Published:Updated:

விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி! 'ரேனிகுண்டா' தீப்பெட்டி கணேசன்!

விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி! 'ரேனிகுண்டா' தீப்பெட்டி கணேசன்!
விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி! 'ரேனிகுண்டா' தீப்பெட்டி கணேசன்!
'ரேனிகுண்டா' படம் மூலம் அறிமுகம் ஆனவர் தீப்பெட்டி கணேசன். பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் தற்போது சென்னை கே.கே.நகர் ‘கவிஞர் கிச்சன்’ என்கிற உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது சமீபத்தில் அவருடைய மேனேஜர், 'அதிகமாக குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதால்தான் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை' ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார்.இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை  உண்டாக்கியிருந்தது.
உங்கள பத்திச் சொல்லுங்க?
நான் சினிமாவுக்கு வந்து ஒன்பது வருஷம் ஆச்சு. என்னோட உண்மையான பெயர் கார்த்திக். என்னை சினிமாவுல பர்சனலா எல்லாரும்  இப்படித்தான் கூப்பிடுவாங்க. 'ரேனிகுண்டா' படம் ஷூட்டிங் எல்லாம் முடிஞ்ச உடனே, இயக்குநர் பன்னீர் செல்வம் சார், 'உன்கிட்ட என்ன சொன்னாலும் உடனே கற்பூரம் பத்திக்கிற மாதிரி உடனே செய்ய ஆரம்பிச்சுடுற. இனிமே உன் பேர்  'தீப்பெட்டி கணேசன்' என பெயர் மாத்தி விட்டார். அப்போல இருந்து எல்லோருக்கும் நான் தீப்பெட்டி கணேசன்.
நிறைய படங்கள் நடிச்சிருக்கீங்க? இந்த ரோல்ல தான் நடிக்கணும் என்கிற எண்ணம் எதும் உண்டா ?
நான் 'ரேனிகுண்டா' படத்திற்கு பிறகு, 'தென்மேற்கு  பருவக்காற்று', 'பில்லா 2', 'ஆயிரம் விளக்கு', 'ஆயுத போராட்டம்', என கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் பண்ணியிருக்கேன். எனக்கு அந்த மாதிரி கேரக்டர்ல பண்ணல. இப்படி பண்ணல என்கிற எந்த எதிர்பார்ப்பும் இல்ல. எனக்கு கிடைச்ச ரோலை நான் இப்போ வரைக்கும் நிறைவாத்தான் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் எல்லாருமே, 'ஒரு ஷாட் என்ன சொல்றோமோ, அதை விடாம  அப்படியே பிடிச்சிடுறீங்க. உங்க கிட்ட நிறைய நடிப்ப ஈஸியா வாங்க முடியுதுனு சொல்றாங்க'. இதை விட பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்லனு நினைக்கிறேன். 
நீங்க அதிகமா சம்பளம் கேட்டதாலதான் நிறைய பட வாய்ப்புகள் மிஸ் ஆகிடுச்சுனு பேச்சு அடிபடுதே?
சமீபத்தில் என்னோட மேனேஜரை வேலையைவிட்டுத்  தூக்கிட்டேன். எனக்கு தெரிஞ்ச இயக்குநர் ஒருத்தர், 'உங்க மேனேஜர் தான் நிறைய சம்பளம் கேட்டார். அதனாலதான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியல' என சொன்னார். அதுக்கப்புறம்தான் புரிஞ்சுது. உடனே மேனேஜரை நீக்கிட்டேன். இப்போ யார் வேண்டுமானாலும், எப்போ வேண்டுமானாலும் என்னை நேரடியா தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்கு பெரிய சப்போர்ட் இல்லனு சொல்றாங்களே?
ஊர்ல அம்மா, அப்பா என எல்லா சொந்தங்களும் இருக்காங்க. என் அண்ணன் சொந்தமா கம்பெனி வச்சிருக்கான். ஏன் நானே சொந்தமா நிலம் வாங்கி போட்டிருக்கேன். இத்தனை வருஷமா சம்பாதிச்ச பணத்த சரியான வழியிலதான் செலவு செய்திட்டு இருக்கேன். எனக்கு சமையல் வேலை  பார்க்கிறது ரொம்ப பிடிக்கும். இந்த வேலை எனக்கு ரொம்ப நிறைவா இருக்கு. இங்க வர்ற வருவாயை வச்சு நண்பர்களுக்கு உதவி செஞ்சிட்டிருக்கேன். மாசத்தில் பத்து நாள், பதினைந்து நாள் பிசியாகத்தான் இருக்கேன். மேனேஜர் இருந்தபோது இருந்ததை விட இப்போ சந்தோஷமா இருக்கேன். 
நீங்க குடிச்சிட்டு ஷூட்டிங் போறதாலதான் உங்க பட வாய்ப்பு கிடைக்கலனு சொல்றாங்களே?
