Published:Updated:

தாய்க்குடம் பிரிட்ஜ்: ஒரு அடிபொளி கச்சேரி!

தாய்க்குடம் பிரிட்ஜ்: ஒரு அடிபொளி கச்சேரி!
தாய்க்குடம் பிரிட்ஜ்: ஒரு அடிபொளி கச்சேரி!

திரை இசை ஆளுமைகளைத் தாண்டி இளசுகளின் கவனத்தை சாமானியர்கள் ஈர்ப்பது எல்லாம் குதிரைக்கொம்பு மேட்டர். ஆனால் அதை அனாயாசமாக செய்கிறது கேரளாவைச் சேர்ந்த 'தாய்க்குடம் பிரிட்ஜ்' இசைக்குழு. இவர்களின் கான்செர்ட் எங்கு நடந்தாலும் அரங்கை ஹவுஸ்புல் ஆக்கும் தீர்மானத்தோடு குவிகிறது இளைஞர் பட்டாளம். சென்னையில் சமீபத்தில் நடந்த இவர்களின் மியூசிக்கல் நைட்டிற்கு வந்திருந்த கூட்டமே இதற்கு சாட்சி. 

அமராந்தா ஆண்டுதோறும் நடத்தும் இசைத்திருவிழாவில், இந்த ஆண்டிற்கான ஸ்டார் அட்ராக்‌ஷன் 'தாய்க்குடம் பிரிட்ஜ்'தான். அவர்களோடு சூரஜ் மணியின் குழு, ஓர்லாண்டோ அண்ட் தி மீடியம் ரேர், 'தி கார்டெல்' ஆகிய மூன்று குழுக்களும் மேடையேறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

முதலில் களம் கண்டது ஓர்லாண்டோ குழுதான். வித்தியாசமாய் இவர்களுக்கு மட்டும் ஓபன் ஏர் கான்செர்ட். வந்திருப்பவர்களை வார்ம் அப் செய்யும் நோக்கில் வெஸ்டர்ன் மெலடி மட்டுமே இவர்களின் சாய்ஸ். அதுவும் புல்வெளியில் மெல்லிசை பரவவிட்டது...டிவைன்.

உள்ளே முதல் குழுவாக மேடையேறியது 'தி கார்டெல்'. வி.ஐ.டியை சேர்ந்த மாணவர்களால் ஆனது இந்த இசைக்குழு. மயக்கும் குரல், துள்ளல் நடனம் என கவனம் ஈர்த்த அந்தக் குழுவின் பப்ளி பெண்ணுக்கு குவிந்தது ஆயிரம் லைக்ஸ்.

அதன்பின் மேடையேறினார்கள் சூரஜ் மணியும், தத்வா ட்ரிப் குழுவும். பல்வேறு காலநிலைகளை, இடங்களை கடக்கும் ஒரு பயணியின் பார்வையில் இசையமைப்பதுதான் சூரஜின் ஸ்டைல். இந்த முறையும் அந்த எதிர்பார்ப்பை கச்சிதமாக நிறைவேற்றி டெம்போ குறையாமல் பார்த்துக்கொண்டது அந்தக் குழு.

பின், பலத்த ஆரவாரத்திற்கு இடையே மேடையேறியது இளசுகளின் ஹார்ட்பீட்டான 'தாய்க்குடம் பிரிட்ஜ்'. மங்களகரமாய் தொடங்கி பின் தங்களது வழக்கமான அதிரடிக்கும் ஸ்டைலுக்கு வந்தார்கள். அதை தொடங்கியது 'செக்கேலா' பாடலோடு. இந்த பாடலைப் பாட 'அவியல்' இசைக்குழுதான் பெஸ்ட் என ஒரு பேச்சு உண்டு. 'நாங்களும் சிறப்பா செய்வோம் பாரு' என கங்கணம் கட்டி இறங்கினார் அனிஷ். மிரட்டல். அடுத்து களம் கண்டது அணியின் சீனியர்மோஸ்ட் சிங்கம் பீதாம்பரம் மேனன். 'அப்போழும்' பாடலைத் தொடங்குவதற்கு முன்பே அவர் போட்ட குத்தாட்டம் இளசுகளை எகிற வைத்தது. விளைவு, மொத்தக் கூட்டமும் குதிகால்களில்.

