேட்மேன் சீரியஸில் சூப்பர் வில்லன்களை சிறைக்குள் தள்ளிவிடுவார் பேட்மேன். இந்த சூப்பர்வில்லன்களுக்கும், அல்ட்ரா சூப்பர் வில்லன்களுக்குமான சண்டை தான் இந்த சூசைட் ஸ்குவாட்.

இந்த படத்தில் வில்லன்கள் தான் ஹீரோஸ்! வில்லனுக்கும் வில்லனுக்கும் சண்டை வந்தால் என்ற ஒன்லைனுடன் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது இந்த சூசைட் ஸ்குவாட். டெட்ஷாட் (வில் ஸ்மித்), ஹார்லி குயின் (மார்கட் ராபி ), கேப்டன் பூமரேங் (கர்ட்னி ), எல் டியாப்லோ (ஜெய் ஹெர்னாண்டஸ்), கில்லர் க்ரொக் (அடிவாலே) இவர்கள் உலகிலேயே ரொம்ப மோசமானவர்கள் என்று பலத்த பாதுகாப்புடன் சிறையில் இருப்பவர்கள்.

அரசே இவர்களுக்கு ஒரு அசைன்மென்ட் தருகிறது. அவர்கள் இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இவர்களின் கழுத்துப் பகுதியில் இருக்கும் சிப் ஆக்டிவேட்டாகி, வெடித்து இறந்துவிடுவார்கள். உலகத்தையே அழிக்கவரும் அல்ட்ரா வில்லன்களை, இந்த சூப்பர்வில்லன்கள் வென்றார்களா என்பதே இந்த சூசைட் ஸ்குவாட் படத்தின் கதை. சின்ன கான்செப்டுடன் காமெடி சரவெடியால் ரசிகர்களை ஈர்க்கிறது திரைப்படம்.

ஒவ்வொரு சூப்பர்வில்லனுக்கும் ஒரு குட்டி இன்ட்ரோ தரும்போதே, அரங்கம் அதிர்கிறது. இன்ட்ரோக்களில் சூப்பர் வில்லன்களைப் பிடித்து சிறையில் அடைப்பவர்களாக  பேட்மேனும், தி ஃப்ளாஷும் வருகிறார்கள். அட, ஒரே படத்தில் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் என கை தட்டிக்கொண்டே பார்க்க வைக்கிறது திரைப்படம்.

உலகத்தை அழிக்க வேறு உலகத்திலிருந்துவரும் வில்லன்களை, அமெரிக்க சூப்பர் ஹீரோஸ் அழித்து இந்த உலகையே காப்பாற்றுவது தான் பாரம்பரிய வழக்கம். இதை கொஞ்சம் நகர்த்திவைத்துவிட்டு, ஹீரோக்களுக்கு பதிலாக வில்லன்களை ஹீரோவாக்கி ரசிகர்களிடம் வெற்றியும் கண்டுவிட்டது டி.சி (Detective Comics). கான்செப்ட மாத்தினீங்க, கதையையும் கொஞ்சம் மாத்துங்க ஜி... ப்ளீஸ்!

ஹார்லி குயினின் காதலராக ஜோக்கர்! வாவ்! ஹார்லி குயின் கதாபாத்திரத்தில் மார்கட் ராபி கலக்கி இருக்கிறார். அவரின் வசனங்கள் எல்லாமே தெறி லெவல். படத்தில் எப்போதெல்லாம் வேகம் குறைகிறதோ, அப்போதெல்லாம் ஜோக்கர்- ஹார்லி குயின் காட்சிகள் படத்தைக் காப்பாற்றுகிறது. குறிப்பாக, ஜோக்கருடன் காதல் காட்சிகளில் சைக்கோத்தனமாக ரொமான்ஸில் மிரட்டுகிறார் ஹார்லி. ஜோக்கருக்குனே தனியா ஒரு படம் எடுங்க இயக்குநர் சார்!

லாஜிக், கதை நகர்வு என எதுவுமே இல்லாததால், விமர்சகர்களால் இணையத்தில் அதிகம் கழுவி ஊற்றப்படுகிறது சூசைட் ஸ்குவாட். ஆனால், அதையெல்லாம் நாங்கள் எதிர்பார்த்து வரவில்லை என்பது போல், கைதட்டுகிறார்கள் காமிக்ஸ் ரசிகர்கள். முதல் மூன்று நாட்களில் 267 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக பாக்ஸ் ஆஃபிசில் கலெக்‌ஷன் குவித்து இருக்கிறது சூசைட் ஸ்குவாட்.

படமுழுவதும் வில் ஸ்மித் சென்டிமென்டிலும், ஹார்லி குயின் காதலிலும் மினுங்குகிறார்கள். எவ்வளவு பெரிய தொலைவையும் ஒரே ஷாட்டில் சுட்டுத்தள்ளும் வில், தீயினால் இடத்தையே ஜுவாலையாக்கும் எல், சிரிப்பிலேயே மயக்கும் ஹார்லி, மூஞ்செல்லாம் புள்ளிப்புள்ளியா கட்டையா குட்டையா கரடிக்கு சித்தப்பாமாதிரியே முரட்டுப்பையன் கில்லர் க்ரொக் என்று இந்த வில்லன்களே, இனி ரசிகர்களின் ஹீரோஸ்.

அடுத்த பாகம் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறார்கள். ‘அதிலாவது கதை கொஞ்சம் யோசிங்க டேவிட் அயர்!’  என்கிறார்கள் விமர்சகர்கள். கதையெல்லாம் தேவை இல்லை நாங்க அதெல்லாம் இல்லாமலும் பார்ப்போம் என மார்தட்டுகிறார்கள்  காமிக்ஸ் ரசிகர்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என்று இந்தவார ரிலீஸில் பாஸ் மார்க், சூசைட் ஸ்குவாட் மட்டுமே. தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும், திருநாள் என்று தமிழ் படங்களுக்கு நடுவே.. வித்தியாசமாக சூசைட் ஸ்குவாட் படத்தை போய் பாருங்க... என்ஜாய் பண்ணுவீங்க...

Save

பின் செல்ல