நான் பட்ஜெட் போட்டு வாழ்றவன். மிச்சப் பணத்தை என் குழந்தை பேர்லயும், மனைவி பேர்லயும் நான் சம்பாதிக்கும் பணத்தை போட்டு வச்சிட்டு இருக்கேன். அப்படி நான் குடிச்சிட்டு ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு போறவனா இருந்தா எனக்கு எப்படி இத்தனை படங்கள்ள வாய்ப்பு கொடுப்பாங்க. என்னோட மேனேஜரை வேலையை விட்டு தூக்கினதுக்குப் பிறகுதான், நான் குடிச்சிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றதா சொல்லியிருக்கார். அதுக்குப் பிறகும்கூட நான் அவருக்கு பல முறை போன் செய்து இதை பற்றி விசாரிக்க முயற்சி பண்ணேன். ஆனா, அவர் இப்போ  வரைக்கும் போன் எடுக்கவே இல்ல. 
சினிமாவுல நடிச்சிட்டு இருக்கிற நீங்க இப்படி ஹோட்டல்ல வேலைப் பார்த்துட்டு இருக்கிறதை மக்கள் ஏத்துப்பாங்கனு நினைக்கிறீங்களா?
மக்கள் இதை எப்படி ஏத்துப்பாங்கனு தெரியல. சமையல் என்பது ஒரு கலை. எனக்கு பிடித்தமான விஷயமும் கூட. இந்த கடை திறப்பு விழாவுல இருந்து நாலு நாள் இங்கதான் இருந்து வேலை பார்த்தேன். இப்போ வரைக்கும் ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல இங்கதான் வேலை பார்த்துட்டு இருக்கேன். கடை திறப்பு விழாவுக்கு நான் எடுத்த படத்தை, நானேதான் ஃபேஸ்புக்ல பதிவிட்டேன். அந்தப் படத்தை எடுத்து, இணையத்துல 'குடியால் வாய்ப்பு இழந்த தீப்பெட்டி கணேசன்' என எழுத ஆரம்பிச்சுட்டாங்க. சிரிப்புதான் வந்தது.
சும்மா ஒருத்தன் வீட்ல உட்கார்ந்திருக்கறதுக்கும், உழைச்சு, சம்பாதிச்சு நண்பர்களுக்கு உதவியா இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பொதுவா, பிச்சை எடுக்கக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, திருடக்கூடாது, நம்பிக்கைத்  துரோகம் பண்ணக்கூடாது. மத்தபடி உழைச்சு சாப்பிடலாம்ல. அதை நான் சந்தோஷமா செய்யுறேன். 
அப்போ நீங்களேதான் எல்லா இடத்திலும் வாய்ப்பு தேடிட்டு இருக்கீங்களா?
இதுவரைக்கும் ஒரு ஆபீஸ் படி ஏறி வாய்ப்புக் கேட்டது கிடையாது.  விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி. அவருக்கு சிபாரிசே பிடிக்காது. அவரா பார்த்துதான் ஒவ்வொரு படத்துக்கும் என்னைக் கூப்பிடுறாரு. கடவுளா பார்த்துதான் எனக்கு ஒவ்வொரு வாய்ப்பையும் கொடுத்துட்டு இருக்கார். நிறைய பேர் கெட்டப்ப  மாத்துனு சொல்லிட்டே இருக்காங்க. கூடிய சீக்கிரத்துல உங்கள வித்தியாசமான கெட்டப்ல மீட் பண்றேன்.
சென்னை, கே.கே நகரில் உள்ள 'கவிஞர் கிச்சன்' உரிமையாளர் ஜெயம்கொண்டானிடம் பேசினோம். இவர், 'திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர். 
''நான் 'ரேனிகுண்டா' படத்துல பாடல் எழுதறதுக்கான வாய்ப்புக் கேட்டு பன்னீர் செல்வம் சாரைப் பார்க்க ஷூட்டிங் ஸ்பாட் போயிருந்தேன். அப்படித்தான், 'தீப்பெட்டி' கணேசன் எனக்கு பழக்கமானார். நன்றாகப்  பழகக் கூடியவர், நல்ல நண்பரும் கூட. இந்த  கவிஞர் கிச்சனுக்கு பரோட்டா சூரி, முனீஸ்காந்த் என பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வந்து, அவரைப் பார்த்துட்டுப் போறாங்க. இப்படியும் பல வாய்ப்புகள் அவருக்குக்  கிடைக்குது. சினிமாவுக்கான லட்சிய பயணத்தோட வர்ற இளைஞர்களுக்கு, கண்டிப்பா இங்க இடம் உண்டு.
-வே. கிருஷ்ணவேணி
படங்கள்: ஏ.எம். வசீம் இஸ்மாயில் (மாணவ புகைப்படக்காரர்)