Published:Updated:

’நெருப்புடா!’ தணிந்தபின்.. அலைபாயும் மாயநதி! #மகிழ்ச்சி #உமாதேவி

’நெருப்புடா!’ தணிந்தபின்.. அலைபாயும் மாயநதி! #மகிழ்ச்சி #உமாதேவி
’நெருப்புடா!’ தணிந்தபின்.. அலைபாயும் மாயநதி! #மகிழ்ச்சி #உமாதேவி
’நெருப்புடா!’ தணிந்தபின்.. அலைபாயும் மாயநதி! #மகிழ்ச்சி #உமாதேவி

ரஜினி என்றாலே ஸ்பீட்தான் என்பதால், அவர் படங்களில் பெரும்பாலும் ஒரு துள்ளல் இசையோடுதான் டூயட் இருக்கும். மீனம்மா மீனம்மா, ராஜாதி ராஜா உன் தந்திரங்கள், சந்தைக்கு வந்த கிளி, காள காள முரட்டுக்காள, ரெக்க கட்டிப் பறக்குதய்யா, தில்லானா தில்லானா என்று அது ஒரு பெரிய லிஸ்ட். ஆனால் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான், உன்னைத்தானே தஞ்சம் என்று, கண்ணில் என்ன கார்காலம், தாழம்பூவே வாசம் வீசு, முத்தமிழ்க் கவியே வருக, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, தங்கமகன் இங்கு சிங்கநடை, சஹானா சாரல், சின்னச் சின்ன நட்சத்திரம், மெதுவாகத்தான் மெதுவாகத்தான் என்று டெம்போ கம்மியான பாடல்கள் சொல்லி அடிக்கிற, ஷ்யூர் ஹிட் ரகம்! காலத்துக்கும் நிலைத்து நிற்கும். அப்படித்தான் இப்போது மாயநதியில் விழுந்து உருண்டுகொண்டே இருக்கிறான் இசை ரசிகன். அந்தப் பாடல் அப்படி ஈர்த்திருக்கிறது. நெருப்புடா நெருங்குடா என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தவன், மாயநதியின் சலசல ஓசையில் மயங்கிக் கிடக்கிறான். படத்தில், இந்தப் பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரஜினி ரியாக்‌ஷன்களில் அத்தனை பாந்தமாக, அத்தனை பாசமாக, அத்தனை காதலாக என்று கலக்க, அவருக்குச் சளைக்காமல் ராதிகா ஆப்தே.

ராதிகா ஆப்தே ‘நான் செத்துதான் போயிருந்தேன்.. நீ  என்னை வந்து பார்க்கற வரையிலும்’ என்று சொல்லும்போதும் ‘ரெண்டு வர்சம்.. ரெண்டு மாசம்.. பதினெட்டு நாள். இந்த 25 வர்சமும் திரும்பத் திரும்ப அதமட்டும்தான் நெனைச்சு வாழ்ந்துட்டிருந்தேன்’ என்று சொல்லும்போதும் ரஜினி முகத்தில் வரும் உணர்ச்சி, ரஜினி தன் தோள் பிடித்து நடக்க, ராதிகா ஆப்தே முகத்தின் பெருமிதம் என்று இசைக்கும், வரிகளுக்கும் இணையாக காட்சிப்படுத்துதலிலும் கவர்ந்திருக்கிறந்து இந்த மாயநதி. உமாதேவி எழுதிய இந்தப் பாடல்.. படம் வந்தபிறகு இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.. ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சந்தோஷ் நாராயணன்! ‘இது என் இசை’ என்று நிதானமாக, தெளிவாக இசையமைத்திருக்கிறார் கபாலியில். இந்தப் பாடல்பற்றிப் பேச்சு சில நாட்களாகவே எல்லா பக்கமும் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் எழுதிய பாடலுக்கு, ரசிகர்கள் சொல்லும் அர்த்தம் அலாதியானது.

’மாயநதி இன்று மார்பில் வழியுதே’வுக்கு என்ன பொருள்னா, மாயநதின்னா கண்ணீர். ஆனந்தத்துல வர்ற கண்ணீர் கண்ணோட பக்கவாட்டில வந்து நேரா நெஞ்சுல விழும். அதுனாலதான் அப்டி எழுதிருக்காங்க’ என்று ஆரம்பித்து இவர்களாக சொல்லும் சில அர்த்தங்கள் அதகளம். ‘பக்கவாட்டுல வந்தாலும் கன்னத்துல விழாம எப்டி பாபா..?’ என்று கேட்கவும் முடியாதவண்ணம் இட்டுக்கட்டுவார்கள்.        

இன்னொரு நண்பன் சொன்னது கொஞ்சம் பொருந்தியது. ‘ராதிகா ஆப்தேவ பார்க்கறப்ப, அவங்க ஓன்னு அழுவாங்க. டக்னு ரஜினி கட்டிப்பிடிச்சுப்பார். ராதிகா ஆப்தே கண்ல நதிபோல வர்ற கண்ணீர், ரஜினி மார்புல வழியுதில்லையா.. அதான் அப்டி’

சபாஷ்டா. உனக்கொரு காஃபி வாங்கித்தர்றேன் என்று நினைத்துக் கொண்டு, எதற்கு இத்தனை வம்பு என்று பாடலாசிரியர் உமாதேவியையே கேட்டேன்.

