Published:Updated:

நம்ம 'மைக்' மோகனுக்கு ஹாப்பி பர்த்டே!

நம்ம 'மைக்' மோகனுக்கு ஹாப்பி பர்த்டே!
நம்ம 'மைக்' மோகனுக்கு ஹாப்பி பர்த்டே!

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர் மோகன். 80-களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இவர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் 1956-ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இவர் மைக் பிடித்துப் பாட்டுப் பாடி நடித்தாலே அந்தப் படம் நிச்சயம் வெள்ளி விழாதான் என்ற நம்பிக்கை நிலவியதால் இவருக்கு வெள்ளி விழா நாயகன் என்றும் மைக் மோகன் என்றும் பெயர் வந்தது.

ஹோட்டல் முதலாளியின் மகனான இவர் ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். கேமரா கவிஞர் இயக்குநர் பாலு மகேந்திராவின் பார்வை இவர்மேல் பட்டதின் பலனாக கமல் கதாநாயகனாக நடித்த 'கோகிலா' என்ற கன்னடத் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கையைத் துவக்கினார். அந்தப் படமும் கமர்சியலாக பெரிய வெற்றி பெற்றது. மோகன் நடித்த கதாபாத்திரமும் அதிக அளவில் பேசப்பட்டது. இதன் காரணமாகத் தொடக்க காலத்தில் 'கோகிலா' மோகன் என்றே இவர் அறியப்பட்டார்.

இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் அதே ஆண்டு வெளியான 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சில திரையரங்குகளில் இத்திரைப்படம் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது. கதாநாயகனாகத் தமிழில் தனது தடத்தை வலுவாகப் பதிக்க ஆரம்பித்தது இந்தப் படத்தில் இருந்துதான்.

'கிளிஞ்சல்கள்' திரைப்படம் மூலம் தனது இரண்டாவது வெற்றியைக் கொடுத்தார் மோகன். இத்திரைப்படமும் 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. ஆனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நிலைத்த இடத்தைப் பிடித்தது 'பயணங்கள் முடிவதில்லை' படம்தான்.  ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய முதல் படமான இதில்தான் மோகன் முதன்முதலாக மைக்கைப் பிடித்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் இன்றளவிலும் ரசிக்கப்படுகின்றன.

'உதயகீதம்', 'இதயகோயில்', 'கோபுரங்கள் சாய்வதில்லை', தென்றலே என்னைத் தொடு' 'இளமைக் காலங்கள்', 'விதி', 'ஓசை', 'நூறாவது நாள்' என மோகனின் திரை வாழ்க்கை அதன்பிறகு ஏறுமுகம்தான். அத்தனையும் வெள்ளிவிழாத் திரைப்படங்கள். 1984-ம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் மொத்தம் 19 திரைப்படங்கள் வெளியாகின. ஒரே நாளில் வெளியான இவரது மூன்று திரைப்படங்களும் வெள்ளிவிழா கண்டன. 80-களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துவந்த கமல்-ரஜினி புயலுக்கு மத்தியில் இருவருக்கும் போட்டியாக வெள்ளிவிழாத் திரைப்படங்களைத் தந்தவர் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகைகளின் மனதில் கனவுக் கண்ணனாகத் திகழ்ந்தார். 'இதயகோயில்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம், மோகன், இளையராஜா கூட்டணி மீண்டும் இணைந்து 1986-ல் வெளியான 'மெளன ராகம்' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மோகனின் சிரிப்பு அழுகையென்றும் அழுதால் சிரிக்கிறார் என்றெல்லாம் கலாய்க்கப்பட்டாலும் இவருக்குண்டான பெண் ரசிகைகள் போல் எந்த நடிகருக்கும் அமைந்ததில்லை எனலாம். ரொமான்ஸ்லாம் அதிகம் பழகாமலே ரொமான்டிக் நாயகன் பெயர் எடுத்தவர். காரணம் இவர் தேர்ந்தெடுத்த படங்கள் எல்லாமே இளமை நிரம்பிய காதல் கதைகளே. அமலா, நதியா என்று அப்போதைய கனவுக் கன்னிகளின் சினிமா நாயகன் மோகன் மட்டுமாகத்தான் இருந்தார். 

காலம் தாண்டி நிற்கும் இளையராஜாவின் இசையும், 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவருக்குப் பின்னணிக் குரல் தந்த எஸ்.என்.சுரேந்தர் ஆகியோரும் இவரது திரைவெற்றிக்கு முக்கியக் காரணம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து நடித்த 'சுட்டபழம்' திரைப்படம் போதிய வெற்றி பெறவில்லை. நூறாவது நாளில் வில்லனாக மிரட்டிய இவர், பின்னாளில் வில்லன் கதாபாத்திர வாய்ப்பு வந்தபோதெல்லாம் நடிக்க மறுத்துவிட்டார். மீண்டும் தற்போது நாயகனாக கன்னடத்தில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். தமிழ் சினிமா இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டத் துவங்கியுள்ளார். நன்றிக்கடன் மறவாமல் சென்னை வெள்ளத்தின்போது ஓடோடி வந்து உதவியதில் இவரும் ஒருவர்.

இன்னிசைப் பாடல்கள் மூலமாக இன்றளவும் தமிழ் ரசிகர்களின் வீடுகளில் வலம்வரும் மோகனுக்கு, எல்லோர் மனதிலும் என்றும் இடமுண்டு. பிறந்தநாள் வாழ்த்துகள்!

- கருப்பு

அடுத்த கட்டுரைக்கு