இந்த குழுவின் பென்ச்மார்க் 'இளையராஜா 1000' நிகழ்ச்சியில் இவர்கள் பாடிய மெட்லிதான். ராஜா ரசிகர்கள் அத்தனை பேரையும் கவர்ந்த அந்த மெட்லியை 'ராஜ ராஜ சோழன் நான்' பாடலோடு திவ்யமாய் தொடங்கி வைத்தார் கிரிஸ்டின் ஜோஸ். அதுவும் புன்னகை மன்னன் தீம் மியூசிக்கை கோவிந்த் மேனன் வயலின் வழி கேட்க வேண்டுமே...தெய்வ லெவல்.

அதன்பின் வந்தது சென்னை ரசிகர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் ட்ரீட். ரஹ்மானின் 'தள்ளிப்போகாதே'வை தங்களின் ஹார்ட்கோர் ஸ்டைலில் மாற்றி இருந்தார்கள். இங்கே சித் ஶ்ரீராமாக மாறியது குழுவின் காதல் மன்னனான சித்தார்த் மேனன். அதன்பின் கிருஷ்ணா, மாதவ் இருவரின் மெலடி டச். அதன் இறுதியில் கோவிந்தின் வயலின், மிதுனின் கிடார், அனீஸின் டிரம்ஸ் மூன்றும் உக்கிரமாக மோதின. ஏறக்குறைய கால் மணிநேரம் நீடித்த இந்த ஜாலி போட்டியில் கோவிந்தின் வயலின் ஸ்டிரிங் தெறித்தேவிட்டது. முடிவில் வென்றது அனீஸ்தான். அடியென்றால் அப்படி ஒரு அடி. ஜீன்ஸ் படத்தில் வரும் 'புன்னகையில் தீமூட்டி..' பாடலின் கடைசி ஒரு நிமிட டிரம்ஸ் அடிக்கே சிலிர்த்தவர்கள் நம்மவர்கள். கால் மணி நேரம் என்றால் சும்மாவா? மூச்சை இழுத்துப் பிடித்து ரசித்தார்கள்.

கடைசியாய், தாய்க்குடம் ஸ்பெஷல் 'பிஷ்ராக்'. திருவிழாவின் க்ளைமாக்ஸில் மொத்தக் கூட்டமும் உக்கிரமும் உற்சாகமுமாய் ஆடுமே அப்படி ஒரு கொண்டாட்டம் அரங்கில். வாண்டுகள் தொடங்கி வயதானவர்கள் வரை அத்தனை பேரும் எகிறிக்கொண்டிருந்தார்கள். பிஷ்ராக் முடியும்போது நள்ளிரவை நெருங்கியிருந்தது. ஆனாலும் அசராமல் ஒன்ஸ்மோர் கேட்டது கூட்டம். தயங்காமல் தாய்க்குடம் கையில் எடுத்தது சந்தோஷ் நாராயணன் ஸ்பெஷலை. 'எங்கோ ஓடுகின்றாய்' பாடலை ஆக்ரோஷமாய் அவர்கள் இசைத்து முடிக்க...லைட்ஸ் ஆஃப்.

15 நிமிட தாய்க்குடம் ப்ரிட்ஜ் விருந்தை, இளையராஜா ஆயிரத்தில் தவறவிட்ட சிலர் நேற்று இரண்டு மணி நேர ஜாக்பாட் அடிக்க, சிலிர்த்தார்கள்.  இன்னொரு குட் நியூஸ் சொல்லவா.. 20-ம் தேதி மீண்டும் நம்ம சென்னையில் களம் காண்கிறது தாய்க்குடம் பிரிட்ஜ். மேலும் விபரங்களுக்கு உங்களைப் போலவே நானும்... வெய்ட்டீஸ்!

-நித்திஷ்