’நெருப்புடா!’ தணிந்தபின்.. அலைபாயும் மாயநதி! #மகிழ்ச்சி #உமாதேவி

பாடலாசிரியர்: உமாதேவி (புகைப்படம்: சதிஷ் பெருமாள்)

‘மகிழ்ச்சி!’ என்று ஆரம்பித்தார். ‘ஒரு பாடல் பேசப்பட்டு, அதனுடைய வார்த்தைகள் எல்லாம் இவ்வளவு விவாதிக்கப்படுகிறதென்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது’ என்றவர் தொடர்ந்து பேசியதில் இருந்து..

‘பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி சார், நாயகியை சந்திக்கிறார். பரஸ்பரம் இருவருக்குமே, இன்னொருவர் உயிரோடு இருக்கிறார் என்பதே தெரியாது. இவ்வளவுதான் எனக்குச் சொல்லப்பட்டது.  சந்தோஷ் கொடுத்த மெட்டுக்கு, நானாக காட்சிப்படுத்திக் கொண்டு வரிகளை எழுதினேன். ‘இதெல்லாம் புரியாது’ என்றோ, ‘இதை மாற்றுங்கள்’ என்றோ ரஞ்சித், சந்தோஷ் இருவருமே சொல்லவில்லை. இருவருக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.

அவள் கண்ணில் நீர் வழிகிறது. நதிபோல பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் நதி அளவுக்கு கண்ணீர் பார்க்கமுடியுமா என்ன.. கானல் நீர் எப்படி தெரிந்து மறைகிறதோ.. அப்படியான மாயநதிதான் அந்தக் கண்ணீர்.

அடுத்தது... தாபதநிலை. கணவன் இல்லாமல் மனைவி வாடும் நிலைதான். தாபம் என்றால் ஏக்கம். அவ்வளவுதான். ஆனால் இன்றைக்கு இந்த வார்த்தை இத்தனை பேரால் பேசப்படுவது குறித்து மகிழ்வாகவே உணர்கிறேன்!’

”’நான் எனை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்’ என்று வருகிறதே. பிரிந்திருக்கும்போது உயிர்ப்பது என்றால் புரியவில்லையே.. ஒருவேளை ’நமக்குள் இருக்கும் பிரிவு, பிரிந்தபிறகுதான் உயிர்த்தேன் ’என்ற பொருளில்  ‘பிரிவின் பிரிவில்’ என்று எழுதினீர்களோ?’

கேட்டுவிட்டு சிரிக்கிறார். ‘நல்லாதான் இருக்கு. ஆனா பிரிவில் பிரிவில்தான். அதாவது பிரிஞ்சிருந்தும் உயிர்த்திருந்தேன் - என்னைக்காவது காண்போம்’ன்னு’ அப்டிங்கற பொருள்தான்.

’மெட்ராஸ்தான் உங்கள் முதல் படம். அதில் வர்ற ‘தாபப்பூவும் நான்தானே’ பாட்டில் ‘நதிவாழும் மீன்கூட ஓர்நாளில் கடலை சேர்ந்திடுமே.. மீனே கடலாக அழைக்கின்றேன்’ அப்டின்னு ஒரு வரி வருது.  இதுலயும் ‘நீர்வழியே மீன்களைப் போல் என் உறவை நானிழந்தேன்’ன்னு ஒரு வரி வருது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கறதா பார்க்கறேன்..’

’உண்மைதான். அதுல காதலியோட கோணத்துல எழுதிருந்தேன். இதுல வேற பொருள். கூட்டமா போறப்ப, சில மீன்கள் நீர் போற போக்குல போய்ட்டாலும், ஒரு நாள் ஒன்று சேரும். அந்த அர்த்தம்தான் இதுல. ஆனா தண்ணிலதான் இது நடக்குதுங்கறதால, ‘பிரிந்தாலும் உயிரோடதான் இருக்கும்’ங்கறதை குறிப்பிடத்தான் இதை எடுத்துகிட்டேன்’

“’வலி தீர்க்கும் வலியாய்’. மறுபடி அதே சந்தேகம். வலி எப்படி வலியைத் தீர்க்கும்..

‘சிம்பிளா சொல்லணும்னா காய்ச்சல்னா ஊசி போட்டுக்கறீங்கள்ல.. அப்படி வெச்சுக்கலாம். வாழ்க்கைல பல விஷயங்கள்ல, ஒரு வலி இன்னொரு வலியை மறக்கடிச்சுடும்’

”அருமை. அந்த வாஞ்சை தரவா, வாஞ்சை தர, வா-ன்னும் ஒலிப்பது சிறப்பு. சரி..  மணலூறும் மழையாய்...?’

“மணல்ல மழை கொட்டறப்போ ரெண்டும் சேர்ந்து, ஒண்ணுக்கொண்ணு விட்டுக்குடுக்காமத்தான் பயணிக்கும். ஒன்றோடொன்று கலந்துன்னு சொல்லலாம். அதான்!’

’வாழ்த்துகள்! இந்தப் பாட்டுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கு?’

‘ரஜினி சார், கபாலி படத்தைப் பத்தி சொன்னதா சொன்னாங்களே.. கைய விரிச்சு..  ‘அப்ப்ப்ப்ப்டி இருக்கு’ன்னு. எனக்கும் அப்டித்தான் இருக்கு. ஊர்ல, கிராமத்துல பாக்கறவங்க எல்லாம் நீ எழுதினதான்னு கேட்கறாங்க. நிறைய அழைப்புகள். வார்த்தைகளைப் பாராட்றாங்க. மறுபடியும் ரஞ்சித், சந்தோஷ் ரெண்டு பேருக்குமே நன்றியும் அன்பும் சொல்ல கடமைப்பட்டிருக்கேன்’

’வீரத்துறந்தரா பற்றி..”

‘முதலில் வீரத்துறந்தரா-ன்னு எழுதறது தப்பு. நானும் ஒண்ணு ரெண்டு இடத்துல பார்த்தேன். வீர துரந்தரா என்பதுதான் சரி.

‘ஓ.. வீர துரந்தரா பற்றி?”

ஒரு டானுக்கான பாடல். எனக்கும் கபிலனுக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் இதைத்தான் ரஞ்சித் சொன்னார். கபிலன் உலகம் ஒருவனுக்கான்னு அவர் ஸ்டைலிலும், அருண்ராஜா ‘நெருப்புடா நெருங்குடா’ன்னு அவர் ஸ்டைலிலும் எழுத, நான் வீர துரந்தரா’ என்றெழுதினேன். இது புரியுமா அப்டின்னெல்லாம் சொல்லாம அப்டியே ஏத்துகிட்டாங்க. சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் பாடலை, தனக்குப் பிடித்த பாடலா சொன்னப்ப மகிழ்ச்சியா இருந்தது. வீர துரந்தரா என்றால் வீராதி வீரன் என்று பொருள்’

’மாயநதியும், வீர துரந்தராவும் என்னுடைய ஆறாவது, ஏழாவது பாடல்கள். அடுத்தடுத்து ஐந்தாறு படங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். இலக்கியத்தை ஜனரஞ்சகமான சினிமாவில்  சேர்க்கும்போது கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது. இன்னும் அதிக பொறுப்பைக் கொடுக்கிறது’ என்று முடித்தார் உமாதேவி.

-’பரிசல்’ கிருஷ்ணா

பாடல் வரிகளோடு.. பாடலைக் கேளுங்கள்!

பாடல் வரிகள்:-

ஆண்: நெஞ்சமெல்லாம்  வண்ணம்  பல  வண்ணம்  ஆகுதே
கண்கள்  எல்லாம்  இன்பம்  கூடி  கண்ணீர்  ஆகுதே

பெண்: நான்  உனை  காணும்  வரையில்  தாபத  நிலையே
தேசங்கள்  திரிந்தேன்  தனியே  தனியே

ஆண்: ஆயிரம்  கோடி  முறை  நான்  தினம்  இறந்தேன்
நான்  என்னை  உயிர்த்தேன்  பிரிவில்  பிரிவில்

ஆண்: மாய  நதி  இன்று
மார்பில்  வழியுதே
தூய  நரையிலும்
காதல்  மலருதே

மாய  நதி  இன்று
மார்பில்  வழியுதே
தூய  நரையிலும்
காதல்  மலருதே

ஆண்: நீர்  வழியே  மீன்களைப்  போல்
என்  உறவை  நானிழந்தேன்
நீ  இருந்தும்  நீ  இருந்தும்
ஒரு  துறவை  நானடைந்தேன்

ஒளி  பூக்கும்  இருளே
வாழ்வின்  பொருளாகி
வலி தீர்க்கும் வலியாய்
வாஞ்சை  தரவா

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

யானை  பலமிங்கே
சேரும்  உறவில்
போன  வழியிலே
வாழ்க்கை  திரும்புதே ..

பெண்: தேசமெல்லாம்  ஆளுகின்ற
ஒரு  படையை  நான் அடைந்தேன்
காலம் எனும் வீரனிடம்
என்  கொடியை நான்  இழந்தேன்

மணலூறும்   மழையாய்
மடிமீது  விழ வா வா
அணை மீறும் புனலாய்
மார் சாய்ந்து அழ வா

ஆண்: மாய  நதி  இன்று
மார்பில்  வழியுதே
தூய நரையிலும்
காதல்  மலருதே

பெண்:  யானை பலமிங்கே
சேரும் உறவிலே
போன வழியிலே
வாழ்க்கை  திரும்புதே....

வரிகள்: உமாதேவி
குரல்கள்: அனந்து, பிரதீப், ஸ்வேதா மோகன்
இசை: சந்தோஷ் நாராயணன்

.